திருமணத் தடையை அகற்றி சகல செல்வமும் அருளும் வாரணவாசி கல்யாணசுந்தர விநாயகர்! | Story about Kalyana Sundara Vinayagar Temple at Varanavasi near Ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (08/01/2019)

கடைசி தொடர்பு:17:36 (08/01/2019)

திருமணத் தடையை அகற்றி சகல செல்வமும் அருளும் வாரணவாசி கல்யாணசுந்தர விநாயகர்!

இங்கு முக்கிய மூர்த்தி விநாயகர் என்பதால், விநாயகர் சதுர்த்தி இங்கு விமரிசையாக நடைபெறும். சதுர்த்தி நாள் அன்று, நான்கு கால பூஜைகள் விசேஷமாக நடைபெறும். நான்கு கால பூஜைகளிலும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெறும்.

திருமணத் தடையை அகற்றி சகல செல்வமும் அருளும் வாரணவாசி கல்யாணசுந்தர விநாயகர்!

வினைகளை அகற்றுபவர் விநாயகர். எந்த ஒரு வழிபாடும் அவரிடமிருந்துதான் தொடங்கும். விநாயகரைத் தொழுது தொடங்கும் காரியங்கள் சித்தியாகும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட விநாயகரைத் தொழ பெரும் சிரமப் படவும் தேவையிருக்காது. மண்ணிலோ மஞ்சளிலோ பிடித்து வைத்தாலே விநாயகர் அதில் ஆவாஹனம் ஆகிவிடுவார். அவருக்கு எருக்கம்பூ மாலையே போதுமானது. பெரிய ஆலயங்கள் கோபுரங்கள் தேவையில்லை. அரசமரத்தடியில் குளக்கரையில் அமர்ந்து அருள் புரிவார். மேலும் விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாள்களில்தான் அவரை வழிபடவேண்டும் என்பதும் அவசியமில்லை. ஒவ்வொருநாளுமே அவரை வழிபடுவதற்கு உகந்த நாள்தான். நாம் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், அந்தக் கோயிலில் இருக்கும் விநாயகரை வழிபட்ட பிறகே மூலவரை வழிபடச் செல்லவேண்டும் என்பது நியதி. 

`குழந்தை சுவாமி' என்று காஞ்சிப் பெரியவரால் கொண்டாடப்பட்ட விநாயகர், பக்தர்களின் கனவில் தோன்றி அருள்பாலித்த நிகழ்வுகளும், தான் மறைந்திருக்கும் இடங்களைக் குறிப்பால் உணர்த்தி கோயில் கண்டருளிய நிகழ்வுகளும் ஏராளம். அப்படி விநாயகர் ஒரு பக்தரின் கனவில் தோன்றி, தான் மறைந்திருக்கும் இடத்தை உணர்த்திக் கொண்ட திருக்கோயில்தான், அரியலூருக்கு அருகிலுள்ள வாரணவாசி அருள்மிகு கல்யாணசுந்தர விநாயகர் ஆலயம்.

தஞ்சை ராஜராஜசோழன் மன்னனின் அரசவையில் கல்யாணசுந்தரம் என்பவர் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார். அவர் விநாயகக் கடவுளின் தீவிர பக்தர். தினமும் அவர் விநாயகரைத் தன் மனதில் வழிபட்டு வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய விநாயகப் பெருமான்,

விநாயகர்  

``என் தந்தையுடன் இணைந்த அம்சத்தில், வாரணவாசி கிராமத்தில் உசிலை மரத்தடியில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் என் திருவுருவச் சிலையைக் கண்டெடுத்து, அங்கு ஒரு கோயிலை எழுப்பி பிரதிஷ்டை செய்து வணங்கி வா. உனக்குச் சகல செளபாக்கியமும் கிடைக்கும்” எனச் சொல்லி மறைந்தாராம். 

உடனே கண் விழித்த கல்யாண சுந்தரம், இறைவனின் கட்டளையை நினைவுகூர்ந்து, கனவில் விநாயகப் பெருமான் கூறிய திசை நோக்கிப் பயணித்தார். இறைவன் சொன்னது போலவே அவர் காட்டிய திசையில் ஓர் உசிலை மரம் இருந்தது. அந்த மரத்தின் அடிப்பகுதியைத் தோண்டிப் பார்க்க ஏற்பாடு செய்தார். சில அடிகள் தோண்டியதும் விநாயகக் கடவுளின் திருமேனி தரிசனம் அளித்தது. உடனே அதை வெளிக்கொணர்ந்து வழிபட்டு மகிழ்ந்தார். கனவில் இறைவன் சொன்னதுபோலவே அந்த மரத்தின் அடியிலேயே விநாயகருக்கு ஓர் அழகிய ஆலயம் எழுப்பினார். இந்தத் தல இறைவனுக்கும் கல்யாண சுந்தர விநாயகர் என்றே பெயர் விளங்கிற்று. 

