வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (21/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (21/11/2018)

சபரிமலையில் கடும் நெருக்கடி! - பக்தர்கள் அவதி

'சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததிலிருந்தே சபரிமலைப் பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்குக் கேரள போலீஸார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கிறார்கள். 

சபரிமலை

இது தொடர்பான வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், ‘சபரிமலையில் பக்தர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது'. அங்கு 144 தடை விதிக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தையும் கேட்டிருக்கிறது. ‘அனைத்து வயதுப் பெண்களையும் கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தக் கேரள அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதற்குப் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்குச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கு முன்பு ஐப்பசி மாத பூஜையின்போது நடந்த போராட்டங்களைக் கருத்தில்கொண்டு, கார்த்திகை மாத மண்டல கால பூஜையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பெருமழையால் ஏற்பட்ட சேதத்தினால் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அங்கிருந்து அரசுப் பேருந்தில்தான் பயணிக்க வேண்டும். பம்பையிலிருந்தும் மலையேறுவதற்கும் பக்தர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தாலும் 18-ம் படியேறி பக்தர்கள் வடக்கு வாசல் வழியே சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால், இப்போது போலீஸார் இதற்குக் கூட அனுமதிக்கவில்லை. இரவு நேரத்தில் பொது இடங்களில் தங்கியிருக்கும் பக்தர்களை போலீஸார் விரட்டுகின்றனர். அங்கு அவர்களின் நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

இந்த நடவடிக்கைகளை எதிர்த்து சில அமைப்புகள் சந்நிதானத்தில் போராட்டம் நடத்தினர். போலீஸார் நடவடிக்கையைக் கேரள உயர் நீதிமன்றம் கண்டித்து, 144 தடை உத்தரவுக்கான காரணத்தையும் கேட்டிருக்கிறது. ‘144 தடை உத்தரவை போலீஸார் திரும்பப் பெற வேண்டும்’ என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. போலீஸாரின் கடும் கட்டுப்பாடுகளால் பக்தர்கள் பலர் எருமேலியுடன் திரும்பி வரும் அவலமும் அரங்கேறியிருக்கிறது.

விரைவில் சபரிமலையில் இயல்புநிலை திரும்பி அனைத்து பக்தர்களும் ஐயப்பனின் அருள் பெற வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க