மனத்துக்கு இனியவனாம் கோவிந்தன் புகழைப் பாட எழுந்து வா தோழி! திருப்பாவை - 12 | thiruppavai special article 12th day

வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (27/12/2018)

கடைசி தொடர்பு:10:28 (27/12/2018)

மனத்துக்கு இனியவனாம் கோவிந்தன் புகழைப் பாட எழுந்து வா தோழி! திருப்பாவை - 12

``ராமனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ உறங்குகிறாய். எல்லோரும் எழுந்துவிட்ட பிறகும் உனக்கு மட்டும் ஏனிந்த பேருறக்கம்?" என்று தோழியை எழுப்பப் பாடுகிறாள் கோதை.

மனத்துக்கு இனியவனாம் கோவிந்தன் புகழைப் பாட எழுந்து வா தோழி! திருப்பாவை - 12

``கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.."

`தங்கள் கன்றுகளின் பசிக் குரலைக் கேட்டவுடன் பசுக்கள் தங்கள் மடியிலிருந்து பாலைச் சொரிந்தபடியே அங்குமிங்கும் செல்வதால், அவை சொரிந்த பால் வீட்டு வாசல் முழுவதும் நனைத்துச் சேறாக்கும் அளவுக்கு, கணக்கற்ற பசுக்களை செல்வமாகப் பெற்றவனின் தங்கையே, கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழும்படி, உன் வீட்டு வாசலில் நாங்கள் வந்து நின்றபடி, இலங்கை வேந்தன் ராவணனைக் கொன்ற ராமனின் பெருமையைப் பாடுகிறோம். ஆனால், நீயோ இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கிறாய். எல்லோரும் எழுந்து வந்துவிட்ட பிறகும் உனக்கு மட்டும் ஏனிந்த பேருறக்கம்?' என்று கேட்டு தோழியை எழுப்பப் பாடுகிறாள் கோதை.
`சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான்' என்று இங்கே ஆண்டாள் ராமனின் புகழைப் பேசுகிறாள்.

கிருஷ்ணன் - திருப்பாவை

இந்த வரியில் உள்ள முரணைப் பாருங்கள்.

கோபமே அறியாத ராமன் கோபம் கொண்டான் என்றும், சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை கோமான் என்றும் கூறுகிறாள் கோதை. என்ன காரணம்? தன் மனதுக்கு இனிய மனைவி சீதையைக் கவர்ந்து சென்றதால், ராமன் கோபம் கொண்டதாகக் கோதை கூறுவதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். 

ஆனால், ராவணனைக் கோமான் என்று குறிப்பிடுவது எப்படிச் சரியாகும்? பிறன் மனையைக் கவர்ந்தவனைப் பற்றி ஒரு பெண்ணான ஆண்டாள் இப்படி உயர்த்திச் சொல்லலாமா? அதன் காரணத்தை நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், சீதையைக் கவர்வதற்கு முன்பிருந்த ராவணனைப் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டும்.

 

 

ராவணன் சிறந்த சிவபக்தன். பிரம்மதேவரைக் குறித்துத் தவமியற்றி மூன்று கோடி வாழ்நாள் வாழும் வரம் பெற்றவன். எவராலும் வெல்ல முடியாத வரமும் சேர்த்துப் பெற்றவன். மாவீரன் மட்டுமல்ல; சகல கலைகளிலும் வல்லமை பெற்றவன். தன் நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். தன் கை நரம்பினையே யாழாகக் கொண்டு சாமகானம் இசைத்து சிவபெருமானை மகிழ்வித்தவன். பத்து தலைகளைக் கொண்டவன் என்ற தனிச் சிறப்பும் ராவணனுக்கு உண்டு. இத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்த காரணத்தினால்தான் ராவணனை, `கோமான்' என்று குறிப்பிடுகிறாள் கோதை. 

இப்படி எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டிருந்த ராவணனின் புகழ் அத்தனையும், `பிறன் மனை கவர்தல்' என்ற அவனுடைய அற்பச் செயலால் மங்கிவிட்டது. சீதையின் மேல் தகாத மோகம் கொண்டு அவளைக் கவர்ந்து சென்ற காரணத்தினாலேயே, அவன் தன் அழிவைத் தேடிக்கொண்டான்.

ராமன் சாந்த ஸ்வரூபி; கோபம் என்பதே என்னவென்று அறியாதவன்; தன்னை நம்பியவர்களைக் காப்பாற்றுவதில் சமர்த்தன்; தன் மனைவியைத் தவிர மற்றொரு பெண்ணை ஏறிட்டும் பார்க்காத உத்தம புருஷன். 

அரச தர்மம், ஆபத்து தர்மம், மோட்ச தர்மம் என்று அனைத்தையும் எடுத்துக் காட்டி, ஒரே சொல்; ஒரே பாணம்; ஒரே மனைவி என்று வாழ்ந்து தர்மத்தின் வழி நின்றவன் ராமன். கோபத்தை வென்றவன் என்ற பொருள் தரும், `ஜித் க்ரோத' என்னும் பட்டத்தைப் பெற்றவன் என்கின்றன புராணங்கள்.

கண்ணன் தன் தோழி உடன்

கோபம் என்பதே அறியாத ராமன்கூட, பிறன்மனைக் கவர்தல் என்னும் அபவாதத்தைச் செய்த ராவணனைக் கொல்ல நேரிட்டது. ஏகபத்தினி விரதனாக வாழ்ந்து காட்டிய ராமனுக்கு, பிறன் மனை கவர்தல் என்ற பாவம் அறவே பிடிக்காது. அதன் காரணமாகவே தன் மனைவியைக் கவர்ந்த ராவணனிடம் கோபம் கொண்டு அவனைக் கொன்றான். அதற்கு முன்னோட்டமாக நிகழ்ந்ததுதான் வாலி வதம். அவனும் சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்த பழிக்கு ஆளானவன்தான். 

நம்மைப் போன்றவர்களின் கோபம்தான் நமக்கு அல்லலை ஏற்படுத்துமே தவிர, ராமனைப் போன்ற அவதார புருஷர்களின் கோபம், அல்லவை அகற்றி நல்லவை சேர்க்கும்; அதர்மத்தை அழித்து தர்மம் செழிக்கச் செய்யும் என்பதையே ராமனின் சரிதம் நமக்கு உணர்த்துகிறது.

கண்ணன்

கொண்ட கோபத்தின் பலனாக அதர்மம் அழித்து தர்மம் தழைக்கச் செய்யும் அந்த ராமனை, கண்ணனை, கோவிந்தனைப் பாடி, அவன் திருவடிகளைச் சரணடைந்து அனைத்து நன்மைகளையும் அடைவோம் வாருங்கள் என்று தோழியரை உற்சாகப் பெருக்குடன் அழைக்கிறாள் கோதை.


டிரெண்டிங் @ விகடன்