மகா காலபைரவ ஜயந்தி... ஐந்து விதங்களில் வழிபட்டு, அருள் பெறலாம்!  | Maha kaal bhairav jayanti

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:10:58 (30/11/2018)

மகா காலபைரவ ஜயந்தி... ஐந்து விதங்களில் வழிபட்டு, அருள் பெறலாம்! 

இன்று சொர்ணாகர்ஷண பைரவரின் ஆலயத்துக்குச் சென்று, அவரின் மூலமந்திரத்தை ஜெபித்தால், செல்வ வளம் பெருகும்.

கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி அன்று சிவனிடமிருந்து அவருடைய அம்சமாக வெளிப்பட்டவர் மகா காலபைரவர். இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 14-ம் தேதி வெள்ளிக்கிழமையான (30.11.2018) இன்று, மகா கால பைரவ அஷ்டமி வருகிறது. இன்றைய தினம் முழுவதும் `ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நம:’ என்ற மந்திரத்தை ஜெபித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாவங்களும் நம்மைவிட்டு ஓடிவிடும் என்பது நம்பிக்கை!

மகா கால பைரவர்

 சிவன்,  ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை. தேவைப்படும்போது, தனது அம்சத்தின் ஒரு பகுதியை வெளிப்படுத்துவார். அப்படி, அவருடைய அம்சமாகத் தோன்றியவர்தான் மகா கால பைரவர்.

மகா கால பைரவரை ஐந்து முறைகளில் வழிபடலாம். 

* பிரபஞ்சத்தின் மையமான திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது, மகா காலபைரவப் பெருமானின் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

* தமிழகத்திலுள்ள மகா கால பைரவப் பெருமானின் எட்டுப் படை வீடுகளில், (அட்ட வீரட்டானத் தலங்கள்) ஏதாவது ஒரு படைவீட்டில் குறைந்தது ஒரு முகூர்த்த நேரம் வரை அவருடைய  நாமத்தை ஜெபிக்கலாம்.

அட்ட வீரட்ட தலங்கள்

* பூமியிலுள்ள அனைத்து மகா காலபைரவப் பெருமானின் ஆலயங்களுக்கும் அருளாற்றலை வழங்குபவர், அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர். இவருடைய ஆலயம், கும்பகோணம் அருகிலுள்ள சோழபுரத்தில் உள்ளது. இங்கு, சிவனுக்கும் அம்பாளுக்கும் இன்று திருமணம் நடக்கும். இந்த வைபவத்தின் இறுதியில் நடக்கும் கல்யாண விருந்தில் பங்கேற்று, அன்பளிப்பு வழங்கலாம். இதன்மூலம் நமக்கு புண்ணியம் கிடைக்கும். நீண்ட கால ஏக்கங்கள் தீரும். 

* இன்று, சொர்ணாகர்ஷண பைரவரின் ஆலயத்துக்குச் சென்று, அவரின் மூலமந்திரத்தை  ஜெபித்தால், செல்வ வளம் பெருகும்.

* வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள், இன்று காலை 7.30 முதல் 9 மணிக்குள்  `ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நம’ என்ற மந்திரத்தை ஜெபித்து, மகா கால பைரவப் பெருமானின் அருளைப் பெறலாம். 

 


[X] Close

[X] Close