சிதம்பரம் நடராஜர் கோயிலில் 14-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்! | Arutra Darshan Festival at Chidambaram Nataraja Temple

வெளியிடப்பட்ட நேரம்: 03:31 (12/12/2018)

கடைசி தொடர்பு:07:41 (12/12/2018)

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 14-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்!

சிதம்பரம்  நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா 14-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகவும், பஞ்ச சபை தலங்களில் பொற்சபைத் தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம்.

ஆருத்ரா தரிசனம்

பூலோகக் கயிலாயம் எனப்படும் இந்த ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் மார்கழி மாத திருவாதிரை அன்று சிறப்பாக நடைபெறும். அன்றைய நாளில் ஆருத்ரா தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. சிவபெருமான் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை உணர்த்துவதாக இந்த நாள் அமைகிறது.

இதையொட்டி ஆருத்ரா தரிசன விழா 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் , மஹா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுடன்  பிராகாரத்தை வலம் வந்து கொடிமர சந்நிதியில் எழுந்தருள்கிறார்.

ஆருத்ரா தரிசனம்

கொடியேற்றம் முடிந்த பிறகு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், பன்னிருதிருமுறை வழிபாடு நடக்கிறது. பின்னர், மகா தீபாராதனையுடன்   சிவகாமி அம்மன் சமேத நடராஜர் பெருமானுக்கு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. 15-ம் தேதி சந்திரபிரபை வாகனத்திலும், 16-ம் தேதி தங்க சூரிய பிரபை, 17-ம் தேதி வெள்ளி பூத வாகனம், 18-ம் தேதி  வெள்ளி ரிஷப வாகனம், 19-ம் தேதி வெள்ளி யானை வாகனம், 20- ம் தேதி கயிலாய வாகனம், 21-ம் தேதி தங்க ரதத்திலும் சுவாமி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். 22-ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறும். 23-ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.