அகிம்சைக்காக நெடும்பயணம்! - விழுப்புரத்தில் அருளாசி வழங்கிய ஜைன குரு ஆச்சார்ய ஸ்ரீமஹாஸ்ரமன் | Short news about Jain guru Acharya Shree Mahashraman Yatra

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (26/12/2018)

கடைசி தொடர்பு:14:40 (26/12/2018)

அகிம்சைக்காக நெடும்பயணம்! - விழுப்புரத்தில் அருளாசி வழங்கிய ஜைன குரு ஆச்சார்ய ஸ்ரீமஹாஸ்ரமன்

ஜைன மதத்தின் சுவேதாம்பர தேராபந்த் பிரிவின் 11- வது தலைமை குருவான ஆச்சார்ய ஸ்ரீமஹாஸ்ரமன் (வயது 56) அகிம்சையை வலியுறுத்தி, 2014- ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நெடும்பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று அவர் விழுப்புரம் வந்தடைந்தார். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ஜைன மக்கள் மத்தியில் உரையாற்றி அருளாசி வழங்கினார்.

ஜைன குரு

மகாவீரரால் கி.மு ஆறாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட மதம், ஜைன மதம். அந்த மதத்தில் சுவேதாம்பர தேராபந்த், திகம்பரம் என்று இரண்டு பெரும் பிரிவுகள் உண்டு. இவர்களில் திகம்பரம் பிரிவைச் சேர்ந்தவர்கள்  திசைகளை மட்டுமே ஆடையாகக் கொண்டு வாழ்கிறவர்கள்.  சுவேதாம்பரர்கள், வெண்ணிற ஆடையை உடுத்துபவர்கள். இந்த சுவேதாம்பர தேராபந்த் பிரிவின் 11 - வது தலைமை குருவான ஆச்சார்ய ஸ்ரீமஹாஸ்ரமன், ஜைன மதத்தின் அடிப்படை கோட்பாடான அகிம்சையை வலியுறுத்தி, நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை சென்றவர், அங்கிருந்து நேற்று விழுப்புரம் வந்தடைந்தார். அவருடன் 40 பெண் துறவிகள் உட்பட, மொத்தம் 80-க்கும் மேற்பட்ட துறவிகள் பயணிக்கிறார்கள்.

ஆசார்ய ஸ்ரீமஹாஸ்ரமன்

விழுப்புரத்துக்கு விஜயம் செய்த ஶ்ரீமஹாஸ்ரமன் ஆச்சார்யருக்கு, ஜெயின் சுவேதாம்பர தேராபந்த் சங்கம் சார்பில் ஜவுரிலால் ஜெயின் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அருளாசி வழங்கும் நிகழ்ச்சியில் ஆச்சார்ய ஸ்ரீமஹாஸ்ரமன் உரையாற்றினார். இந்த அருளாசியின்போது, அகிம்சை, நல்லெண்ணம், நன்னெறி ஆகியவற்றைப் பற்றியும்; மனிதனை அழிக்கும் போதையை எதற்காக ஒழிக்க வேண்டும் என்பது குறித்தும் ஜைன மக்கள் மத்தியில் உரையாற்றினார்.  இந்தக் கூட்டத்தில் ஜைன சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று ஆச்சார்யரிடம் உபதேசம் பெற்றனர்.

விழுப்புரம் கூட்டத்துக்குப் பிறகு, ஆச்சார்ய ஸ்ரீமஹாஸ்ரமன் புதுச்சேரிக்குச் செல்கிறார். அங்கிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு, அடுத்த வருடம் ஜூன் வாக்கில் பெங்களூர் சென்றடைகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க