வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (25/11/2018)

கடைசி தொடர்பு:16:15 (25/11/2018)

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் என்ன பலன் கிடைக்கும்? #Astrology

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் என்ன பலன் கிடைக்கும்? #Astrology

'வானத்தில் இருக்கும் பறவைகளுக்குக் கூட கூடுகள் இருக்கின்றன. ஆனால், நமக்கென்று ஒரு  சொந்த வீடு இல்லையே' எனும் ஆதங்கம், சொந்த வீடு அமையாதவர்கள் அனைவரின் மனதில் இருக்கவே செய்கிறது. அதிலும் குறிப்பாக, 2007-ம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த 'ரியல் எஸ்டேட் பூம்' எனும் பொருளாதாரச் சந்தையில் நிகழ்ந்த மாற்றம்  பலரையும் சொந்தவீடு வாங்க முடியாமல் செய்துவிட்டது. ஆனாலும், வீடு வாங்க வேண்டும் என்ற விருப்பம் மட்டும் மனதை விட்டு நீங்காமலே இருக்கிறது. ஜோதிடப்படி சொந்தவீடு பாக்கியம் சுக்கிரன் வலுவாக இருந்தால் அமையும், அப்படி அமையாமல் போனால், அதற்கு என்ன வகையான பரிகாரம் என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். 

சுக்கிரன்

''வேத ஜோதிடத்தின்படி, ஒரு மனிதன் வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய சுகங்களையும், சொகுசான வசதிகளையும் தரக்கூடிய கிரகமாகச் சுக்கிரன் குறிப்பிடப்படுகிறார். நல்ல சொகுசான வீடு அமைவதற்குச் சுக்கிரனே காரகத்துவம் பெறுகிறார். 

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு வசதியான சொந்த வீடு அமையும் பாக்கியம் கிடைக்கும். 

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையைப் பொறுத்து, அந்த வீடு எப்படிப்பட்ட வீடு, தனி வீடா, ஓர் அறை கொண்ட வீடா, அல்லது இரண்டு, மூன்று அறைகள் கொண்ட விசாலமான இல்லமா என்பதையும் நம்மால் கணிக்க முடியும். 

ஜோதிடத்தில் எப்போதுமே இணை அமைப்புகள் உண்டு.  அதாவது ஒரே ஒரு விதி அல்லது ஒரே ஒரு கிரகத்தின் நிலையை மட்டும் வைத்து அதற்குரிய பலனைச் சொல்லி விட முடியாது. ஆதிபத்தியம், காரகத் துவம் என இருவேறு நிலைகளும் சொல்லப்படுகின்றன. இப்போது மேலே சொல்லப்பட்ட தகவல் சுக்கிரனின் காரகத்துவத்தை வைத்துச் சொல்லப்பட்டது.

டைனிங் ஹால்

ஆதிபத்தியம் என்பது ஒருவரின் ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து எண்ணினால் வரும் நான்காம் வீட்டைக் குறிப்பதாகும்.

வீடு, வாகனம், தாயார், சுகம் போன்றவற்றைத் தரக் கூடிய வீடு நான்காம் வீடாகும். சொந்த வீட்டை ஒருவருக்குத் தரக்கூடிய இந்த நான்காம் பாவம் என்று சொல்லப்படக்கூடிய நான்காம் வீடும், அதன் அதிபதியும் சுபமாகவும் , சுக்கிரனும் நன்றாக இருக்கும்போது ஒருவருக்கு அருமையான சொந்த வீடு அமைகின்றது.

ஜோதிடத்தின் அடிப்படையே காரணத்துக்குள் காரணத்தை விளக்குவது தான். சுக்கிரனும், நான்காம் வீட்டு அதிபதியும், நான்காம் வீடும் வலுவாக இருந்தால் சொந்த வீடு அமையத்  துணை புரியும். இவை தவிர, ஜாதகருக்கு நல்ல தசாபுக்தியும்  நடக்கவேண்டும்.

