கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தானம் கட்டிய கோயில்! - ஜனவரி 27-ல் கும்பாபிஷேகம் | kumari tiruppathi temple kumbabishekam to be held in January 27

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (10/01/2019)

கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தானம் கட்டிய கோயில்! - ஜனவரி 27-ல் கும்பாபிஷேகம்

திருமலை  திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் ரூ.22.50 கோடி செலவில் புதிதாக வேங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. 

டெ

திருப்பதியில் அமைந்திருக்கும் வேங்கடாசலபதி ஆலயம் புகழ்பெற்றது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வேங்கடாசலபதியின் ஆலயங்களை அமைத்து, தகவல் மையங்களையும்  திறந்து திருத்தொண்டாற்றி வருகிறது. அந்த அடிப்படையில் பிரசித்தி பெற்ற குமரியம்மன் ஆலயம் அமைந்திருப்பதும், சிறந்த சுற்றுலாத்தலமுமான கன்னியாகுமரியில் திருப்பதி வேங்கடாசலபதியின் ஆலயம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

டுட்

இந்தக் கோயிலின் மூலஸ்தானம், நடை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் திருப்பதி கோயிலைப் போலவே வடிவமைக்கப்பட்டு, பக்தர்களுக்குத் திருப்பதி சென்று தரிசனம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் கோயில் பணிகளை தேவஸ்தான அலுவலர்களான போலோ பாஸ்கர்,  ஸ்ரீகிருஷ்ணா, மற்றும் கோபிநாத் ரெட்டி ஆகியோர் பார்வையிட்டனர். 

திருப்பதி

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 

``இந்தக் கோயிலில் ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. தொடர்ந்து 5 நாள்கள் இந்த பூஜைகள் நடைபெறும். ஜனவரி  27-ம் தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்ததும் பகல் 12.30 மணிக்கு பக்தர்கள் தர்ம தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் . அதன் பிறகு ஆலயத்தில் ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் வழக்கமாக நடைபெறும்" என்று  தெரிவித்தனர்.

 தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி உள்ளிட்டோர் ஆலயத்தை பார்வையிட்டு, சம்ப்ரோக்ஷணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். கோயில் சம்ப்ரோக்ஷண விழாவில் தமிழக, ஆந்திர முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.