பக்தனைக் காக்க தேவ வாக்கையும் மீறுவான் என் கண்ணன்! - திருப்பாவை - 7 | Thiruppavai special article 7th day

வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (22/12/2018)

கடைசி தொடர்பு:08:48 (22/12/2018)

பக்தனைக் காக்க தேவ வாக்கையும் மீறுவான் என் கண்ணன்! - திருப்பாவை - 7

"எனது பெயரைச் சொல்லி, எனது திருவடியில் மலர்களை வைத்து ஆத்மார்த்தமாக எனக்கு அர்ச்சனை செய்யும் பக்தனை நானும்விட மாட்டேன். அவனைக் காத்து நின்று மோட்சம் தருவேன்!" என்கிறான் கண்ணன்.

பக்தனைக் காக்க தேவ வாக்கையும் மீறுவான் என் கண்ணன்! - திருப்பாவை - 7

"கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாசநறுங்குழல் ஆச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ..
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்..

"பேய் போல உறங்கும் பெண்ணே..!

ஆனைச்சாத்தன் என்ற பறவை, பொழுது புலர்ந்ததைக் குறிக்கும் வகையில், 'கீசு கீசு' என்று ஒலி எழுப்புவது உன் காதுகளில் விழவில்லையா..? ஆயர்குலப் பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் காசு மாலையும், தங்க மணிமாலையும் ஒன்றுடன் ஒன்று உரசி ஓசையெழுப்ப, அவர்கள் மத்தினால் தயிர் கடையும் ஓசை உனக்குக் கேட்கவில்லையா..? நாங்கள் அனைவரும் சேர்ந்து நாராயணன் புகழைப் பாடுகின்றோமே. இத்தனையும் கேட்டும்கூட ஆயர்குலப் பெண்களின் தலைவியான நீ, இன்னும் படுக்கையை விட்டு எழாமல் இருக்கிறாயே... இது உனக்கே அடுக்குமா? ஒளி பொருந்திய பெண்ணே, எழுந்து வந்து கதவைத் திறப்பாயாக'' என்று தோழியை எழுப்புகிறாள் கோதை.

கண்ணன்

'கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன்...'

பொழுது புலர்ந்தது என்பதற்கு அடையாளமாகப் பறவைகள் அனைத்தும் ஒலி எழுப்புகின்றன என்று ஆரம்பித்திருக்கலாமே... ஏன் ஆனைச்சாத்தன் என்று குறிப்பாகச் சொல்கிறாள்? அது என்ன ஆனைச்சாத்தன்?

திருவேங்கடவனுக்கும் பறவைகளுக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருந்துகொண்டுதான் இருக்கும். இறைவனின் வாகனம்கூட பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடன்தானே! அதுபோலத்தான் ஆனைச்சாத்தனும்..!

ஆனைச்சாத்தன் என்பது குயிலைப் போன்று உருவம் கொண்டு, பேரொலியெழுப்பும் ஒரு பறவை என்று சொல்லப்படுகிறது. விடியலைச் சொல்லும் இந்தப் பறவையின் ஒலி, வெகு தொலைவு கேட்கக்கூடியது. அதுவும் அது 'கீசுகீசு' என்று கூவுவது, 'கேசு கேசு' என்று கேசவனின் பெயரைச் சொல்வதுபோல் இருக்குமாம்!

அப்படிப்பட்ட பேரொலியைக்  கேட்டும்கூட பேய் போல் உறங்கும் பெண்ணை எழுப்பப் பாடுகிறாள் கோதை. ஆனால், ஆனைச்சாத்தன் என்பது இங்கே பறவையை மட்டும் குறிக்கவில்லை. அதற்கு, 'யானையைச் சாய்த்தவன்' என்ற ஒரு பொருளும் உண்டு. கம்சனால் ஏவிவிடப்பட்ட குவலயாபீடம் என்ற யானையை மாய்த்தவன் கண்ணன்.

