கோதை, `பேய்ப் பெண்ணே' என்று தோழியைத் துயிலெழுப்பியது ஏன் தெரியுமா? - திருப்பாவை - 6 | Thiruppavai special article 6th day!

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (21/12/2018)

கடைசி தொடர்பு:10:27 (21/12/2018)

கோதை, `பேய்ப் பெண்ணே' என்று தோழியைத் துயிலெழுப்பியது ஏன் தெரியுமா? - திருப்பாவை - 6

கண்ணனைப் பணிந்து வேண்டினால், தன் அன்பையும் அருளையும் அவன் அள்ளி அள்ளித் தருவான் என்பதால், அயர்ந்து தூங்கும் தோழியைத் துயில் துறந்து தன்னுடன் வந்து கண்ணனை வழிபட அழைக்கிறாள்.

கோதை, `பேய்ப் பெண்ணே' என்று தோழியைத் துயிலெழுப்பியது ஏன் தெரியுமா? - திருப்பாவை - 6

``புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்..!"

``பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் ஓசையிடத் தொடங்கிவிட்டன. பறவைகளுக்கெல்லாம் தலைவனாம் கருடன். கருடனின் அரசனான எம்பெருமான் கோயிலின், வெண்சங்கின் ஓசை உனக்குக் கேட்கவில்லையா..? பெண்ணே, எழுந்திரு..!

பூதகியின் முலையில் சுரந்த நஞ்சினைக் குடித்தவன்; சக்கர வடிவில் உருவெடுத்து வந்த சகடாசூரனை தனது காலால் கொன்றவன்; திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட உலக முதற் காரணன்... அந்தக் கண்ணனை முனிவர்களும், யோகிகளும் எழுந்து `அரி...' என்று ஓதும் ஓசை, உள்ளமெங்கும் குளிர்விக்கிறதே... உன் செவிகளுக்குக் கேட்கவில்லையா?'' என்று உறக்கத்திலிருந்து எழுந்துகொள்ளாத தன் தோழியைத் துயிலெழுப்புகிறாள் கோதை.

கண்ணன் உடன் கோதை

சிறிய ஒலி கேட்டால்கூட, சட்டென்று விழிக்கும் இயல்பை உடையவர்கள் பெண்கள். அந்த இயல்புக்கு எதிராக, அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் ஆயர்குலப் பெண்ணை `பேய்ப் பெண்ணே...' எனக் கோதை அழைத்து, தனது தோழியைத் துயிலெழுப்புகிறாள். தன் தோழியரைத் துயிலெழுப்பும் பாடல்களில், இது முதலாவது பாடலாகும்.

கண்ணனைப் பணிந்து வேண்டினால், தன் அன்பையும் அருளையும் அவன் அள்ளி அள்ளித் தருவான் என்பதால், அயர்ந்து தூங்கும் தோழியைத் துயில் துறந்து தன்னுடன் வந்து கண்ணனை வழிபட அழைக்கிறாள். அப்போது கண்ணன் நாம் கேட்பது அனைத்தையும் அருள்வான் என்றும் ஆசை மொழி கூறுகிறாள்.

ஆனால், கோயிலுக்குச் சென்று கண்ணனை வழிபட்டால் மட்டும் அவன் நாம் கேட்பதை எல்லாம் கொடுத்து விடுவானா என்ன?
தன்னைச் சார்ந்த தன் உறவினர்களுக்கும், தன்னுடன் பழகிய நண்பர்களுக்கும்கூட ஒன்றும் செய்யாமல் உறங்கியவனாம் கண்ணன். `வெள்ளத்தரவில் துயில் கொண்ட வித்தினை' என்று ஆண்டாள் பாடியபடி, ஒருவேளை  திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் பழக்க தோஷம்தான், கண்ணனை அப்படி உறங்கியது போல் நடிக்கச் செய்தது போலும்! நம்மையெல்லாம் காப்பாற்றும் கண்ணன் எப்போதும் உறங்கியதே இல்லை. நம்மிடமுள்ள மாயைகளைக் களைந்து நமக்கு அருள்புரியவேண்டும் என்பதற்காகவே, நம்மைக் காக்க வைத்து உறங்குவதுபோல் பாவனை செய்கிறான்!

