'ஆருத்ரா தரிசனம்' - சேந்தனாரின் களியமுதை இறைவன் ஏற்ற திருநாள் ! | aruthra darisanam in chidambaram temple

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/12/2018)

கடைசி தொடர்பு:06:00 (22/12/2018)

'ஆருத்ரா தரிசனம்' - சேந்தனாரின் களியமுதை இறைவன் ஏற்ற திருநாள் !

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் சிவ வழிபாட்டுக்கு உகந்த நாள். அன்று ஆருத்ரா தரிசனத்தில் இறைவன் அருள்பாலிப்பார்.  ஒருமுறை திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளின் முகம் மகிழ்ச்சியில் திளைக்க, அதன் காரணம் என்ன வென்று  ஆதிசேஷன் வினவினார். அதற்கு மகாவிஷ்ணு,  தில்லையில் ஈசன் புரியும் திருநடனமே  தன் மகிழ்ச்சிக்குக்  காரணம் என உரைத்தார்.

ஆருத்ரா தரிசனம்

 

 உடனே ஆதிசேஷனும் அந்த நடனத்தைக் காணப் பெரு விருப்பம் கொண்டார்.  ஆதிசேஷன், பதஞ்சலி முனிவராகப் பிறந்து ஈசனின் திருநடனம் காண வேண்டித் தவம் புரிந்தார். அப்போது இறைவன் அசரீரியாக  'திருவாதிரைத் திருநாளில் எனது திருநடனக் காட்சியைக் காண்பாய் '  என்று வாக்களித்தார்.அதன்படி பதஞ்சலிக்கு மார்கழித் திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம் தந்து ஆட்கொண்டார்.

ஆருத்ரா


 திருவாதிரை நாளில் இறைவனுக்குக் களி படைப்பது சிறப்பு.  தினமும் சிவனடியார் ஒருவருக்கு அமுதிட்டு உண்ணும் வழக்கம் கொண்ட சேந்தன் இல்லத்தில் இறைவன் களி உண்டு அவன் புகழை உலகறியச் செய்த தினமும் மார்கழித் திருவாதிரையே. நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அந்த ஆறு  நாட்களில் மார்கழி மாதத் திருவாதிரை அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனப் பெருவிழா நாளை 23/12/2018 நடைபெறுகிறது.  சிதம்பரம் உள்ளிட்ட சிவத்தலங்களில் ஆருத்ரா தரிசனப் பெருவிழா வெகுச்  சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் இறைவனை ஆடல் கோலத்தில் வழிபட்டு நற்பேறு அடையலாம்.