`ஆன்லைனிலேயே இனி புகார்களைப் பதிவு செய்யலாம்!’ - இந்து சமய அறநிலையத்துறை | New web app introduced by tamilnadu HR&CE

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (17/11/2018)

கடைசி தொடர்பு:18:50 (17/11/2018)

`ஆன்லைனிலேயே இனி புகார்களைப் பதிவு செய்யலாம்!’ - இந்து சமய அறநிலையத்துறை

மிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 40,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்களின் நிர்வாகம் மற்றும் புகார்கள் தொடர்பாகப் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை புதிய இணையச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மின்னணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசிய தகவலியல் மையம் மூலம் செயல்படும் வலைதள செயலி (http://gdp.tn.gov.in/hrce) உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை

இனி, கோயில்கள், அவற்றின் நிர்வாகம், முறைகேடுகள் என்று இந்துசமய அறநிலையத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். புகார்களைச் சமர்பிக்கும்போது மனுதாரருக்கும் உடனடியாக குறுஞ்செய்தி மூலம் ஒப்புகைச் சீட்டு அனுப்பி வைக்கப்படும். மனுக்களின் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் மனுதாரர் இணையத்தில் அறிந்துகொள்ள முடியும். 

இதுமட்டுமல்லாமல் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 40,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களின் அடிப்படைத் தகவல்கள், அவற்றின் நிலங்களுக்கான புவிசார் தகவல் அமைப்பு மற்றும் கோயில்களின் அமைவிடங்களை மென்பொருள் மூலமாக வரைபடத்துடன் இணையத்தில் கண்டறிய முடியும். இந்த இணையதள செயலியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்துப் பேசுகையில், ``கோயில்கள் தொடர்பாகப் பொதுமக்கள் பல்வேறு புகார்களை அளித்து வருகின்றனர். அவற்றின் மீதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் இந்தச் செயலியை உருவாக்கியிருக்கிறோம். இனிமேல் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைவாகவும் உரிய முறையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close