கண்ணன்

இப்படி கண்ணன் உறங்குவதுபோலும், கண்டும் காணாதது போலும் இருந்த இரண்டு நிகழ்ச்சிகளை நாம் இங்கே பார்க்கலாம்.
பாரதப் போர் நடக்கப்போவது உறுதியாகிவிட்ட நிலையில், போருக்கு முன்பாக கௌரவர்கள் சார்பில் துரியோதனனும், பாண்டவர்கள் சார்பில் அர்ஜுனனும் கண்ணனிடம் உதவி கேட்க முடிவு செய்தனர். 

தான் யாருக்கு முதலில் உதவுவதாக வாக்களிக்கிறோமோ அவர்தான் யுத்தத்தில் வெற்றி பெறுவார்கள் என்பதைக் கண்ணன் அறியமாட்டானா என்ன?

இருவரில் துரியோதனன்தான் முதலில் வருவான் என்பதையும் அறிந்துகொண்ட கண்ணன், அந்தப் பகல்பொழுதிலும் தனக்கு அசதியாக இருப்பதாக ருக்மிணியிடம் கூறி சயன அறைக்குச் சென்று உறங்குவதுபோல் பாவனை செய்கிறான்.

கண்ணன் நினைத்தபடியே துரியோதனன் முதலில் வந்து சேர்ந்தான். கண்ணன் உறங்குவதாக நினைத்தவன், அவன் விழித்துக்கொள்ளும் வரை காத்திருக்க நினைத்தான். தான் ஓர் அரசன் என்பதால், கண்ணனின் கால் பக்கமாக இருக்கும் ஆசனத்தில் அமர்ந்தால், தன்னுடைய கௌரவத்துக்குக் குறைச்சல் என்ற மாயை ஏற்படுத்திய அகந்தையின் காரணமாக, கண்ணனுக்கு தலைப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினான். 

கண்ணன்

சற்றைக்கெல்லாம் அர்ஜுனன் வந்து சேர்ந்தான். அவ்வளவுதான் அது வரை உறங்குவதுபோல் பாவனை செய்த கண்ணன், உடனே விழித்தெழுந்தான்.

தன் காலருகில் அமர்ந்திருந்த அர்ஜுனனை முதலில் பார்த்த கண்ணன், கள்ளச் சிரிப்பு இதழ்களில் தவழ, ``வா அர்ஜுனா, வந்து வெகுநேரம் ஆகிவிட்டதா..?'' என்று கேட்க, தலைப் பக்கம் அமர்ந்திருந்த துரியோதனன், ஆத்திர அவசரமாக, ``கிருஷ்ணா, நான்தான் முதலில் வந்தேன். நான் சொல்வதைக் கேட்டு விட்டுத்தான் அர்ஜுனன் சொல்வதைக் கேட்கவேண்டும்'' என்றான்.

எங்கே அர்ஜுனன் கண்ணனின் சேனைகளைக் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் துரியோதனனுக்கு. 
``நான் உறங்கியபோது வந்ததால் தெரியவில்லை. எதற்கு வந்திருக்கிறீர்கள்?'' என்று கண்ணன் கேட்டதும், இருவரும் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறினார்கள்.

``நான் ஏற்கெனவே வாக்களித்திருந்தபடி, ஆயுதம் ஏந்தாத நான் ஒருபுறத்தில் இருப்பேன். என்னுடைய பெரும் சேனைகள் இன்னொரு புறம் இருக்கும். கண் விழித்தவுடன் நான் முதலில் பார்த்தது அர்ஜுனன் என்பதால், நான் அர்ஜுனனை முதலில் கேட்கிறேன்'' என்று கூறி, அர்ஜுனனைப் பார்க்க, 

அர்ஜுனன், ``எனக்கு உன்னுடைய படைகள் தேவையில்லை. நீ மட்டுமே எங்கள் பக்கம் இருந்தால் அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறினான்.

