ஜனவரி 15-ல் லட்சக்கணக்கானோர் சங்கமிக்கும் `அர்த்த கும்பமேளா'.. அலகாபாத்தில் ஏற்பாடுகள் தீவிரம்! | Ardh kumbh aka Kumbha Mela in Allahabad... Preparations on full swing

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (11/01/2019)

கடைசி தொடர்பு:13:43 (11/01/2019)

ஜனவரி 15-ல் லட்சக்கணக்கானோர் சங்கமிக்கும் `அர்த்த கும்பமேளா'.. அலகாபாத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

2013-ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவுக்குப் பின்னர் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அர்த்த கும்பமேளா அலகபாத்தில் ஜனவரி 15 முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜனவரி 15-ல் லட்சக்கணக்கானோர் சங்கமிக்கும் `அர்த்த கும்பமேளா'.. அலகாபாத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

ளைகட்டத் தொடங்கிவிட்டது உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரம். நாடெங்கிலுமிருந்து சாதுக்களும் பக்தர்களும் அலகாபாத் நோக்கிக் குவியத்தொடங்கிவிட்டனர். இன்னும் சில தினங்களில் கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது இந்தியாவின் மாபெரும் ஆன்மிக சங்கமத்தில் ஒன்றான அர்த்த கும்பமேளா. 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாகும்பமேளா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அலகாபாத்தில் 2013-ம் ஆண்டு மகாகும்பமேளா நடைபெற்றது. 

கும்பமேளா

அதைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளா வரும் தை மாதம் முதல் தேதி தொடங்க இருக்கிறது.

பாற்கடலைக் கடைந்து பெற்ற அமுதக் கலசம் அசுரர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக மோகினி ரூபம் எடுத்து திருமால் அதைக் கொண்டு சென்றார். அப்போது அந்த அமுதக் கலசத்திலிருந்து நான்கு துளிகள் அலகாபாத் (தற்போது பிரக்யாராஜ்), நாசிக், உஜ்ஜையினி, ஹரித்வார் ஆகிய நான்கு இடங்களில் விழுந்ததாக நம்பப்படுகிறது. அமுதம் விழுந்த இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடத்தப்படுவது வழக்கம். 

கும்பமேளா

அமுதம் சிதறியதாகக் கூறப்படும் இடங்களில் உள்ள நீர்நிலைகளில் கும்பமேளா நடைபெறும் புண்ணிய நாளில் அமுதம் பொங்குவதாகவும், அன்றைய தினம் நீராடுவது எல்லாவித பாவங்களையும் நீக்கி நற்பலனைத் தரும் என்பதும் ஐதீகம். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் இணைவதால் `திரிவேணி சங்கமம்' என்று பிரசித்தி பெற்ற அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவில் நீராடுவது மிகவும் புண்ணியம் என்று கருதப்படுகிறது. 

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அர்த்த கும்பமேளா ஜனவரி 15-ம் தேதி தொடங்க உள்ளது. மார்ச் 4-ம் தேதி வரை நடைபெற உள்ள கும்பமேளாவுக்கென்று ஓராண்டாகவே உத்தரப் பிரதேச அரசின் சார்பில் நடைபெற்று வந்த ஏற்பாடுகள் நிறைவடையும் தருணத்தில் உள்ளன.

கும்பமேளா

அலகாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா நடைபெற உள்ள பகுதியில் அமைந்திருக்கும் கட்டடங்கள், மரங்கள் அனைத்திலும் சுமார் 300 சுவரோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. புராணங்களில் கூறப்படும் முக்கிய நிகழ்வுகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு வருகின்றன. ராமன், சீதை, அனுமான் ஆகிய கடவுள்களின் ஓவியங்களும் கண்கவரும் வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன. சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ள கட்டடங்கள் காண்பதற்கு மிகப்பெரிய கோயில் போன்று தோற்றமளிக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த ஓவியர்களும் இந்தப் பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் மாதத்திலிருந்தே ஓவியம் வரையும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

3,200 ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைபெற உள்ள கும்பமேளாவில் 16 முதல் 20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் கும்பமேளாவுக்கு வருகை தரவுள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டும் 5,000 மேற்பட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர். 