விநாயகர் ஆலயம்

கல்யாணசுந்தரத்தின் கனவில், இறைவன் தன் தந்தையுடன் இணைந்த அம்சத்தில் இருப்பதாகக் கூறவே, ஊர் பக்தர்களும், கல்யாணசுந்தரத்தின் வாரிசுகளும் ஒரு சிவலிங்க பீடத்தை எழுப்பி, அதன் மேல் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். 
இந்தக் கோயிலின் நடுநாயகமாகக் காட்சி அளிக்கிறார் கல்யாணசுந்தர விநாயகர். சுதைச் சிற்பத்தில் 2 குதிரைகள் இழுத்துச் செல்லும் தேரின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சந்நிதியில் லிங்க பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஆனைமுகத்தோன். 

தலவிருட்சங்களாக நீண்டு வளர்ந்துள்ளன அரசு மற்றும் வேம்பு மரங்கள். இந்த மரங்களின் அடியில் கற்பகவிநாயகர் ராகு, கேதுவுடன் அமர்ந்து பக்தர்களுக்கு நல்லருள் புரிகிறார். சுவாமி விஸ்வநாதர் அன்னை விசாலாட்சி சமேதராக ஒரே சந்நிதியில் அம்மையப்பனாகக் காட்சி கொடுக்கின்றனர். பரிவார மூர்த்திகளாக சண்டிகேஸ்வரர், கால பைரவர், பாலமுருகன், குருதட்சிணா மூர்த்தி, நவகிரக நாயகர்கள் முதலிய மூர்த்திகளும் உள்ளனர்.   

விநாயகர் ஆலயம்

இந்தத் தலத்தின் விருட்சங்களான அரசு, வேம்பு மரங்களில் மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சள் சேர்த்து அமாவாசை அன்று கட்டி வழிபட திருமணத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. அதே போன்று மஞ்சள் துணியில் கோயில் வளாகத்தில் இருந்து ஒரு சிறிய கல்லை எடுத்து அதனுடன் வெற்றிலை பாக்கு வைத்து இம்மரத்தில் தொட்டில் போலக் கட்டினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். 

பல பக்தர்கள் தாங்கள் புதிதாக இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கியவுடன், இந்தக் கோயிலின் முன்பு வாகனத்தை நிறுத்தி, வாகனத்தின் சாவியை கல்யாணசுந்தர விநாயகரின் பாதத்தில் வைத்து பூஜை செய்கிறார்கள். விபத்துகள், சேதம் ஏதும் இல்லாமல் நிழல் போல கல்யாண சுந்தரரின் அருள் காக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. 

விநாயகர் ஆலயம்

சங்கடஹரசதுர்த்தி நாளில், இந்தக் கோயிலுக்கு வந்து, விநாயகருக்குப் பால் அபிஷேகம் செய்து, வெண்மை நிற வேஷ்டி, துண்டு உடுத்தி, ரோஜா மாலை அணிவித்து, லட்டுப் பிரசாதம் நைவேத்யம் செய்து, நெய்தீபமும் ஏற்றி அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் தடையில்லாமல் நிறைவேறி, வெற்றி கிடைக்கும் என்கின்றனர் பலன் பெற்ற பக்தர்கள். 

இங்கு முக்கிய மூர்த்தி விநாயகர் என்பதால், விநாயகர் சதுர்த்தி இங்கு விமரிசையாக நடைபெறும். சதுர்த்தி நாள் அன்று, நான்கு கால பூஜைகள் விசேஷமாக நடைபெறும். நான்கு கால பூஜைகளிலும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். அன்று மாலையில், விநாயகருக்குச் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு விசேஷ தீபாராதனையும் நடைபெறும்.  மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியும் இங்கே மிகவும் விசேஷம்.

சகல நலங்களையும் அருளும் கல்யாண சுந்தர விநாயகப் பெருமானை வாய்ப்பு கிட்டும்போது அனைவரும் தரிசித்து வழிபடுவோம்.


டிரெண்டிங் @ விகடன்