வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (03/01/2019)

கடைசி தொடர்பு:16:51 (03/01/2019)

சென்னையில் தொடங்கி, ஶ்ரீரங்கம் வரை `சக்தி புனித யாத்திரை'... இரண்டு நாள்களில் ஆறு திருமால் தலங்கள் தரிசனம்!

சக்திவிகடன் சார்பில் `மார்கழி தரிசனம்' என்னும் யாத்திரை வரும் 11/1/19 மற்றும் 12/1/19 ஆகிய தினங்களில் நடைபெறஉள்ளது. சென்னையிலிருந்து புறப்பட்டு பூலோக வைகுண்டம் எனப்படும் ஶ்ரீரங்கத்தில் முடிவடையும்

சென்னையில் தொடங்கி, ஶ்ரீரங்கம் வரை `சக்தி புனித யாத்திரை'... இரண்டு நாள்களில் ஆறு திருமால் தலங்கள் தரிசனம்!

றை வழிப்பாட்டுக்கு உகந்த மாதமான மார்கழியில், பழைமையும் பெருமையும் வாய்ந்த பெருமாள் திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வது விசேஷமாகும். சக்தி விகடன் சார்பில் `மார்கழி தரிசனம்' என்னும் யாத்திரை வரும் 11/1/19 மற்றும் 12/1/19 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. சென்னையிலிருந்து புறப்பட்டு பூலோக வைகுண்டம் எனப்படும் ஶ்ரீரங்கத்தில் முடிவடையும் இந்த யாத்திரையில் சிறப்புமிக்க ஆறு திருமால் வழிபாட்டுத் தலங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆறு திருக்கோயில்களின் சிறப்புகள்... 

ராஜபோக வாழ்வு தரும் திருமலைவையாவூர் அருள்மிகு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள்

சென்னையிலிருந்து புறப்படும் இந்த யாத்திரை முதலாவதாக, செங்கல்பட்டிலிருந்து வேடந்தாங்கலுக்குச் செல்லும் சாலையில் 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள `திருமலைவையாவூர்' தலத்தைச் சென்றடையும். திருமலைவையாவூருக்குத் தென் திருப்பதி என்றும் பெயர் உண்டு.

சக்தி யாத்திரை

திருமலைவையாவூரில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளின் திருநாமம் அருள்மிகு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள். 
சஞ்சீவி மூலிகையை மலையோடு பெயர்த்து வந்த அனுமன், மலையைக் கீழே வைக்கக் கூடாது என்ற கட்டாயத்தால் வலது கரத்தில் உள்ள மலையை இடது கரத்தில் மாற்றி இங்குள்ள பெருமாளை வழிபட்டாராம். அதனால் இந்தத் தலம் (சிரஞ்சீவி) மலை வையாவூர் என்றானது. பெருமாள், அலமேலு மங்கை, மகாலட்சுமி ஆகியோரைத் தரிசிக்க திருப்பதி, திருச்சானூர், கரவீரபுரம் என மூன்று இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால், திருமலைவையாவூரில் மூவரையும் ஒருங்கே தரிசிக்கலாம். 
இங்கு, கையில் செங்கோலுடன் காட்சி தரும் சீனிவாசப் பெருமாள் ராஜபோக வாழ்வைத் தரக்கூடியவர். நம் வாழ்வில் அனைத்துச் செல்வவளமும் அளிக்கும் திருத்தலம் இது.


மூலவர் : அருள்மிகு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தாயார் : அலமேலு மங்கை, மகாலட்சுமி

சக்தி யாத்திரை

காரிய வெற்றி அளிக்கும் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதப் பெருமாள்