கண்ணன்

யானையைச் சாய்த்ததினால், அவன் ஆனைச்சாத்தன் என்று மட்டுமல்ல... கஜேந்திரன் என்ற யானையைக் தானே நேரடியாகச் சென்று, காத்து மோட்சம் தந்தவன் என்பதால் ஆனைக் காத்தவன் எனவும் அழைக்கப்பட்டவன் நம் மாயக்கண்ணன்..!!

ஐந்தறிவு கொண்ட கஜேந்திரன், யானைக் கூட்டத்திற்குத் தலைவனாக இருந்தாலும், தனது பூர்வ ஜன்மத் தொடர்பால், இறைவனின் அருளால் மோட்சம் பெறுவதற்காக விஷ்ணு பகவானை நாள் தவறாமல் வழிபட்டு, பூஜைகளைச் செய்து வந்தது.

ஒருநாள், பெருமாளுக்குப் பூஜையில் வைத்திட அருகிலிருந்த குளத்தில் பூத்திருந்த ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவைப் பறிப்பதற்காக குளத்தில் இறங்கியது கஜேந்திர யானை. நீரில் உடலைச் சுத்தம் செய்தபின், கஜேந்திரன் பூவைப் பறிக்க இன்னும் சற்று நீருக்குள் செல்ல முயன்றபோது, குளத்தில் இருந்த மகேந்திரன் என்ற ராட்சத முதலை, தனது இரைக்காக கஜேந்திரனுடைய காலைக் கவ்வியது.

பயந்து போன கஜேந்திரன் முதலையின் பிடியிலிருந்து தப்பிக்க, தன் வலிமையெல்லாம் திரட்டி பெருமுயற்சி செய்தது. முடியவில்லை. மனிதக் கணக்கில் கஜேந்திரனின் முயற்சி, ஆயிரம் வருடங்களாம். ஒரு மனிதன் ஆயிரம் வருடங்கள் அல்லது ஆயிரம் மனிதர்கள் ஒரு வருடம் விடாமல் முயன்றால் எவ்வளவு வலு கொடுப்பார்களோ அவ்வளவு வலுவை ஒன்றாகச் சேர்த்து ஒரே சமயத்தில் முதலையுடன் போராடிப் பார்த்திருக்கிறது கஜேந்திர யானை.

கண்ணன்

அவ்வளவு வலிமையுடன் போராடியும் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் போகவே, தன் கடைசி நம்பிக்கையான கடவுளை நோக்கி,   பறித்த தாமரை மலரைத் தும்பிக்கையில்  ஏந்தியபடி,  "ஆதிமூலமே என்னைக் காப்பாற்று.!" என்று கஜேந்திரன் கதறி அலறிட...
கஜேந்திரனின் அபயக் குரலைக் கேட்டதும் திருப்பாற்கடலில் சயனக் கோலத்திலிருந்த திருமால், கருடன் மீதேறி, அதிவேகமாகப் பறந்து வந்து, கஜேந்திரன் காலைக் கவ்வியிருந்த முதலையைத் தனது சக்ராயுதத்தால் அழித்து, யானையைக் காத்தானாம் இந்த 'ஆனைக் காத்தான்' கண்ணன்....

பக்தர்களைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்வான் பரந்தாமன். பக்தனைக் காப்பாற்றுவதற்காக, தான் கொடுத்த தேவ வாக்கையும்கூட மீறத் துணிந்தவன் பரந்தாமன். இதற்கு மகா பாரதத்தில் குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். குருக்ஷேத்திரத்தில் கௌரவர்கள் பக்கம் பூரிசிரவரஸும் பாண்டவர்கள் பக்கம் சாத்யகியும் இருக்கின்றனர். இருவரும் ஜன்ம விரோதிகள். சாத்யகி கண்ணனின் நண்பன். சிறந்த பக்திமானும்கூட. எதிரியான பூரிசிரவஸ் யாராலும் வெல்ல முடியாத வீரன். வாள் போரில் நிகரற்றவன். 

