வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (30/11/2018)

கடைசி தொடர்பு:09:59 (30/11/2018)

வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும்? பூஜையறை டிப்ஸ்... #Pooja

எந்த வீடாக இருந்தாலும் குடியிருக்கும் வீட்டையே கோயிலாக நினைத்து, நாம் ஒவ்வொருவரும் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக்கொள்வோம்.

வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும்? பூஜையறை டிப்ஸ்...  #Pooja

தினமும் இறைவனை வழிபட்ட பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடர்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். குடியிருப்பது சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, குடியிருக்கும் வீட்டையே கோயிலாக நினைத்து, நாம் ஒவ்வொருவரும் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக்கொள்வோம். சிலருடைய வீட்டில் பூஜையறை தனியாக இருக்கும். சில வீடுகளில் சுவருடன் சேர்ந்தார்போல் இருக்கும் அலமாரியே பூஜை அறையாக இருக்கும். பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சூழலும் அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாக அமைகிறது.

பூஜையறை

நம்மில் பெரும்பாலானோர் தினமும் பூஜை அறையில் இறைவனை வழிபட்டாலும்கூட, வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைத்திருக்கிறோமா என்பதும், முறைப்படி பூஜைகள் செய்கிறோமா என்பதும் மிகவும் முக்கியம். வீடுகளில் எப்படி பூஜை செய்ய வேண்டும், அதன் முறைகள் என்ன என்பது பற்றி சாஸ்திர நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

வாஸ்து முறைப்படி வீடுகளில் பூஜையறையை எப்படி அமைப்பது என்று விளக்குகிறார் ஜோதிடரும், வாஸ்து  நிபுணருமான ரெங்கநாதன்...

``கடவுளை அனைத்து இடங்களிலும் வழிபடலாம் என்றாலும் குடியிருக்கும் வீட்டில் உள்ள பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். தனி வீடாக இருந்தாலும் சரி, அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் சரி, வீட்டில் பூஜை அறையை ஈசான்ய மூலையில் (வட கிழக்கே), கிழக்கு நோக்கி இருக்கும்படி சுவாமிப் படங்கள் இருப்பதைப் போன்று அமைக்க வேண்டும். பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு நோக்கி பிரகாசிக்க வேண்டும். ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கே பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம். பூஜை அறையைப் புனிதமான இடமாக பாவிக்கவேண்டுமே தவிர, தேவையற்ற பொருள்களைப் போட்டு வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வது தெய்வ சாந்நித்யத்தைக் குறைத்துவிடும். 

வீடானது கிழக்கு தாழ்ந்து, தெற்கும் மேற்கும் உயர்ந்து இருக்க வேண்டும். அறிவியல் பூர்வமாக நம் ஊரில் காற்றோட்டத் திசையானது கிழக்கு மற்றும் வடக்கிலிருந்தே வீசும். அதனால் காற்று கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து தெற்கு மற்றும் மேற்கு வழியே வெளியேற வேண்டும். இந்தக் காற்றோட்டத் திசை மாறினால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்படும். இந்தக் காற்றோட்டத்துக்குத் தகுந்த மாதிரிதான் வீடுகளின் அமைப்பு இருக்க வேண்டும். வீட்டின் ஈசான்ய மூலையில் பூஜை அறை இருந்தால் வீசும் காற்றில் பூஜை அறையின் சாம்பிராணி மற்றும் ஊதுவத்தியின் மணம் வீடு முழுவதும் பரவி, வீடு முழுவதையும் தெய்வ சாந்நித்யம் நிறைந்ததாகச் செய்துவிடும்” என்று தெரிவித்தார்.

 

 

 

 

வீட்டில் பூஜை செய்வது எப்படி என்பது பற்றி விளக்குகிறார் திருவரங்கம் ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் ஹரீஷ் பட்டர்...

