துலாம் ராசிக்காரர்களே... உறவுகளோடு கூடிமகிழும் ஆண்டு! - 2019 புத்தாண்டு பலன்கள் | Tula aka Thulam astrological benefits for the year 2019

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (27/12/2018)

கடைசி தொடர்பு:16:56 (27/12/2018)

துலாம் ராசிக்காரர்களே... உறவுகளோடு கூடிமகிழும் ஆண்டு! - 2019 புத்தாண்டு பலன்கள்

துலாம் ராசிக்காரர்களே... உறவுகளோடு கூடிமகிழும் ஆண்டு! - 2019 புத்தாண்டு பலன்கள்

நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றுக்காகப் போராடக்கூடிய துலாம் ராசிக்காரர்களான நீங்கள், எப்போது நல்லவர்களின் பக்கமே துணை நிற்பீர்கள். தவறான வழிகளில் திரண்ட செல்வத்தைச் சம்பாதிப்பதைவிட, நியாயமான வழியில் கிடைக்கும் குறைவான வருமானமே போதுமென்று நினைப்பீர்கள். 

புத்தாண்டு

உங்களின் கண் எதிரே நடக்கும் அட்டூழியங்களைக் கண்டு வெகுண்டு எழுந்து போராடுவீர்கள். உங்களுக்கான உரிமைகளையும் நீதியையும் பெற எப்போதும் தயங்கமாட்டீர்கள்.  

உங்களின் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போது இந்த 2019-ம் ஆண்டு பிறப்பதால் எல்லாவிதத்திலும் சிறப்பான ஆண்டாக அமையும். இந்த வருடம் முழுவதும் தங்குதடையற்ற பணப்புழக்கம் இருக்கும்.

உங்களின் ராசிக்கு மூன்றாவது ராசியில் சனி பகவான் இருப்பதால், எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். 
நான்காம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களைப் பாடாகப்படுத்தி வரும் கேது 13.2.19 முதல் வருடம் முடியும்வரை 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். 

துலாம்

உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டைக் கொண்டுவந்து நேர நிர்வாகம், பண நிர்வாகம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகள் தங்களின் பிடிவாதப் போக்கை மாற்றிக்கொள்வார்கள். 
குடும்பத்தில் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் உயரும். எல்லோரிடமும் இங்கிதமாகவும், இதமாகவும் பேசிக் காரியங்களைக் கனகச்சிதமாக முடிப்பீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். 

உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். உங்களின் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வேலைப்பளு அதிகரிக்கும். 

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசிக்கு 3 -ம் வீட்டிலேயே அமர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இளைய சகோதரர் வகையில் செலவுகள் வந்து போகும். அதேவேளையில் மூத்த சகோதரர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்.

வியாபாரத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புதிய ஏஜென்சிகளில் முதலீடு செய்யவும் வியாபாரத்தை விரிவுபடுத்தவும் ஏற்ற தருணமிது.  

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வரவேண்டிய சம்பளபாக்கி தடையில்லாமல் வந்துசேரும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உடனடியாகக் கிடைக்கும். தற்போது பணிபுரியும் நிறுவனத்தைவிட, பெரிய நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று நினைப்பவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை  கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கலாம்.  

மாணவ மாணவிகளுக்கு இது சிறப்பான ஆண்டாகும். சாதித்துக்காட்ட வேண்டுமென்ற உத்வேகம் மனதில் பிறக்கும். அன்றைய பாடங்களை அன்றே செய்து முடிப்பீர்கள். நீட் போன்ற தேர்வுகள் எழுதி வெற்றிபெறும் வாய்ப்பும் சிலருக்கு அமையும். 

துலாம்

பெண்களுக்கு இந்த ஆண்டு சீரும்சிறப்பும் மிக்க ஆண்டாக அமையும். பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு, புதிய நகைகளை வாங்குவீர்கள். ஒரு சிலர் வீடு, மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வீட்டில் இருந்தபடியே புதிதாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். 

விவசாயிகளுக்கு மகசூலை அள்ளித்தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. அரசாங்க நலத்திட்டங்கள் உங்களை வந்து சேரும். பழைய கடன்களைத் திரும்பச் செலுத்துவீர்கள். உங்களின் நீண்ட நாளைய கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு திரிசக்தி அம்மனை வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமை சென்று வணங்குங்கள். பிரச்னைகள் குறைந்து வெற்றி கிடைக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்