வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (02/12/2018)

வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் 8-ம் தேதி கடைஞாயிறு விழா - சிம்மக்குளம் திறப்பு

கார்த்திகை கடைஞாயிறை முன்னிட்டு வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் வரும் 8-ம் தேதி நள்ளிரவு சிம்மக்குளம் திறக்கப்படுகிறது.

மார்க்கபந்தீஸ்வரர்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோயில் இருக்கிறது. புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்றான இக்கோயிலில் உள்ள சிம்ம தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றைச் செய்யலாம். 

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழாவையொட்டி வரும் 8-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறக்கப்படுகிறது. 9-ம் தேதி காலை பிரம்மக்குளத்தில் தீர்த்தவாரி, பாலகனுக்கு உபநயன சிவதீட்சை, அதன்பிறகு திருமாட வீதி உலாக்கள் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சிம்மக் குளத்தில் நீராடுவார்கள் என்பதால் கடை ஞாயிறு விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.