சூரியனும் இந்திரனும் வணங்கும் நைனாமலை வரதராஜப் பெருமாள்! | The glory of Nainamalai Varadaraja Perumaal!

வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (14/12/2018)

கடைசி தொடர்பு:15:32 (14/12/2018)

சூரியனும் இந்திரனும் வணங்கும் நைனாமலை வரதராஜப் பெருமாள்!

நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்ற தலம், ஆகையால் இது நைனா மலை என்று பெயர் பெற்றது. தமிழ் மறை பாடிப் பெருமாளைச் சேவித்த ஆண்டாளுக்கும் இங்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது.

சூரியனும் இந்திரனும் வணங்கும் நைனாமலை வரதராஜப் பெருமாள்!

ர்வபாவமும் நீக்கி நற்கதியும் நல்வாழ்வும் அருளும் திருத்தலம் திருப்பதி. மலைமேல் நின்ற கோலத்தில் சேவைச் சாதித்து நினைத்தவர்க்கு நினைத்த மாத்திரத்தில் அருள்பாலிக்கும் திருவேங்கட முடையானைத் தரிசித்ததற்கு இணையான பலனையும் பாக்கியத்தையும் அருளும் திருத்தலங்கள் பலவற்றுள் ஒன்றுதான் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நைனா மலை ஶ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயில்.

பெருமாள்

இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் இந்தத் தலம் சின்னத் திருப்பதி என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது. மலைமேல் நின்று நல்லருள் புரியும் குவலயவல்லி சமேத ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயம்.

சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் புதன் சந்தை என்னும் ஊரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மலைமேல் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். இந்தக் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்றும் ஆலயத்தின் சில பகுதிகள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமச்சந்திர நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் 2,600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்குச் செல்வதற்கு என்று சுமார் 3000 - த்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளன.

பெருமாள்நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்ற தலம் ஆகையால் இது நைனாமலை என்று பெயர் பெற்றது என்றும், தெலுங்கு பேசும் நாயக்கர்கள் இந்தத் தலத்து இறைவனைத் தங்கள் தந்தையாகப் பாவித்த காரணத்தினால் நைனாமலை என்று பெயர் பெற்றதாகவும் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தெலுங்கில் நானா என்றால் தந்தை என்று பொருள்.

மலை முடியும் இடத்துக்குப் பத்துப் படிகள் கீழே நமக்கு அருள்தரும் வண்ணம் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை வணங்கிய பின்பு சில படிகள் ஏறினாலே இறைவனின் சந்நதி வந்துவிடும்.  பெருமாளின் சந்நதிக்கு எதிரே கொடிமரத்துக்கு அருகில் பெரிய திருவடி கருடாழ்வார் இறைவனைக் கைகூப்பித் தொழுதவராகக் காட்சிகொடுக்கிறார். கர்ப்பக் கிருகத்தின் உள்ளே ஶ்ரீ வரதராஜப் பெருமாள் பூதேவி, ஶ்ரீதேவியரோடு பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை விரட்ட கையில் தண்டம் தரித்து தரிசனம் அளிக்கிறார். அவரை கண்குளிர தரிசித்து வழிபட நாம் படிகளேறி வந்த களைப்பு நீங்கிப் புத்துணர்வு பெறும் அதிசயம் நிகழும்.

சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் உள்ள தூணில் நயன மகரிஷி தவம் செய்வதுபோன்ற சிற்பம் ஒன்றும் உள்ளது. பெருமாளை தரிசித்து வெளியே வர அன்னையின் சந்நிதி வரவேற்கிறது. குவலயவல்லித் தாயார் கருணையே உருவான திருவுருவம் கொண்டு அந்தச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அதே போல தமிழ் மறை பாடிப் பெருமாளைச் சேவித்த ஆண்டாளுக்கும் இங்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது.

சுவாமி சந்நிதியை அடுத்த மகாமண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சமேதராகவும், நவநீதகிருஷ்ணரும், ராதா, ருக்மணி சமேதராகக் காட்சி கொடுக்கும் ஶ்ரீ வேணுகோபாலரும் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.

மலை

ஆலயத்துக்கு வெளியில் இருக்கும் கல்மண்டபமும் மிகப் பழைமையானது. மண்டபத்துத் தூண்களில் படுக்கை ஜடாமுடி சித்தர், பிராண தீபிகை சித்தர், குரு லிங்க சித்தர் போன்ற சித்த புருஷர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இன்றளவும் இங்குச் சித்தர்கள் வந்து இறைவனை வழிபட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயத்து இறைவனைச் சூரியன் வழிபட்டு வரம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப வருடத்தில் உத்ராயண புண்யகாலமான தை முதலான ஆனி மாதம் வரையிலான ஆறுமாதமும் சூரியனின் ஒளி மூலவரின் முகத்தில் படுவதுபோல் கோயிலின் அமைப்பு அமைந்துள்ளது. இதைக் காணும் பக்தர்களுக்குச் சூரிய நாராயணர், வரதராஜப் பெருமானை தன் கிரணங்களால் ஸ்பரிசித்து வழிபடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேபோல  இந்திரனும் இங்கு இடி ரூபமாக வந்து இறைவனை வழிபடுவதாகவும் ஐதீகம்.

templeஇந்தத் தலத்தில் ஒரு காலத்தில் 120 தீர்த்தங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இன்று அவை அனைத்தும் வற்றி `அமையா தீர்த்தம்', `அரிவாள் பாழி', `பெரிய பாழி' ஆகிய  மூன்றே மூன்று தீர்த்தங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

தல விருட்சம்: நெல்லி மரம் 

பெருமாளுக்கு உகந்த சனிக் கிழமைகளிலும், புதன் கிழமைகளிலும் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வது உகந்தது. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. இந்த நாள்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் அலுப்பின்றிப் படியேறி இறைவனை வழிபட்டுப் பயனடைகின்றனர்.       

எப்படிச் செல்வது..?

சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் புதன் சந்தை என்னும் இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.       

(படங்கள் உதவி: பி. சௌந்தர்ராஜபட்டர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்