திருமலைவையாவூரின் பிரசன்ன வேங்கடேசப் பெருமாளை தரிசித்த பிறகு தொடங்கும் யாத்திரை அடுத்து சென்றடைய இருக்கும் தலம் செஞ்சி சிங்கவரம். செஞ்சியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம். இந்தத் தலத்தின் இறைவன் அருள்மிகு ரங்கநாத பெருமாள். 
இந்தக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். பிரகலாதனின் விருப்பத்தின்படி பெருமாள் இங்கே சயனக்கோலத்தில் ரங்கநாதராகக் காட்சி கொடுத்ததாகத் தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள ரங்கநாயகி தாயாரின் பின்புறம் வலது மூலையில் உக்கிரமான துர்கையும் வீற்றிருக்கிறாள். அந்த துர்கைதான் விக்கிரமாதித்தன் தரிசித்த துர்கை என்று சொல்லப்படுகிறாள். 
மகேந்திரவர்மரின் தந்தையான ஸ்ரீசிம்மவிஷ்ணு இங்கே பள்ளி கொண்டிருந்த ரங்கநாதரைத் தரிசித்துப் பேறுபெற்றாராம். செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜாவின் குலதெய்வம் இந்த ரங்கநாதர். தேசிங்கு ராஜாவிடம் பேசியதால் இவர் பேசும் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். அந்நியர் படையெடுப்பின் போது திருவரங்கப் பெருமாளின் உற்சவர் சிலை சில காலம் இங்கே இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்தத் தலத்தின் பேசும் பெருமாளான ரங்கநாதர் காரிய வெற்றியை அளிக்கும் தயாபரன். தாயார் ரங்கநாயகி மங்கலங்கள் அருளும் அதிர்ஷ்ட நாயகி. துர்கை சகல பயங்களையும் நீக்கி தைரியம் அளிப்பவள்.  


மூலவர் : அருள்மிகு ரங்கநாதர் தாயார் : ரங்கநாயகி தாயார்

சக்தி யாத்திரை

சகல தோஷம் நீக்கும் காருவள்ளி அருள்மிகு பிரசன்ன வேங்கட ரமண பெருமாள்

அடுத்துத் தரிசிக்க இருக்கும் திருத்தலம் சேலம் ஓமலூர் தாலுகாவில் உள்ள காருவள்ளி என்னும் சின்ன திருப்பதி. இந்த ஆலயத்தின் மூலவர் அருள்மிகு பிரசன்ன வேங்கடரமணப் பெருமாள்
திருப்பதி பெருமாள் ஒரு முறை தலைக்கு எண்ணெய்த் தேய்த்து குளிக்கலாம் என்று எண்ணி அரப்புத் தூள் தேடி இங்கு வந்து அமர்ந்துவிட்டார் என்கிறார்கள். திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனையை முடிக்கிறார்கள். இந்தத் திருத்தலத்தில் உள்ள பெருமாள் இடது புறம் சற்று திரும்பியவாறு திருமலை திருப்பதியைப் பார்த்த வண்ணம் உள்ளார்.
ஆஜானுபாகுவான வேங்கடரமணப் பெருமாளை வழிபட வேண்டிய வரம் கிடைக்கும். முக்கியமாக சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் அருளும் திருத்தலம் இது.

மூலவர் : அருள்மிகு பிரசன்ன வேங்கடரமண பெருமாள் தாயார் : பத்மாவதி தாயார்

சக்தி யாத்திரை

திருமண வரமருளும் பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி

சேலத்திலிருந்து புறப்படும் பயணம் அடுத்து துறையூரை அடையும். துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை. அங்குக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி.
திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள் இங்கே கரிகால் சோழனின் பேரனுக்கு பிரசன்னமாகி, ஸ்ரீசக்ராயுதபாணியாக, திருமணக் கோலத்தில் திருக்காட்சி அருளினாராம். திருப்பதியைப் போலவே இந்தத் தலமும் ஏழு மலைகள் சூழ அமைந்துள்ளது. அதே போல இந்த மலைக்குக் கீழே கோவிந்தராஜ பெருமாள் கோயிலும், சுமார் 5 கி.மீ. தொலைவில் நாகலாபுரமும் அமைந்து திருப்பதியை போலவே இருப்பதால், `தென் திருப்பதி' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தலத்தின் இறைவனைத் திருமண வரமருளும் கல்யாண வரதர் என்பர். இங்குள்ள நரசிம்மர், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களையும் விலக்குபவர். தாயாரின் குங்குமப் பிரசாதம் மாங்கல்ய பலத்தைக் கொடுக்கும். எனவே இந்தத் தலத்தில் வழிபடத் தடைகள் நீங்கி திருமணம் நிச்சயமாகும்.
பௌர்ணமி கிரிவலமும் இங்கு விசேஷமாக நடைபெறுகிறது. 