இப்போதெல்லாம் யாரும் கையில் முழுப்பணத்தையும் வைத்துக் கொண்டு வீடு வாங்குவதோ, கட்டுவதோ இல்லை. பெரும்பாலும் வீட்டுக்கடன் பெற்றுத்தான் வீடு வாங்குகிறார்கள். வீடு வாங்கிய பின் அதன் தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல், 'ஏண்டா... வீடு வாங்கினோம்' என்ற நிலை சிலருக்கு ஏற்படுவதும் உண்டு. அதற்கும் இந்த தசா, புக்தி அமைப்புகள்தான் காரணம்.

சுக்கிரனும், நான்காம் அதிபதியும், நான்காம் வீடும் பலவீனமாக இருக்கும் நிலையில், ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் சொந்த வீடு அமையத் தடை இருந்து கொண்டே இருக்க வாய்ப்பு இருக்கிறது. இங்கே பலவீனம் என்பது நீசம், அஸ்தமனம், கிரகணம், பாபக்கிரகப் பார்வை, பாபர்களுடன்  இணைந்திருப்பது, பாப கிரகங்கள் இருப்பது ஆகிய  நிலைகளைக் குறிக்கும். 

திருவரங்கம் ரெங்கநாதர்

ஜாதகத்தில் சுக்கிரனும், நான்காம் வீட்டு அதிபதியும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாப கிரகங்களுடன் மிக நெருக்கமாக இணைந்து, நான்காம் வீட்டில் இருந்தால், ஒருவருக்குச் சொந்தவீடு அமைவதில் தடைகள் இருந்துகொண்டே இருக்கும். 

ஜோதிடப்படி நான்காம் அதிபதி, மற்றும் சுக்கிரனை சுபத்துவ வலுவாகக் கொண்டவர்களே சொந்த வீடு அமைந்த பின்னரும் அதில் சுகமாக வாழக்கூடிய பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள்'' என்று கூறியவர் பரிகாரங்களையும் பட்டியலிட்டார்.

பலவீனமான சுக்கிர அமைப்பை உடையவர்கள் சொந்தவீட்டை பெறுவதற்கு உரியப் பரிகாரங்கள்:  ஆதித்ய குருஜி

* சுக்கிரன் சொந்த வீட்டைத் தர இயலாத நிலையில் வலுவிழந்து இருக்கும்போது, உங்களின் ஜன்ம நட்சத்திரம் நாளில் சுக்கிரனுக்கான  கோயிலாகக் குறிப்பிடப்படும் கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சென்று வழிபட்டு வந்தால் சொந்த வீடு அமையும். அப்படி வழிபடச்செல்லும்போது  கோயிலுக்குள் இரண்டரை மணி நேரம் இருப்பது நல்லது.  

* திருவரங்கன் அருள் புரியும் ஸ்ரீரங்கத்தில் ஒரு வெள்ளிக்கிழமை வழிபட வேண்டும். குறைந்தது ஒரு முகூர்த்தம் எனக் கூறப்படும் நாற்பத்தி எட்டு நிமிடம் திருக்கோயிலின் உள்ளே இருக்கலாம். 

* சென்னைக்கு அருகில் இருப்பவர்களுக்கு, மாங்காட்டில் உள்ள அருள்மிகு வெள்ளீஸ்வரன் கோயில் கண்கண்ட சுக்கிர ஸ்தலம். இங்கே வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு, ஒரு நாழிகை எனப்படும் இருபத்தி நான்கு நிமிடம் கோயிலுக்குள் இருந்து விட்டு வந்தால் சுக்கிர பலம் கூடி சொந்த வீடு அமையும். 

* சென்னை திருமயிலையில் அமைந்திருக்கும் வெள்ளீஸ்வரன் ஆலயமும் பழைமையான சுக்கிர ஸ்தலம்தான். தமிழகம் முழுவதிலும் அமைந்துள்ள வெள்ளீஸ்வரன் எனும் திருநாமத்தை முதன்மையாகக் கொண்ட திருக்கோயில்கள் அனைத்துமே சுக்கிரனுக்கு உரியப் பரிகார ஸ்தலங்கள்தான். அங்குச் சென்று வருவது சிறந்த பரிகாரமாக அமையும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்