வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (17/12/2018)

கடைசி தொடர்பு:14:05 (17/12/2018)

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா - திருப்பதியில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிய வாய்ப்பு

மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி திதி, 'வைகுண்ட ஏகாதசி' என்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமால் வழிபாட்டில் மிகவும் முக்கியமான விரதம், ஏகாதசி விரதம். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அன்று அதிகாலை, பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்குச் சென்று சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் கண்டு, பெருமாளை வழிபட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விரதம் அனுஷ்டிப்பர். மறுநாள் துவாதசியன்று, துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவுசெய்வர்.

ஏகாதசி

இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி, நாளை 18.12.18 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருப்பதியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவிருக்கிறது. சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு உதவும் வகையில் தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி

வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸுக்கு எதிரே இருக்கும் நாராயணகிரி கார்டனில் பக்தர்கள் காத்திருக்க, 16 தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 229 கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை உறுதிசெய்ய 2,500 -க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் கூட்டம்

'தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எந்த விதத்திலும் அசௌகரியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி, தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க