வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (05/12/2018)

கடைசி தொடர்பு:18:18 (05/12/2018)

'இங்கேயே வருவாள் கங்கை!' திருவிசநல்லூர் சிவபெருமானின் அருளாடல்

கார்த்திகை அமாவாசை நாளன்று, ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் உள்ள கிணற்றில் பொங்கிவரும் கங்கை நீரில் புனித நீராடல் நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 6) நடைபெற உள்ளதால் திருவிசநல்லூரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

'இங்கேயே வருவாள் கங்கை!' திருவிசநல்லூர் சிவபெருமானின் அருளாடல்

காசிக்குச் சென்று கங்கையில் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். ஆனால், போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும்கூட எல்லோராலும் காசிக்குச் சென்று கங்கையில் நீராட முடியாது. அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தைப் போக்கும் விதமாக, ஈசனின் அருளால் குறிப்பிட்ட சில நாள்களில் குறிப்பிட்ட ஆறு, கிணறு என்று சில நீர்நிலைகளில் கங்கை சங்கமிக்கும் அற்புதம் நம் புண்ணிய பூமியில் நிகழ்ந்திருக்கவே செய்திருக்கிறது.

ஶ்ரீதர அய்யாவாள்

அப்படி வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு கிணற்றில் கங்கை சங்கமித்த அற்புதம் நிகழ்ந்த தலம்தான் திருவிசநல்லூர் திருத்தலம்.
அதன் பின்னணியில் மகான் ஒருவரின் சிவபக்தியின் மகத்துவமும் இருக்கவே செய்கிறது. அந்த மகான் ஸ்ரீதர அய்யாவாள்.

மைசூர் சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீதர அய்யாவாள், சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஒருகட்டத்தில் இறைவனைத் தரிசிப்பதிலும் சிவநாமம் உச்சரிப்பதிலும் தம்மை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டார். எனவே, பதவியைத் துறந்துவிட்டு நாடெங்கும் சிவதரிசனம் செய்யப் புறப்பட்டுவிட்டார். 

தமிழகத்தில் காவிரியின் வடக்கு, தெற்குக் கரைகளில் அமைந்திருக்கும் சிவாலயங்களைத் தரிசித்து வணங்கியபடி திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்துக்கு வந்தவர், அங்கிருந்த மகாலிங்க சுவாமியின் திவ்விய தரிசனம் கண்டு பரவசத்தில் ஆழ்ந்துவிட்டார். தினமும் மகாலிங்க சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், அருகிலுள்ள திருவிசநல்லூரில் ஒரு வீட்டில் தங்கிவிட்டார்.

இந்நிலையில் அவருடைய தந்தையார் லிங்கார்யர் மறைந்த திதி வந்தது. அந்தணர்களை அழைத்து தந்தைக்குச் செய்ய வேண்டிய சிராத்தத்தைச் செய்வதில் வெகு சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தார். அவருடைய சிவபக்தியின் மேன்மையை உலகத்தவர்க்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்போல் வேடம் பூண்டு, காவிரியில் நீராடிவிட்டு வந்துகொண்டிருந்த அய்யாவாளின் எதிரில் வந்தார்.

``ஐயா பசிக்கிறது... ஏதேனும் உணவு தாருங்கள்’’ என்று யாசகம் கேட்டார். அவர் மீது இரக்கம் கொண்ட ஸ்ரீதர அய்யாவாள் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது திதி கொடுக்கும் அந்தணர்களுக்கு அளிக்கப்படும் சிராத்த உணவு மட்டுமே தயாராக இருந்தது. இதைத் திதி கொடுத்த பின்பு, வேதியர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதமுள்ள உணவை பசுவுக்குத் தர வேண்டும். ஆனால், இந்த நியதியை மீறி, அந்த உணவை ஏழைக்குத் தந்துவிட்டார் அய்யாவாள்.

கங்கை பொங்கிய கிணறு

இதனால் கோபம் அடைந்த அந்தணர்கள் வீட்டைவிட்டு வெளியேறியதுடன், ``அந்தணர் உணவை அடுத்தவருக்குக் கொடுத்ததால் உனக்குத் தீட்டு ஏற்பட்டுவிட்டது. நீ காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, உனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக்கொண்டு வந்தால்தான் திதி கொடுப்போம்'' என்று கூறிவிட்டனர். `ஒரே நாளில் எப்படி காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, திரும்ப முடியும்?’ என்று கலங்கிய ஸ்ரீதர அய்யாவாள் வருத்தத்தோடு அசதியில் உறங்கிவிட்டார் அப்போது கனவில் சிவபெருமான் காட்சி கொடுத்து, ``உன் வீட்டுக் கிணற்றில் கங்கையைப் பிரவேசிக்க செய்வேன்’’ என்று கூறி மறைந்துவிட்டார்.

அன்று கார்த்திகை அமாவாசை. ஊரே கூடி கிணற்றடியில் இருக்க, அய்யாவாள் மனமுருகி கங்காஷ்டகம் பாடினார். அப்போது கங்கை நீர் ஆர்ப்பரித்துப் பொங்கி, வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது. இன்னும் சற்றுநேரம் போனால் ஊரே மூழ்கிவிடும் நிலை. அதைக் கண்ட அந்தணர்கள், தங்களை மன்னிக்கும்படியும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும்படியும் கேட்டுக்கொண்டனர். அய்யாவாளின் சிவ பக்தியின் மேன்மையைப் புரிந்துகொண்டதுடன், அய்யாவாளின் தந்தைக்குத் திதி நடத்திக் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது அய்யாவாள் மடத்திலுள்ள  கிணற்றில் கங்கை நீர் பொங்கி வருவதாக ஐதிகம். அப்போது அந்தக் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவதும், பக்திப் பரவசமாய் நடைபெற்று வருகிறது.

இதுபற்றி ஸ்ரீதர அய்யாவாள் மடத்து மேனேஜிங் டிரஸ்டியான ராம்ஜி என்றழைக்கப்படும் ராமநாதனிடம் பேசினோம்.

ராமநாதன்

``சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட  அய்யாவாள் மறையவில்லை. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரருடன் ஐக்கியமானார். அவரது சிவபக்தியையும் இறைப்பணிகளையும் போற்றும் விதத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாள் உற்சவம் நடத்துகிறோம். கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய இந்த விழா நாளை 6-ம் தேதி கார்த்திகை அமாவாசை நாளுடன் முடிவடையும். இந்த நாள்களில் சிறப்பு பூஜைகளும் பஜனைகளும் நடைபெறும். ராமாயண, மகாபாரத, பாகவத, நாம சங்கீர்த்தனம், சங்கீதக் கச்சேரிகள் வெகு விமரிசையாக நடைபெறும். நாளை சுமார் 20,000 பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடுவார்கள். இவர்களுக்குக் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அனைவருக்கும் அன்னதானமும் அளிக்கப்படும். மேற்படி உற்சவ நாள்களில், குடந்தை சங்கர மடத்திலிருந்து திருவிசநல்லூர் வந்து செல்ல வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. அய்யாவாளின் ஆசியைப் பெற பக்தர்கள் வரிசையில் வந்து நீராடி, ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அய்யாவாளின் சிவபக்தியின் மகிமை காரணமாக வருடத்தில் ஒருநாள் திருவிசநல்லூர் அய்யாவாள் மடத்தில் இருக்கும் கிணற்றில் கங்கை வரும் நாளில் நாமும் சென்று நீராடி புண்ணியம் பெறுவதோடு, அய்யாவாளின் அருளாசியும் பெறலாமே!

எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.


டிரெண்டிங் @ விகடன்