``நாம் வசிக்கும் இல்லங்களில் ஈசான்ய மூலையில் பூஜை அறை இருப்பதன் சிறப்பு, பூஜை அறையானது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். பூஜை அறையில் சூரிய உதயத்தின்போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜை செய்ய வேண்டும். காலையில் அன்னம், பால் படைப்பது நல்லது. மாலையில் விளக்கு ஏற்றி பழங்கள் படைப்பது சிறப்பு. பூஜை அறையில் இருக்கும் விக்கிரகமானது குடும்பத் தலைவரின் கட்டை விரல் அளவுக்குத்தான் இருக்க வேண்டும். அதைவிடப் பெரிய சிலைகளை வீட்டில் வைத்து பூஜை செய்வது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆகாது. ஏனெனில், அந்த விக்கிரகத்தின் சக்தியை குடும்பத்தில் வசிப்பவர்களால் தாங்க முடியாது. பூஜை அறையில் சாளகிராமம் வைத்து வழிபடலாம். சாளகிராமம் என்பது நேபாளத்திலிருக்கும் கண்டகி நதியில் கிடைக்கும் ஒரு வகை கல். வஜ்ரம் என்ற வண்டு துளைத்து சக்கரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தும். இந்தச் சக்கரம் விஷ்ணுவின் அம்சமாகப் பாகவதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனால் அதை வைத்தும் வழிபடலாம்.  பூஜை அறை விக்கிரகத்தையும் சாளகிராமத்தையும் பெண்கள் தொடக்கூடாது. மற்றபடி அனைத்து வகையான பூஜைகளையும் செய்யலாம். பூஜை அறைக்குள் முன்னோர்களின் படங்கள் இருக்கக்கூடாது. பூஜை அறையில் குலதெய்வங்களின் படங்கள் நிச்சயம் இருக்க வேண்டும். சிலர், சில குறிப்பிட்ட சுவாமிப் படங்களை வைத்து வழிபடக் கூடாது என்று கூறுவார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. புனிதமான இடத்தில் அனைத்து வகையான தெய்வங்களின் படங்களையும் வைத்து வழிபடலாம். எந்த இஷ்ட தெய்வத்தையும் பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம். 

பூஜை

பூஜையின்போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. இரும்பு யமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது. வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். 
ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த நாள் அதைக் கூரையில் ஊற்றிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது. பூஜையின்போது மணியோசை எழுப்புவதும்கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான். மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது. தினமும் மணியோசை எழுப்பி பூஜை செய்பவர்களின் வீடுகளில் தெய்வ கடாட்சம் நிரம்பி, ஆரோக்கியமும் சகல சௌபாக்கியங்களும் பெருகும்'' என்றார்.

பூஜை

வீட்டில் பூஜை செய்யும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை...

* ஒவ்வொரு நாள் பூஜை செய்யும்போதும் புதிதாகப் பறித்த மலர்களையே பயன்படுத்த வேண்டும். வாசனைச் சாம்பிராணிகள், ஊதுவத்திகள் ஆகியவற்றை ஏற்றி வைத்த பிறகு பூஜையைத் தொடங்குவது நல்லது. 

* பூஜை அறையில் ஏற்றப்படும் அகல் விளக்கு மற்றும் ஊதுவத்திகள் பூஜை செய்யும் நபரின் வலது பக்கமாக இருக்க வேண்டும்.

* பூஜைக்குப் பயன்படுத்தும் பொருள்களைப் பூஜை அறையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் வேறு இடங்களில் வைக்கக் கூடாது.

* பூஜை அறையில் தேவையற்ற பொருள்களை வைக்கக் கூடாது.

* சிலரது வீடுகளில் படுக்கையறையிலும், சமையலறையிலும் பூஜை அறை இருக்கும். பூஜை நடைபெறாத சமயங்களில் அந்த  அறையைத் திரையிட்டு மறைத்துவிட வேண்டும்.

* பூஜை அறைச் சுவருக்கு அடுத்தாற்போல் கழிவறையும், குளியலறையும் இருக்கக் கூடாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்