``அந்த 2 பெண்களும் இந்திய அரசியலமைப்பைக் காப்பாற்றியிருக்காங்க'' - மனிதி அமைப்பு | Sabarimala: Bindu, Kanakadurga entered temple today

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (02/01/2019)

கடைசி தொடர்பு:15:00 (02/01/2019)

``அந்த 2 பெண்களும் இந்திய அரசியலமைப்பைக் காப்பாற்றியிருக்காங்க'' - மனிதி அமைப்பு

`` ந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே காத்து நின்ற பெண்களாக பிந்து, கனக துர்கா ஆகிய இருவரும் இருக்கிறார்கள். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது.''  சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தது குறித்து மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

பிந்து : கனகதுர்கா

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும், சபரிமலையில் ஐம்பது வயதுக்குக் குறைவான பெண்கள் வழிபடுவதற்கு எதிராக கடும் நெருக்கடிகள் தொடர்ந்து வந்தன.  இந்த நிலையில், இன்று அதிகாலை கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இருவருமே ஐம்பது வயதுக்குக் குறைவானவர்கள். 

பம்பையிலிருந்து போலீஸாரின் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் மாற்று வழியில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று இரவு மலை ஏறத் தொடங்கிய இவர்கள் இன்று அதிகாலை 3:45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து தரிசனத்தை முடித்துவிட்டு காலை 5 மணிக்குள் கீழே சென்றுள்ளனர். 

சபரிமலை

இவர்கள் இருவரும் கடந்த மாதம் சபரிமலைக்கு வந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதி அமைப்பு செல்விஒருங்கிணைப்பில்தான் சபரிமலை சென்றனர். அப்போது திருப்பி அனுப்பப்பட்ட இவர்கள் தற்போது தரிசனம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வியிடம் பேசினோம்,

`` மனிதி அமைப்பின் சார்பாக ஒருங்கிணைந்த குழுவில் கேரளாவைச் சேர்ந்த முப்பது பெண்கள் இருந்தார்கள். அவர்களில் பிந்து மற்றும் கனக துர்காவும் இருந்தார்கள். எங்களோடு அவர்கள் சபரிமலைக்கு வந்தபோது  போலியான மருத்துவக் காரணங்கள் சொல்லப்பட்டு பம்பையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள். அந்த நேரத்தில் பிந்துவின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது. கடும் நெருக்கடிகளுக்குப் பின்னும் விடா முயற்சியோடு இருவரும் ஐயப்பனை தரிசனம் செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

மனிதி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காத்து நின்ற பெண்களாக பிந்துவும், கனக துர்காவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மனிதி அமைப்பின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் '' என்றார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க