வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (23/11/2018)

கடைசி தொடர்பு:10:52 (23/11/2018)

விளக்கேற்றிப் பிரார்த்தித்தால் வினைகள் தீரும்... காஞ்சி விளக்கொளிப் பெருமாள் அற்புதம்!

பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டபோது, சிவபெருமான் அக்னி மலையாய் எழுந்தருளிய தலம் திருவண்ணாமலை. ஆனால், பிரம்மதேவரின் யாகத்தைக் காப்பாற்ற மகாவிஷ்ணு ஜோதிப்பிழம்பாய் தோன்றிய தலத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

விளக்கேற்றிப் பிரார்த்தித்தால் வினைகள் தீரும்... காஞ்சி விளக்கொளிப் பெருமாள் அற்புதம்!

தீபம் என்றாலே எல்லோருக்கும் திருவண்ணாமலை திருத்தலம்தான் நினைவுக்கு வரும். பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டபோது, சிவபெருமான் அக்னி மலையாய் எழுந்தருளிய தலம் திருவண்ணாமலை என்பது நமக்குத் தெரியும். ஆனால், பிரம்மதேவரின் யாகத்தைக் காப்பாற்ற மகாவிஷ்ணு ஜோதிப்பிழம்பாய் தோன்றிய தலத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 காஞ்சிபுரம் பெருமாள் கோயில்

முக்தி தரும் நகரங்கள் ஏழில் முக்கியமான நகரமாம் காஞ்சியில்தான் மகாவிஷ்ணுவின் அந்த அருளாடல் நிகழ்ந்தது. 
`கோயில் நகரம்' என்று சொல்லும்படி திரும்பும் திசையெங்கும் கோயில்களே காணப்படும் காஞ்சி நகரத்தில் ஶ்ரீவைஷ்ணவ அடியார்களால் போற்றிக் கொண்டாடப்படும் திருத்தலம் தூப்புல் திருத்தலம். இந்தத் தலத்தில்தான் வைஷ்ணவ ஆசார்யரான ஶ்ரீவேதாந்த தேசிகன் அவதரித்தார். 

பகவான் மகாவிஷ்ணுவுக்கு எண்ணற்ற திருப்பெயர்கள் இருந்தாலும், உபநிஷதங்களில் ஜோதி வடிவமாகப் போற்றப் பெறுகிறார்.

வேதங்கள் போற்றுவது உண்மைதான் என்பதை உலகத்தவர்க்கு உணர்த்துவது போல், மகாவிஷ்ணு ஜோதி வடிவில் தோன்றிய தலம்தான் தூப்புல் திருத்தலம். அதற்குக் காரணமாக ஒரு புராண நிகழ்ச்சி சொல்லப்பட்டிருக்கிறது.

கோயில் பிராகாரம்

முற்காலத்தில் பிரம்மதேவர் மகாவிஷ்ணுவைக் குறித்து ஒரு யாகம் செய்ய நினைத்தார். அந்த யாகத்தைப் பூவுலகின் புனித நகரமாகிய காஞ்சியில் செய்யவும் விரும்பினார். யாகத்தை மனைவி உடன் இருக்க நடத்தவேண்டும் என்பது நியதி. ஆனால், அப்போது சரஸ்வதி அருகில் இல்லாத காரணத்தால், காயத்ரி தேவியை உடன் வைத்துக்கொண்டு யாகத்தைத் தொடர்ந்தார். 

தன்னை மதிக்காமல் பிரம்மதேவர் யாகம் செய்வது பற்றிக் கேள்விப்பட்ட சரஸ்வதி, பெரும் வெள்ளமெனப் பெருக்கெடுத்து யாகபூமியை அழிக்க ஆவேசத்துடன் வந்தாள். அதன் காரணமாக அந்த இடம் முழுவதும் இருள் சூழ்ந்தது. பிரம்மதேவர் மகாவிஷ்ணுவைப் பிரார்த்திக்க, பகவான் ஜோதி வடிவினராகத் தோன்றி யாகம் தடையின்றி நடைபெறச் செய்தார். அதைக் கண்டு சினம் கொண்ட சரஸ்வதி அக்னி வடிவில் மாயநலன் என்ற அரக்கனை ஏவி யாகபூமியை அழிக்கும்படி அனுப்பினாள். ஜோதி வடிவினராக இருந்த மகாவிஷ்ணு, அக்னி வடிவில் வந்த அரக்கனை ஒரு தீபம் போல் ஏந்தி யாகபூமியில் மேலும் வெளிச்சம் ஏற்படச் செய்தார். பிரம்மதேவரின் யாகமும் தடையின்றி நடைபெற்றது.

ஜோதிவடிவாய் தோன்றிய பெருமாளுக்கு விளக்கொளிப் பெருமாள் என்றும் தீபப்பிரகாசர் என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டதாகத் தலவரலாறு.

இந்தத் தலத்துக்குத் தூப்புல் என்ற பெயர் ஏற்பட்டதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் தர்ப்பைப் புல் அடர்ந்திருந்த இந்தப் பகுதியில் மகாவிஷ்ணு தோன்றியதால் தூப்புல் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

விளக்கொளி பெருமாள் ஶ்ரீதேவி, பூமிபிராட்டி ஆகியோருடன் மேற்கு நோக்கி திருக்காட்சி

ஆலயத்தில் விளக்கொளிப் பெருமாள் ஶ்ரீதேவி, பூமிபிராட்டி ஆகியோருடன் மேற்கு நோக்கித் திருக்காட்சி அருள்கிறார். தாயார் மரகதவல்லி நாச்சியார் தனிச் சந்நிதியில் சேவை சாதிக்கிறார். மேலும் ஆண்டாள், கருடாழ்வார், விஷ்வக்சேனர், பொய்கையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார், ராமாநுஜர், ஆளவந்தார் ஆகியோருக்கும் சந்நிதி அமைந்திருக்கிறது. கோயிலுக்கு அருகிலேயே ஶ்ரீவேதாந்த தேசிகரின் அவதாரத் தலம் அமைந்திருக்கிறது. தலத்தின் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம்; விமானம் ஶ்ரீகர விமானம். திருமங்கையாழ்வார் இந்தத் தலத்துக்கு வருகை தந்து மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

ஶ்ரீவேதாந்த தேசிகரின் புதல்வர் வரதாசார்யர் என்பவர் இந்தக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.

மகாவிஷ்ணு

சிறப்பு பூஜைகள்:

தீப ஒளி தொடர்பான திருவிழாக்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகத் திகழ்கிறது. தீபாவளி, திருக்கார்த்திகை தினங்களில் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து விளக்குகள் ஏற்றி, பெருமாளை வழிபட்டுச் செல்கின்றனர். பெருமாளின் அவதார நட்சத்திரமான ரேவதி மற்றும் வேதாந்ததேசிகரின் திருநட்சத்திரமான திருவோணம் ஆகிய தினங்களில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

சிறப்புப் பரிகார பூஜை:

பெருமாள் இந்தத் தலத்தில் விளக்கொளிப் பெருமாள் என்ற திருப்பெயர் கொண்டிருப்பதால், திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து, 108, 18, 12 என்ற எண்ணிக்கையில் நெய்தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். அதன் மூலம் தங்கள் பிரச்னைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்