கோதை

எங்கே அர்ஜுனன் படைகளைக் கேட்டுவிடுவானோ என்ற அச்ச உணர்வில் தவித்திருந்த துரியோதனன், அர்ஜுனன் கண்ணனின் துணை ஒன்றே போதும் என்று கேட்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். கண்ணனின் சேனைகளைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் திரும்பினான். கண்ணன் பகவானின் அவதாரம் என்பதே தெரியாத அளவுக்குத் துரியோதனனின் மனதை மாயை சூழ்ந்திருந்தது. 
கண்ணன் துணை நின்ற பக்கமே அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தது என்பது தெரிந்த விஷயம்தான்!

துரியோதனனும் அர்ஜுனனும் வந்த வேளையில் சிறு பொழுது மட்டுமே உறங்குவதுபோல் பாவனை செய்த கண்ணன், மற்றொருவன் விஷயத்தில் கண்டும் காணாததுபோல் இருந்தான். அதுவும் நீண்ட காலத்துக்கு!

அந்த மற்றொருவர் கண்ணனின் பால்ய நண்பனும், குருகுலத்தில் கண்ணனுடன் ஒன்றாகப் படித்தவனுமான சுதாமன்தான். 
குருகுலவாசத்தின்போது கண்ணனுக்கும் பலராமனுக்கும் உற்ற தோழனாக இருந்தவன் சுதாமன். இவனுக்குக் குசேலன் என்ற பெயரும் உண்டு. 

குருகுலம் முடிந்து கண்ணன் துவாரகை அரசனாக முடிசூட்டிக்கொண்ட நிலையில், இங்கே அவனுடைய பால்ய நண்பனான குசேலனோ பரம தரித்திரத்தில் உழன்றுகொண்டிருந்தான். தன் நண்பன் குசேலனின் நிலைமை கண்ணனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், எதுவும் தெரியாதது போல் இருந்துவிட்டான்.

கண்ணன்

சுசீலை என்பவளை மணந்துகொண்ட குசேலனுக்கு 27 பெண்குழந்தைகள். வீட்டில் மாளாத வறுமை. குசேலன் பசியிலும் பட்டினியிலும் தியானம், பூஜை என்று ஒதுங்கிவிட, சுசீலை மட்டும் காட்டில் கிடைக்கும் தானியங்கள், காய்கனிகள் சேகரித்து தன் குழந்தைகளின் வயிற்றுப் பசியை ஓரளவுக்கே தணிக்க முடிந்தது. இவை அனைத்தும் தெரிந்தும்கூட மாயக் கண்ணன் தன் பால்ய நண்பனைக் கண்டுகொள்ளவே இல்லை. 

ஏனிந்த நாடகம்?

அதற்கு முன்பு குசேலனின் துவாரகை விஜயத்தைப் பார்த்துவிடலாமே...

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுசீலை ஒருநாள் குழந்தைகளின் பசிப் பிணியைப் போக்க நினைத்தவள், தன் கணவனிடம் துவாரகைக்குச் சென்று கண்ணனிடம் உதவி கேட்கும்படிக் கூறினாள். கூடவே கண்ணனுக்காக தான் அன்று சேகரித்த அரிசி முழுவதையும் அவலாக்கிக் கொடுத்து, ஒரு துணியில் முடிந்து கொடுத்து அனுப்பினாள். 

கந்தல் ஆடையுடனும் கைப்பிடி அவலுடனும் துவாரகைக்கு வந்து சேர்ந்த தன் பால்ய நண்பன் குசேலனை, ஆரத் தழுவி வரவேற்ற கண்ணன், பல வகைகளிலும் குசேலனுக்கு உபசாரம் செய்து மகிழ்ந்தான். 'சுசீலை தன்னிடம் கொடுத்தனுப்பிய அவலை எப்படி அரசபோகத்தில் திளைக்கும் நண்பனுக்குக் கொடுப்பது?' என்று குசேலன் தயங்கியபோது, அனைத்தும் அறிந்த கண்ணன், குசேலனின் துணி முடிப்பில் இருந்த அவலை எடுத்து ஆவலோடு உண்டான். 

