1000 ஆண்டுகள் பழைமையான பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு! | Thousand years old Perumal temple opened in Vaikunta Ekadasi

வெளியிடப்பட்ட நேரம்: 23:59 (18/12/2018)

கடைசி தொடர்பு:07:07 (19/12/2018)

1000 ஆண்டுகள் பழைமையான பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

ஆண்டிப்பட்டி அருகே ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கதலிநரசிங்க பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் கதலிநரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், நரசிங்க பெருமாள் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்க வாசல் திறக்கப்படும். இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியான இன்று (18.12.2018)  காலை 10.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு, ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். சக்கரத்தாழ்வாருக்கு விமோசனம் கொடுத்த கதலிநரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் சொர்க்க வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார். அப்போது கோயில் சொர்க்க வாசல் முன்பாக கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் வழியாக வந்த உற்சவருக்கு, டி.ராஜகோபாலன்பட்டி கிராம மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட  மண்டகப்படியில் பூஜைகள் செய்யப்பட்டது. கதலி நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு துளசி மாலை அணிவிக்கப்பட்டது. பக்தர்களுக்குத் துளசி இலை தீர்த்தம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயலர், தக்கார், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.