மூலவர் : அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி தாயார் : பத்மாவதி தாயார்

சக்தி யாத்திரை 

மனநோய் நீக்கி மங்களம் அருளும் குணசீலம் அருள்மிகு வேங்கடாசலபதி


திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். பெருமாள் மலையில் வழிபட்டு யாத்திரை அடையும் அடுத்த திருத்தலம் குணசீலம் அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி கோயில்.
குணசீலர் என்ற பக்தருக்குப் பெருமாள் காட்சி தந்த தலம் மத்திய திருப்பதி என்று போற்றப்படுகிறது. இந்தத் தலத்தில் மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில் கருடசேவை நடைபெறும். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, சாளக்கிராம மாலை அணிந்து, தங்கச் செங்கோலுடன் காட்சி தரும் இந்தப் பெருமாளை தரிசித்து வழிபட, சுக்கிர பலம் கூடும் என்பார்கள். 
மனதில் எந்த நேரமும் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள், எதிர்காலம் குறித்து குழம்பும் அன்பர்கள், மனதில் இனம் புரியாத பயம் கொண்டவர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்தால் சகல பயங்களும், நோய்களும் நீங்கும். இங்கு வழங்கப்படும் சிறப்பு தீர்த்தம் மனநோய்களைத் தீர்க்கக்கூடியது. பெருமாளுக்கு அபிஷேகித்த தீர்த்தமும் சந்தனமும் இங்கு விசேஷமானது.

மூலவர் : அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி தாயார் : சுவாமியே பிரதானம் என்பதால் இங்கு தாயாருக்குத் தனிச் சந்நிதி இல்லை

 

சக்தி யாத்திரை

சகல சௌபாக்யமும் வழங்கும் பூலோக வைகுண்டம் ஶ்ரீ ரங்கம் ரங்கநாதர் சுவாமி 

யாத்திரையின் நிறைவான தரிசனம் திருவரங்கம். பூலோக வைகுந்தம் என்றும் திவ்ய தேசங்களில் முதன்மையானது என்றும் போற்றக்கூடிய திருத்தலம் ஶ்ரீரங்கம். உலகின் இரண்டாவது பிரமாண்ட ஆலயம் இது. எண்ணற்ற சந்நிதிகள், புராணங்கள் கொண்ட தமிழகத்தின் பொக்கிஷம். 21 கோபுரங்கள், 43 பெரிய சந்நிதிகள் எனப் பரந்துவிரிந்த கோயில் இது.
இந்தத் தலத்தின் இறைவன் அருள்மிகு ரங்கநாதர். மார்கழியில் ரங்கனை தரிசித்தால் பரமபதம் நிச்சயம் என்பர் பெரியோர். 11 ஆழ்வார்கள் கொண்டாடிய திருத்தலம் இதுவொன்றே.  
இங்குள்ள நவ தீர்த்தங்கள், சகல பாவங்களையும் நீக்கக் கூடியது. ரங்கனை தரிசித்தால் மற்ற 107 திவ்ய ஸ்தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். இந்திர லோக வாழ்வு கூட வேண்டாம், அரங்கனைப் பாடும் பாக்கியம் போதும் என்பார் தொண்டரடிப்பொடியாழ்வார். ஆயிரம் நாவுகளை உடைய ஆதிசேஷனாலும் சொல்ல முடியாத பெருமைகள் கொண்ட திருவரங்கம் அரங்கப் பெருமானை தரிசிக்க, அதன் புண்ணிய பலன் நம் சந்ததியினருக்கும் ஒரு கவசமாக விளங்கும். 

மூலவர் : ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் தாயார் : ரங்கநாயகி தாயார்

வாருங்கள், திருத்தலங்களை தரிசித்து இறையருளைப் பெறுவோம்.

மேலும் விவரங்களுக்கு லிங்கை கிளிக் செய்யவும் 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்