சிம்மராசிக்காரர்களே... வெற்றிகள் குவியும் ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள் | new year Astrology for leo sign members

வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (25/12/2018)

கடைசி தொடர்பு:15:49 (25/12/2018)

சிம்மராசிக்காரர்களே... வெற்றிகள் குவியும் ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள்

சிம்மராசிக்காரர்களே... வெற்றிகள் குவியும் ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள்

சூரிய பகவானின் ராசியிலே பிறந்த சிம்ம ராசிக்காரர்களான நீங்கள், கருமமே கண்ணாயினார் என்று எடுத்துக்கொண்ட காரியத்தை மிகுந்த சிரத்தையோடு செய்து முடிப்பீர்கள். `யார் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் என் மனதுக்கு எது சரியென்றுபடுகிறதோ அதை நான் நிச்சயம் செய்வேன்' என்று எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களை நம்பி ஒருவர் வந்துவிட்டால், எதையும் செய்து அவரைக் காப்பாற்றி விடுவீர்கள். உங்களுக்குக் கடந்த 2018 - ம் ஆண்டு பலவித இன்னல்களையும், சிரமங்களையும் கொடுத்து மிகவும் பாடாய்ப்படுத்திவிட்டது. அதற்கு நேர்மாறாக இந்தப் புத்தாண்டு 2019 - ம் ஆண்டு எல்லாவிதத்திலுமே வெற்றிகரமாக அமையும். தொடக்கத்திலேயே சில நல்ல நிகழ்ச்சிகள் நடந்து உங்களை மிகவும் உற்சாகப்படுத்தும்.  

புத்தாண்டு

குறிப்பாக பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு சுபச்செய்திகள் பல வரத்தொடங்கும். தள்ளிப்போன காரியங்கள் பலவும் நல்லவிதமாக முடியும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மாறும். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே பணப் பற்றாக்குறை, கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள், கடன் பிரச்னை என்றிருந்த உங்களின் நிலைமை மாறும். பணவரவு அதிகரித்து நீங்கள் பலருக்குக் கடன் கொடுக்கும் நிலைமை வரும்.

சிம்மம்

குறிப்பாக 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 5 - ம் வீட்டில் வந்து அமரும்போது மனத்தில் மகிழ்ச்சி பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். வேலை தேடியவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளின் திருமணத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். நட்பு வட்டம் விரிவாகும். ஒரு சிலர் திடீர் அரசியல் பிரவேசம் செய்து பெயரும் புகழும் பெறுவார்கள். 

சிம்மம்

13.02.2019 முதல் வருடம் முடியும் வரை ராகு பகவான் உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத்தில் வந்து அமரப்போகிறார். இதனால் வீண்செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனத்தில் புதிய உற்சாகம் பிறக்கும்.  

சனியும், கேது பகவானும் ராசிக்கு 5 -ம் வீட்டிலேயே இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் படிப்பில் அக்கறையில்லாமல் இருந்தால் அவர்களைத் தனிப்பயிற்சிகளுக்கு அனுப்புங்கள். 

வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் வியாபாரம் நன்றாக இருக்கும். இதனால் லாபம் அதிகரிக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது, புதுப்பிப்பது போன்ற காரியங்களெல்லாம் இந்த ஆண்டு சீரும் சிறப்புமாக நடக்கும். அரிசி, பூ, எலக்ட்ரிக்கல், வாகன உதிரிப் பாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், சம்பள பாக்கியும் வந்து சேரும். சக ஊழியர்களால் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகும். ஆனாலும், மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

 

பெண்களுக்கு மனத்தில் இருந்த சோர்வுகள் நீங்கும். வேலைக்கு மனு செய்திருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை அமையும். இல்லத்தரசிகள் புதிதாக வீடு, மனை போன்றவற்றை வாங்கிப்போடுவார்கள். விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் அதிகரிக்கும். வழக்கமாகப் பயிரிடும் பயறு வகைகளிலிருந்து மாற்றுப்பயறுகளைப் பயிரிட்டு நல்ல லாபம் பார்ப்பார்கள். 

2019 - ம் ஆண்டு தொடக்கத்தில் அலைச்சலையும் வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து முன்னேற்றத்துடன் ஆதாயத்தையும் தருவதாக அமையும். 

பரிகாரம்:  விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமணியசுவாமியை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மகிழ்ச்சி பெருகும். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்