வடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு! | Vadarengam Lord Ranganatha Temple Opened for vaikunta ekadasi

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (19/12/2018)

கடைசி தொடர்பு:07:46 (19/12/2018)

வடரெங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு!

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே  வடரெங்கத்தில், மிகவும் பிரசித்திபெற்ற ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று நடைபெற்ற பரமபதவாசல் எனப்படும், சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்க வாசல்

வைகுண்ட ஏகாதசி திருநாளையொட்டி நேற்றுமுன்தினம் காலை ரெங்கநாத பெருமாள் கோயிலில், பெருமாள் அலங்காரத்தில் வீற்றிருக்க, சுதர்சன ஹோமம் நடத்தி, சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில்  கோயில் உள்பிரகாரத்தில் பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, புறப்பாடு நிகழ்ச்சி மங்கள மேளம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை பெருமாளுக்கு திருமஞ்சனம் திருப்பாவை சேவை செய்து, தீபாராதனையும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றபோது பக்தர்கள் பக்திப் பரவசத்துடன், ``கோவிந்தா... கோவிந்தா"  என்று கைகூப்பி விண்ணதிர முழங்கினர். இந்த தரிசனத்துக்காக பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு முழுவதும் கண்விழித்துக் காத்திருந்தனர். இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், அன்பரசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.