சபரிமலைக்கு மாலை அணியப் போகிறீர்களா? கண்டிப்பாக இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்? வீரமணிராஜு | Veeramaniraju explains what are the rules and regulations to wear ThulasiMani mala for Sabarimala.

வெளியிடப்பட்ட நேரம்: 11:14 (18/11/2018)

கடைசி தொடர்பு:12:28 (18/11/2018)

சபரிமலைக்கு மாலை அணியப் போகிறீர்களா? கண்டிப்பாக இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்? வீரமணிராஜு

சபரிமலைக்கு மாலை அணியப் போகிறீர்களா? கண்டிப்பாக இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்? வீரமணிராஜு

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே ஐயப்பப் பக்தர்களுக்கு மனத்தில் பக்திப்பெருக்குடன் உற்சாகமும் மகிழ்ச்சியும் தொற்றிக்கொள்ளும். சபரிமலைக்கு மண்டல விரதம் இருந்து, யாத்திரை செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், நெறிமுறைகள் என்ன என்பது பற்றி ஐயப்பப் பக்தரும் ஆன்மிகப் பாடகருமான வீரமணிராஜுவிடம் பேசினோம். 

வீரமணிராஜு

 

''ஐப்பசியில் மழை பொழிந்து மண்ணெல்லாம் குளிர்ந்து கிடக்க, கார்த்திகை பிறக்கும் முதல் நாளின் அதிகாலையில் குளித்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து மண்டல விரதம் இருப்பது, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புத ஆன்மிக அனுபவம். 
சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணியும் பலரும் அவரவர் போக்கில் மாலை அணிந்து, ஐயப்பனை தரிசிக்கச் செல்கிறார்கள். ஆனால் அப்படிச் செல்லக்கூடாது.

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும். ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள். சிலர் 56 முதல் 60 நாள்கள் வரையிலும்கூட அதாவது கார்த்திகை முதல் நாளிலிருந்து ஜனவரி 15 -ம் தேதி மகர ஜோதி வரை விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதை விடுத்து, திடுதிப்பென நண்பர்கள் அழைக்கிறார்கள், அதிகாரி அழைக்கிறார் என மாலை அணிந்து ஒரு வாரத்தில், மூன்று நாள்கள் மட்டும் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

சுவாமி ஐய்யப்பன்

மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்ல முடிவுசெய்தால் தனது தாய், தந்தை மற்றும் குருவிடம் ஒரு வாரம் முன்பாகவே தகவல் தெரிவித்து, அனுமதி வாங்கிய பிறகே மாலை அணிய வேண்டும். குறிப்பாகக் கோயிலிலோ, தாயார் முன்னிலையிலோ மாலை அணிவது நல்லது.

மாலையைத் தேர்வு செய்யும்போது துளசி மணி மாலைதான் ஐயப்பனுக்கு உகந்தது. அவரவர் வசதிக்கேற்ப துளசி மணி மாலையை வாங்கி அணியலாம். செம்பிலோ வெள்ளியிலோ,  மணிகளைக் கட்டினால் நம் ஆயுள் முழுவதுக்கும் அந்த மாலையைப் பயன்படுத்தலாம். 

 

ஐய்யப்பப் பக்தர்கள்

பொதுவாக ஒவ்வொரு முறை சபரிமலை செல்லும்போதும் ஒரே மாலையை அணிந்து செல்வது சிறப்பு.  அந்த மாலை தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும்போது அது  ராஜ முத்திரையைப் போல மகத்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு, ஐயப்பனை மலர்களால் அலங்கரித்து தூப தீபங்களைக் காண்பிக்கவேண்டும். இதைத் தொடர்ந்து 108 முறை சுவாமி ஐயப்பனின் சரண கோஷத்தைச் சொல்லி பூஜை செய்யவேண்டும்.

விரதம் இருப்பதைப் பொறுத்த வரை சைவ உணவை அவரவரின் உடலுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம். 
ஒரேயடியாக  சாப்பிடாமல் இருந்து உடலை வருத்திக் கொள்ளத்தேவையில்லை. இச்சையுடன் கிடைப்பதையெல்லாம் சாப்பிடவும் கூடாது. புலனடக்கத்தில் நாம் எப்படி இருக்கிறோம். நம் மனம் எந்த அளவு வலிமையுடன் இருக்கிறதென்பதை மாலை அணிந்திருக்கும்போது நாம் அறிந்து கொள்ளலாம்.  

தற்கால வாழ்க்கைமுறைச் சூழலில் பலரும் தன் சொந்த ஊரில் இருந்து புலம் பெயர்ந்து நகரம் சார்ந்த வாழ்க்கையை வாழ்கின்றோம். அலுவலகப் பணிகளின் காரணமாக மாலையில் சிலரால் உரிய நேரத்தில் வீடு திரும்பமுடியாது. அதனால் எப்போது வீட்டுக்கு வருகிறோமோ அப்போது நாம் குளித்து பூஜை செய்தால் போதுமானது.

சபரிமலை ஐய்யப்பன்

 

 

கன்னிசாமிகள் கண்டிப்பாக கறுப்பு வண்ண உடையையே அணிய வேண்டும். காலில் காலணிகள் இல்லாமல் நடந்து பழக வேண்டும். எப்போதும் மனம், வாக்கு, செயல் மூன்றிலும் ஐயப்பனை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் சுடு சொற்கள் சொல்லக்கூடாது.

சக ஐயப்பப் பக்தர்களின் பூஜைகள், கோயில் பஜனைகள் ஆகியவற்றில் முடிந்த அளவு கலந்து கொள்வதும். அதேபோல் குழுவின் சார்பாக நடைபெறும் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவற்றில் கலந்துகொண்டு தங்களால் இயன்றவற்றைச் செய்யவும் வேண்டும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் தங்களின் சக்தியை மீறி கடன் வாங்கியோ, நகைகளை அடகு வைத்தோ செலவு செய்யக்கூடாது. அடுத்த ஆண்டு செல்வதற்கு உரிய செலவுக்கு இப்போதே உண்டியல் ஒன்றை வாங்கிச் சேமித்தால், எந்தவித சிரமுமில்லாமல் சபரிமலைக்குப் போய் வரலாம்.

மனம், உடல் இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொண்டு ஐயப்பனை வேண்டினால் நிச்சயம் நம் எண்ணம் பலிக்கும். ஏனென்றால் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக ஐயப்பன் திகழ்கிறார்'' என்று சபரிமலைக்குச் செல்லவேண்டியவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளை விளக்கமாகக் கூறினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close