வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (29/11/2018)

கடைசி தொடர்பு:12:38 (29/11/2018)

`50,000 டெரகோட்டா'...! கஜா பாதித்தவர்களுக்குக் கஜேந்திரனின் அன்பு!

கஜா புயலின் காரணமாகப் பல கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு அகல்விளக்குகள் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இவரிடம் உதவி கேட்டு வந்தபோது, 50,000 விளக்குகளை இலவசமாகவே வழங்கியிருக்கிறார்.

`50,000 டெரகோட்டா'...! கஜா பாதித்தவர்களுக்குக் கஜேந்திரனின் அன்பு!

ல்லிலும் மண்ணிலும் கலைவண்ணம் கண்ட பூமி நம்முடைய பூமி. அந்தக் கலைகளை வளர்த்ததில் நம் ஆன்மிகத்துக்கும் பெரும் பங்கு உண்டு. கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகளுக்கு மண் கொண்டு செய்யப்படும் கலைப் பொருள்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. குறிப்பாகக் கார்த்திகை தீபத்தன்று ஏற்றும் மண் அகல் விளக்குகளுக்குத் தனியிடம் இருக்கவே செய்கிறது. 

டெரகோட்டா விளக்குகள்

என்னதான் மெழுகுவத்திகளும், மின்சாரத்தில் எரியும் விளக்குகளும் வந்துவிட்டாலும்கூட, மண்ணினால் செய்யப்படும் அகல் விளக்குகளின் மகத்துவமே தனிதான். கார்த்திகை தீபத்தில் முக்கியத்துவம் பெறும் மண் விளக்குகளில்கூட நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் மண்விளக்குகளைச் செய்து அசத்துகிறார் திண்டுக்கல் மாவட்டம் நொச்சியோடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த `கலை டெரகோட்டா' கஜேந்திரன்.   

கார்த்திகை தீபத்தன்று மட்டும்தான் அகல் விளக்குகளுக்குத் தேவை இருக்கும். மற்ற நேரங்களில் அந்தந்த பண்டிகைகளுக்கு ஏற்ப கிருஷ்ணர், விநாயகர், துர்கா மற்றும் கொலுவில் வைப்பதற்கான பொம்மைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

டெரகோட்டா

கிராமங்களில் உள்ள கோயில்களுக்கும் அது போக ஊர்களில் வைக்கக் கூடிய சிலைகளும் தயாரிப்பதால் ஊரில் உள்ள மக்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர். வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அவர்களின் மனதுக்குப் பிடிக்கும் படியாக அழகாகவும்,நேர்த்தியாகவும் சிலைகளை வடிவமைத்துத் தருகின்றனர். 

தமிழகம் முழுவதும் மண் சார்ந்த இந்தக் கலைத்தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர்தான் கஜேந்திரன். அவருடைய பணிகளில் மனைவி உதவி செய்து வருகிறார். பண்டிகைக் காலங்களுக்குத் தேவையான சிலைகள் செய்து தருவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்பவும் ஓரடி உயரம் முதல் 6 அடி உயரம் வரையிலான சிலைகளைச் செய்து தருகிறார். கடந்த 22 வருடங்களாக அவர்கள் இந்தத் தொழிலை ஆத்மார்த்தமாகச் செய்து வருகின்றனர்.

கார்த்திகை விளக்குகள்

கணவர் மற்றும் மனைவி இருவருமே தமிழக அரசின் விருது பெற்றவர்கள். கஜேந்திரனிடம் பேசினோம்...

``என்னுடைய இந்த உயர்ந்த நிலைமைக்குக் காரணம் என் குருநாதர் வி.கே.முனுசாமிதான். பாண்டிச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த அவர்தான் எனக்கு இந்தக் கலையைக் கற்பித்தார். என்னைப் போலவே பலருக்கும் இந்தக் கலையைக் கற்பித்திருக்கிறார். என் குருநாதர் மாநில விருதுகள், யுனெஸ்கோ விருது ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். தமிழகம் முழுவதும் சுமார் 5,000 குடும்பங்கள் தற்போது இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். நானும் 20 பேருக்கு இந்தக் கலையை எந்தக் கட்டணமும் வாங்காமல் கற்றுத் தருகிறேன். இதற்குக் காரணம் என் குருநாதர்தான். அவர் இந்தக் கலையைக் கற்பிக்க கட்டணம் எதுவும் வாங்கியதில்லை. அவரைப் போலவே நானும் இந்தக் கலையைக் கற்றுத் தர கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. சுட்ட செம்மண் கொண்டு செய்யப்படும் இந்த டெரகோட்டா சிலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஜெர்மன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் இங்கு வருகிறார்கள். அப்படி வருபவர்கள் இந்தக் கலையில் ஆர்வம் கொண்டு கற்றுக்கொண்டு செல்கிறார்கள். விரும்பி அழைக்கும் பள்ளிகளில் கூட இந்தக் கலையைக் கற்பித்து வருகிறோம். கற்ற கலையை மற்றவர்களுக்குப் பிரதிபலன் பாராமல் கற்றுத் தருவதில் இருக்கும் சுகமே அலாதிதான். தற்போது கஜா புயலினால் மின்சாரம் தடைப்பட்டிருப்பதுடன், தொழிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது'' என்று கூறும் கஜேந்திரன், 1996-ம் வருடம் தமிழக அரசு வழங்கும் `தமிழ்நாடு மாநில பூம்புகார் விருது' பெற்றிருக்கிறார். இவருடைய மனைவி வாசுகி இதே விருதை 2005-ம் வருடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்குகள்

கஜா புயலின் கடுமையான தாக்குதலில் இவருடைய தொழில் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட, இவர் செய்திருக்கும் ஒரு காரியம் நமக்குச் சிலிர்ப்பூட்டுகிறது. கஜா புயலின் காரணமாகப் பல கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். என்னதான் மற்ற மாவட்டங்களிலிருந்து மெழுகுவத்திகள் வந்தாலும், அவை சில மணிக்கெல்லாம் அணைந்துவிடுகின்றன. அவர்களுக்கு அகல் விளக்குகள் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இவரிடம் உதவி கேட்டு வந்தபோது, 50,000 விளக்குகளை இலவசமாகவே வழங்கியிருக்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்