கண்ணன்

கண்ணன் உண்பதையே ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்த குசேலன், தான் நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த தன்னுடைய பால்ய நண்பனிடம் எதுவும் கேட்கத் தோன்றாமலே ஊருக்குப் புறப்பட்டான்.

அங்கே அவனுடைய குடிசை, மாடமாளிகையாக மாறியிருந்ததையும், அவன் மனைவியும் குழந்தைகளும் சர்வாலங்காரங்களுடன் செல்வச் செழிப்பில் இருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்தான். 

எல்லாமே கண்ணனின் லீலைகள்தாம் என்பது குசேலனுக்குப் புரிந்தது.

இப்போது குசேலன் கேட்காமலே வரம் அருளிய கண்ணன், ஏன் இத்தனை காலம் குசேலனின் வறுமையைப் போக்க முயற்சி செய்யவில்லை? தன் பக்தர்கள் எல்லோரும் செல்வச் செழிப்பில் இருக்க, தன் உயிருக்கு நிகரான சிநேகிதனை மட்டும் வறுமையில் வாடும்படி ஏன் செய்தான்?

கண்ணனின் சொல்லுக்கும் சரி, அவனுடைய லீலா விநோதங்களுக்கும் சரி ஏதேனும் ஒரு காரணம் இருக்கவே செய்யும். அப்படித்தான் குசேலன் விஷயத்திலும் ஒரு காரணம் இருக்கச் செய்கிறது.

கண்ணன்
அந்தக் காரணம்...

குருகுலத்தில் பயின்ற காலத்தில், காட்டுக்குச் சென்று விறகு வெட்டி வரும்படி கண்ணன், பலராமன், குசேலன் ஆகியோரை அனுப்புகிறார் சாந்தீபனி முனிவர். அப்போது குருபத்தினி, அவர்கள் மூவருக்கும் கொடுத்தனுப்பிய உணவைக் குசேலனே உண்டுவிட்டானாம். பசியால் வாடிய தன் நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல், சுயநலத்துடன் அடுத்தவர் உணவையும் தானே உண்டதன் காரணமாகவே வறுமையில் வாட நேரிட்டது. 

ஆனால், அதே தருணத்தில் தானும் தன் மனைவியும் வறுமையில் தவித்தபோதும், கண்ணனைப் பார்க்கச் சென்ற வேளையில் கஷ்டப்பட்டு சேகரித்த அவலை எடுத்துச் சென்றான். அதன் காரணமாகவே அவன் கேட்காமலே கண்ணன் அவனுக்கு அருள்புரிந்தான். குசேலனின் வறுமையும் நீங்கியது.

ஆக, இறைவனின் அவதாரமான கண்ணன் ஒரு பகல் பொழுதில் கொண்ட சிறு தூக்கமும்; நீண்ட காலமாகத் தன் நண்பனிடம் கொண்டிருந்த கண்டும் காணாதது போன்ற உறக்க நிலையும் நம்மைப் போன்றவர்களின் அறியாமையைப் போக்கி, நமக்கு உண்மை ஞானத்தை அருள்வதற்கே என்பது தெளிவு.

கண்ணன்

உண்மையான அன்புடன் இருந்தோமேயானால், நாம் கேட்காத வரங்களையும் சேர்த்தே கொடுப்பான் கண்ணன் என்பது புரிகிறதல்லவா...?

இப்படிப்பட்ட பொய்த்தூக்கம் தூங்கும் அந்தப் பொல்லாத கள்வனைத் தொழுது நல்லருள் பெற்றிட, தூக்கம் கலைந்து எழுந்து வாருங்கள் என்று, மார்கழி ஆறாம் நாளன்று தன் தோழியரை அழைக்கிறாள் கோதை..!!


டிரெண்டிங் @ விகடன்