பன்னிரண்டாவது நாள் யுத்தத்தில் அபிமன்யு வஞ்சகமாகக் கொல்லப்படுகிறான். அடுத்த நாள் அஸ்தமனத்துக்குள் ஜயத்ரதனைக் கொன்றுவிடுவதாகச் சபதமேற்கிறான் அர்ஜுனன். விவரம் அறிந்த துரோணர், ஜயத்ரதனைப் பாதுகாக்க ஒரு பெரிய காவல் வியூகம் அமைக்கிறார். அர்ஜுனனும் பீமனும் வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று கடுமையாகப் போர் செய்துகொண்டிருந்த வேளையில், சாத்யகி பூரிசிரவஸுடன் கடும்போர் புரிகிறான். வாள்போரில் நிகரற்ற பூரிசிரவஸ் சாத்யகியை வீழ்த்தி, அவன் நெஞ்சில் காலை வைத்து, அவன் தலையைத் துண்டிக்க கத்தியை ஓங்குகிறான். 

கோதை

சாத்யகியின் நண்பனும், உற்ற தெய்வமுமான கிருஷ்ணன், தேரிலிருந்தபடி, ''அர்ஜுனா, சாத்யகி தோற்றுவிடுவான். நீ இங்கிருந்தபடியே பூரிசிரவஸ்ஸை உன் அம்பு எய்திக் கொல்'' என்றான். ஆனால், ''கிருஷ்ணா, பின்னாலிருந்து பூரிசிரவஸ்ஸை தாக்குவது யுத்த தர்மம் இல்லை'' என்று சொல்லி தயங்கி நிற்க, பொறுமை இழந்த கண்ணன், தன் பக்தனைக் காக்க சக்கராயுதத்தை ஏந்தத் துணிந்தார். பாரதப் போரில் ஆயுதம் ஏந்துவதில்லை என்று தான் கொடுத்த வாக்குறுதியை, பக்தனுக்காகக் கண்ணன் மீறுவதைக் கண்ட அர்ஜுனன் கண்ணனைப் பார்த்து, 'நன்மையும் தீமையும் உனக்கே; பாவமும் புண்ணியமும் நீயே' என்று சொல்லியபடி பூரிசிரவஸ்ஸை அம்பெய்தி கொன்றான். பூமியில் வீழ்ந்த பூரிசிரவஸ், தன் எதிரே சக்கராயுதத்துடன் காட்சி தந்த கண்ணைக் கை தொழுதபடியே மோட்சம் அடைந்தான்.

பாரதப் போர் தொடங்குவதற்கு முன்பு 'தான் போரில் ஆயுதம் ஏந்துவதில்லை' என்று தான் செய்து கொடுத்த சத்தியத்தை, பக்தனுக்காக மீறத் துணிந்த கருணையுள்ளம் கொண்டவன் கண்ணன்! கண்ணனைப் பொறுத்தவரை அவனுக்கு தன்னுடைய அவதார தர்மமோ, க்ஷத்திரிய தர்மமோ பெரிதாகத் தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரை பாகவத தர்மமே பெரிது. பாகவத தர்மத்தைக் காப்பதற்காக எந்த நிலைக்கும் தன்னை இறக்கிக்கொள்ளும் நாயகன் அவன்! அதனால்தான் கண்ணனை விரும்பாதவர்களென்று யாரும் இருப்பதில்லை.

"எனது பெயரைச் சொல்லி, எனது திருவடியில் மலர்களை வைத்து ஆத்மார்த்தமாக எனக்கு அர்ச்சனை செய்யும் பக்தனை நானும் விட மாட்டேன். அவனைக் காத்து நின்று மோட்சம் தருவேன்!" என்கிறான் கண்ணன்.

கண்ணன்

பார்த்தனுக்குச் சாரதியாக இருந்து தர்மம் தழைக்கச் செய்த அந்தப் பரந்தாமனை நாங்கள் அனைவரும் மனமுருகிப் பாடுகிறோம். அதைக் கேட்ட பின்னும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே, எழுந்து வந்து கதவைத் திற என்று தன் தோழியை அழைக்கிறாள் கோதை.


டிரெண்டிங் @ விகடன்