146 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனம் தரும் சுனை லிங்கம்! - மகிழ்ச்சியில் புதுக்கோட்டை மக்கள் | lingam darshan after 146 years

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (31/12/2018)

கடைசி தொடர்பு:18:35 (31/12/2018)

146 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனம் தரும் சுனை லிங்கம்! - மகிழ்ச்சியில் புதுக்கோட்டை மக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாமலை. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை எனப் பல மலைகள் உள்ளன. சுனை லிங்கம் உள்ளிட்ட இந்த மலையில்,  பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்தப் பகுதி, தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கும் பகுதியாகும். இங்கிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், கி.பி 7 - ம் நூற்றாண்டிலிருந்து 9 -ம் நூற்றாண்டு வரையிலான பழைமை வாய்ந்தவை. 

சுனை லிங்கம்


இங்கு மேலமலைப் பகுதியில் இருக்கும் விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்குக் கீழ் ஒரு சுனை உள்ளது. சுனைக்கு மேற்பகுதியில் தொண்டைமான் குறித்த இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அந்தச் சுனையினுள் ஒரு லிங்கம் இருப்பதாகவும், இதற்கு முன் அந்த லிங்கத்தை 1872-ம் வருடம், மக்கள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த கல்வெட்டுச் செய்தியும் இங்கு காணப்படுகிறது. அதன்பின் இந்தச் சுனை, எப்போதும் நீர் நிரம்பியே காணப்படும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், வறட்சியின் காரணமாக விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பொருட்டு இந்தச் சுனை நீரை இறைக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதைப் பாதியிலேயே தொல்லியல் துறை தடுத்து நிறுத்திவிட்டது. அதன்பின், இப்போது தொல்லியல் துறை அனுமதியோடு மோட்டார்களைக் கொண்டு சுனை நீரை இறைக்கும் பணி தொடங்கியுள்ளது.

 

சுனை லிங்கம்


சுமார் 20 அடிக்கும் மேல் ஆழம் இருக்கும் இந்தச் சுனை நீரை வெளியேற்றும் பணி இன்று இரவு அல்லது  நாளை காலை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலப் புத்தாண்டான நாளை, சுனை லிங்க தரிசனமும் வழிபாடும் நடைபெற இருக்கிறது.

தொல்லியல் துறை, அனுமதி மற்றும் வழிபாடு வரையிலான செயல்களை, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'  அமைப்பைச் சார்ந்த பார்த்திபன், முருகன், எடிசன் ஆகியோர் முன்னெடுத்துச் செய்கின்றனர்.  இரண்டு மாதங்களுக்கு முன், சித்தன்னவாசலில் இதே போன்ற ஒரு சுனைலிங்க வழிபாட்டை நிகழ்த்தினர். 146 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்படும் லிங்கத்தைக் கண்டு வழிபட பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க