வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (05/01/2019)

கடைசி தொடர்பு:21:30 (05/01/2019)

`அலகாபாத் கும்பமேளா வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு!’ - சென்னையில் உ.பி. அமைச்சர் பேச்சு

கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் இணைவதால், திரிவேணி சங்கமம் என்று பிரசித்திபெற்ற அலகாபாத்தில் நடைபெறும் மகாகும்பமேளா அதிக சிறப்பு வாய்ந்தது.

பாற்கடலைக் கடைந்து பெறப்பட்ட  அமுத கலசம் அசுரர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, திருமால் மோகினி ரூபம் எடுத்து அதைக் கொண்டுசென்றார். அப்போது, அந்த அமுத கலசத்திலிருந்து நான்கு துளி அமுதம் அலகாபாத் (தற்போதைய பிரயாக்ராஜ்), நாசிக், உஜ்ஜைனி, ஹரித்வார் ஆகிய நான்கு இடங்களில் விழுந்ததாக நம்பப்படுகிறது. அமுதம் விழுந்த நாளில்  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாகும்பமேளா நடத்தப்படுவது வழக்கம்.
 

vizha

கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் இணைவதால், 'திரிவேணி சங்கமம்' என்று பிரசித்திபெற்ற அலகாபாத்தில் நடைபெறும் மகாகும்பமேளா அதிக சிறப்பு வாய்ந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளா, 2013-ம் ஆண்டு நடைபெற்றது. அது தவிர்த்து ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அர்த்த கும்பமேளா விழாவும் அங்கு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, அர்த்த கும்பமேளா தொடங்க உள்ளது. இது தொடர்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் கலால் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

minister

"கும்பமேளா என்பது ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சி மட்டுமல்ல; நமது நாட்டின் பாரம்பர்யத்தை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல், மார்ச் 4-ம் தேதி வரை கும்பமேளா நடைபெறும். நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் என 16 முதல் 20 லட்சம் பேர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்த்த கும்பமேளாவில் பங்கேற்பவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக, சிறப்புக் காவல் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவர். அர்த்த கும்பமேளா நடைபெறும் பகுதி முழுவதும் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

கும்பமேளா

இதுதவிர, சாலைகள், மேம்பாலங்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சுற்றுலாத்துறையின் சார்பில் மேம்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநில அரசின் சார்பில், ரூ.2,800 கோடி உள்பட மொத்தம் ரூ.4,300 கோடி செலவில் கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்றார் அவர்.