வலதுபுறம் 14-ம் நூற்றாண்டு; இடதுபுறம் 13-ம் நூற்றாண்டு! - போரில் இறந்த வீரர்களின் நடுகற்கள் கண்டுபிடிப்பு | Invent of dead soldiers monument!

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (04/12/2018)

கடைசி தொடர்பு:16:50 (04/12/2018)

வலதுபுறம் 14-ம் நூற்றாண்டு; இடதுபுறம் 13-ம் நூற்றாண்டு! - போரில் இறந்த வீரர்களின் நடுகற்கள் கண்டுபிடிப்பு

போரில் இறந்த வீரர்களின் இரண்டு நடுகற்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தேவியாக்குறிச்சி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளன. 

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் ஆத்தூர் வட்டம், தேவியாக்குறிச்சி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது ஒரு விளைநிலம் அருகே அடுத்தடுத்து இரண்டு நடுகற்களைக் கண்டுபிடித்தனர்.

போரில் இறந்த வீரர்களின் இரண்டு நடுகற்கள்

இதுபற்றி அவர்கள் கூறுகையில், ``12-ம் நூற்றாண்டில் வாணகோவரையர்கள் ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு மகத நாட்டை ஆண்டு வந்தனர். தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறகழூரின் ஒரு பகுதியாக இருந்தது. ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த பெண்களுக்குத் தேவியர் குறிச்சியில் நிலம் தானமாகத்  தரப்பட்டுள்ளது. வாணகோவரையர்கள் ஆட்சியின்போது ஹெய்சாளர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள் ஆகியோருடன் அடிக்கடி போரில் ஈடுபட்டனர். அந்தப் போர்களில் ஈடுபட்டு இறந்த வீரர்கள் நினைவாக வைக்கப்பட்ட  நடுகற்கள்தான் இவை. 

நடுகற்கள்

வலதுபுறம் காணப்படும் நடுகல் மிகவும் அலங்காரமான நிலையில் இருக்கிறது. இது 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இடது புறம் காணப்படும் மற்றொரு நடுகல் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது அதிக அலங்காரத்துடன் இல்லாமல் எளிமையாகக் காட்சியளிக்கிறது. போர் வீரன் போருக்குச் செல்லும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நடுகற்களும் போரில் இறந்த வீரர்களுக்காக எடுக்கப்பட்ட வீரக்கற்கள் ஆகும். அலங்காரத்துடன் இருக்கும் வீரக்கல் படைத் தலைவனுக்காகவோ அல்லது தளபதிக்காகவோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம். எளிமையாகக் காணப்படும் நடுகல் சாதாரண போர் வீரனுக்கு எடுக்கப்பட்டதாக இருக்கலாம்" என்றனர்.

தேவியாக்குறிச்சி கிராமத்தில் போரில் இறந்த வீரர்களின் நடுகற்கள் கண்டுபிடிப்பு!

இந்தப் பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் ஆறகழூர் வெங்கடேசன், “இந்தப் பகுதியில் ஏராளமான நடுகற்கள் ஆவணப்படுத்தப்படாமல் காடுகளிலும், வயல்வெளிகளிலும் காணப்படுகின்றன. அவற்றை ஆவணப்படுத்தி, பாதுகாக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க