திருவெண்காட்டில் 1008 சங்கு அபிஷேகம்! | 1008 Shankh Abhishekam in Thiruvenkadu

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:15:20 (04/12/2018)

திருவெண்காட்டில் 1008 சங்கு அபிஷேகம்!

நாகை மாவட்டம் திருவெண்காட்டில் அமைந்துள்ள சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில், அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரருக்கு கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

சங்கு

இந்த ஆலயத்தில், சிவபெருமானின்  வடிவங்களில் ஒன்றான அகோர மூர்த்தி வடிவத்தில் காட்சிதருகிறார். அவரை ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டால், எதிரிகளின் தொல்லை இருக்காது என்பது ஐதீகம். நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் இது. இங்கு, புதன் பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. புதன்கிழமைகளில் இவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

கோயில்

சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில், அருளும் சுவேதாரண்யேஸ்வரருக்கு, கார்த்திகை மூன்றாவது திங்கள்கிழமையை முன்னிட்டு, இரவு சோமவார பூஜைகள் நடைபெற்றன. குறிப்பாக 1,008 சங்குகளைக்கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. 1,008 வெண்சங்குகளில் வாசனைத் திரவியங்கள், மூலிகைகள் கலந்த நீர் நிரப்பப்பட்டு, அவற்றை சிவலிங்க வடிவத்தில் அமைத்து, அதன் எதிரில் மூலிகைத் திரவியங்களைக்கொண்டு யாகம் நடைபெற்றது. பூர்ணாஹுதியுடன் யாகம் நிறைவுபெற்ற பிறகு, சிவபெருமானுக்கு சங்குகளில் நிரப்பப்பட்டு, மந்திர சக்தியால் புனிதம் பெற்ற தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரங்களுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டு அருள்பெற்றனர்.