வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (22/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (22/11/2018)

நாளை திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படுகிறது!

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை (23.11.2018) ஏற்றப்படுகிறது. அதிகாலை 4 மணிக்குக் கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபமும், தொடர்ந்து மலை 6 மணிக்கு மலை மேல் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்களால் நிறைந்து வருகிறது திருவண்ணாமலை.

மகாதீபம்

இக் கோயிலில் கார்த்திகை மாதத் தீபத் திருவிழா 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோயிலில் விநாயகர், சந்திரசேகரர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி, சண்டிகேசுவர சுவாமிகளின் வீதியுலாக்கள் நடைபெற்றன. 20-ம் தேதி பஞ்சரத வீதி உலாவும்  நடைபெற்றது. அதையடுத்து கார்த்திகை மாதத் திருவிழாவான மகா தீபம் ஏற்றும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது..

மகாதீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணிய சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் பஞ்ச மூர்த்திகள் சந்நிதி முன்பாக எழுந்தருளி காட்சி தருவார்கள். மாலை ஆறு மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீசுவரர், சந்நிதியிலிருந்து ஆடியபடியே வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார்.

அர்த்த நாரீசுவரர் காட்சிதரும் வேளையில் சுவாமி சந்நிதிக்கு முன்பு உள்ள அகண்ட தீபம் ஏற்றப்படும். இந்த அகண்ட தீபத்தைப் பார்த்துத்தான் 2668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.

இதை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் குவிவார்கள் என்பதால், பாதுகாப்புக்காக ஏராளமான  போலீஸார் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகாதீபம் ஏற்றிய பிறகு இரவு தங்க ரிஷப வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க