வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (08/12/2018)

கடைசி தொடர்பு:20:30 (08/12/2018)

களைகட்டும் வைகுண்ட ஏகாதசி திருவிழா! - முதல்பத்து நிகழ்ச்சி துவங்கியது

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம். 108 திவ்ய தேசங்கள் மற்றும் வைணவ தளங்களில் முதன்மையாக விளங்குகிறது.  இங்குள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வருடாவருடம் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

முதல்பத்து நிகழ்ச்சி

ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி. பொதுவாக வைகுண்ட ஏகாதசி திருவிழாவை பகற்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.

இதனையொட்டி நேற்று இரவு 7மணி அளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 7.45மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் அரையர்களின் அபிநயம், வியாக்கியானத்துடன் திருநெடுந்தாண்டகம் நடைபெற்றது. அப்போது அரையர்கள் திருநெடுந்தாண்டகம், மின்னுருவாய் பாசுரங்களை அபிநயத்துடன் பாடினார்கள்.

இன்று பகல் பத்து திருமொழியின் முதல் திருநாள் ஆகும். இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். இன்று நம்பெருமாள் நீளமுடி கொண்டை, வைர அபயஸ்தம், காசி மாலை, முத்து மாலையுடன் பக்தர்களுக்கு சேவைச் சாதித்தார். காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு, காலை 8.15 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அரையர் சேவை நடந்தது. அப்போது  அங்குத் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நம்பெருமாளைத் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம்

பகல் 1மணி முதல் 2 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்படும். பிற்பகல் 2மணி முதல் 3 மணி வரை திருப்பாவாடை கோஷ்டியும், 3 மணி முதல் 4மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை உபயகாரர்கள் மரியாதையுடன் பொது ஜனசேவை நடைபெறும் என்றும், மாலை 5.30மணி முதல் 6.30மணி வரை புறப்பாட்டுக்காக திரையிடப்படும். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இன்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை பூஜை நேரம் என்பதால் அனுமதி கிடையாது. மாலை 6.45 மணிக்கு மேல் 9 மணிவரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 9 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

ஸ்ரீரங்கம்

பகற்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் திருமொழி என்றும், ராப்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் திருவாய் மொழி என்றும் அழைக்கப்படுகிறது. பகற்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். ராப்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார். பகற்பத்தின் கடைசி நாளான வருகிற 17-ந்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார்.

ஸ்ரீரங்கம்ராப்பத்து திருவாய் மொழி முதல் திருநாளான 18-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்குப் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். 24-ம்தேதி திருக்கைத்தல சேவையும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ந்தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும். இந்த நிகழ்ச்சிகளை காண்பதற்காகவும் ரங்கநாதரை தரிசிக்கவும் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக ஸ்ரீரங்கத்தில்  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அம்மா மண்டபம் தெரு, தெற்கு வாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல், சாத்தரா வீதி ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள், கடைகளின் மேற்கூரைகள், கீற்றுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மேலும் நடைபாதை கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோயிலில் 42 முக்கிய இடங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு கோயிலின் உட்புறம், நான்கு உத்திரவீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள்,ரெங்காரெங்கா கோபுரம் முதல் ராஜகோபுரம் வரை உள்ளிட்ட பகுதிகளில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  பொதுமக்களுக்கு முக்கிய தகவல்களை பரிமாறிக் கொள்ள 73 இடங்களில் ஒலிபெருக்கி அமைக்கப்படவுள்ளது. 

திருக்கோவிலின் முக்கிய மூன்று இடங்களில் பெரிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது.பக்தர்களின் வசதிக்காக 21 இடங்களில் பெரிய எல்.இ.டி டிவிக்கள் பொருத்தப்படவுள்ளது. குற்றத்தைத் தடுக்கவும், குற்றம் நடவாமல் கண்காணிக்கவும் கோயிலை சுற்றி முக்கிய 11 இடங்களில் ஒலிபெருக்கிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது.திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் கோயிலை சுற்றி 10 வாகனநிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காகக் காவல்துறை புறக்காவல் நிலையத்தில் அவசரக் கால தொடர்பிற்காக தொலைப்பேசி எண். 0431-4040084 மற்றும் அலைபேசி எண்கள்; 73057-34652  மற்றும் 73057-34653-உடன் அமைக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பு திருவிழாவின் போது பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், குற்றங்களைத் தடுப்பதற்காகவும், போக்குவரத்தைச் சரிசெய்வதற்கும் மாநகரம் மற்றும் வெளியூர்களிலிருந்து சுமார் 4000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் திருக்கோவிலிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படவுள்ளார்கள் எனத் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க