நிகழ்வு

கும்பமேளா, மனிதக்குலத்தின் கலாசாரப் பாரம்பர்ய நிகழ்வு என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்க உள்ளதால், வர்த்தக ரீதியான முன்னேற்பாடுகளும், சுற்றுலா சார்ந்த முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. கும்பமேளா சமயத்தில் அலகாபாத் பகுதிக்கு வந்து குவியும் மக்கள் தங்குவதற்காக தற்காலிகக் கூடாரங்கள், வில்லாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாநில அரசின் சார்பில் 20,000 பேர் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. வரவேற்பறை, சாப்பாட்டு அறை, படுக்கையறை, கழிவறைகளோடு கூடிய சொகுசு தற்காலிக வில்லாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தங்குவதற்கு ஒருநாள் கட்டணமாக 35,000 ஆயிரம் செலுத்த வேண்டும். டீலக்ஸ் வில்லாக்களுக்கு 13,000, லக்ஸரி வில்லாக்களுக்கு 18,000 செலுத்தி ஒருநாள் தங்கலாம். இவற்றில் 80 சதவிகித வில்லாக்களுக்கான முன்பதிவு இப்போதே முடிந்துவிட்டதாம். வெளிநாடு இந்தியர்களே இந்த வில்லாக்களை அதிகம் பதிவு செய்திருக்கின்றனர்.

நிகழ்வு

இதுதவிர, பலவகையான உணவகங்கள், கிராமிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், 200 கலாசார நிகழ்வுகள், லேசர் ஷோ, விற்பனையகங்கள், கண்காட்சி எனப் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற உள்ளன.
பக்தர்களின் வசதிக்காக சாலைகள், மேம்பாலங்கள், குடிநீர் வசதி, மின்சார வசதி என அனைத்தும் மாநில அரசின் சார்பில் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா நடைபெறும் அலகாபாத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 9 மேம்பாலங்கள் 14 மாத இடைவெளியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 6 ரயில்வே தடங்கள் நான்கு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன, அலகாபாத் நீதிமன்றத்தின் முன்பு 1,325 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 671 மக்கள் நலத்திட்டங்கள் இதற்காக பிரத்யேகமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 

பணியாளர்கள்

கும்பமேளா நடைபெறும் பகுதியில் `ஹெலிபேட்' உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்கள் பொழுதுபோக்குக்காகச் சிறிய ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கும்பமேளா தயாரிப்புப் பணிகளுக்கென்று மாநில அரசின் சார்பில் ரூ. 2,800 கோடி உட்பட மொத்தம் ரூ. 4,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுச் செலவிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச அரசின் சார்பில் கும்பமேளா நடைபெறும் இடத்தில் ஒரு புதிய நகரமே கட்டமைக்கப்பட்டுள்ளது. 250 கி.மீ. தூரத்தில் 22 மிதவைப் பாலங்களுடன் இந்தப் புதிய நகரம் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம் இதுதான். கும்பமேளா நடைபெறும் இடத்தில் 40,000 எல்ஈடி விளக்குகள், வை-ஃபை வசதி, 1,22,000 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பமேளா நடைபெறும் பகுதியும், நதிகளும், நதிக்கரைகளும் மாசுபடாமல் இருக்க 20,000 குப்பைத் தொட்டிகள், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காகச் சிறப்புக் காவல்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழா நடைபெறும் இடத்தில் 1,400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பக்தர்கள்

கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து விளக்குவதற்காக அண்மையில் சென்னைக்கு வந்திருந்த உத்தரப் பிரதேச கலால் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் கூறுகையில்,

``கலாசார கும்பமேளா, பாதுகாப்பான கும்பமேளா, டிஜிட்டல் கும்பமேளா என்ற மூன்று கருத்தாக்கத்தின் அடிப்படையில் கும்பமேளா நடைபெற உள்ளது. இதற்கு முன்பு இல்லாத வகையில் பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா என்பது ஆன்மிக நிகழ்வு மட்டுமல்ல; நமது நாட்டின் பாரம்பர்யத்தை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. எனவே, பக்தர்கள் அனைவரும் இதில் தவறாது பங்கேற்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

கும்பமேளா தொடங்க இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் நிலையில், அலகாபாத் நகரத்துக்குச் சாதுக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து குவியத் தொடங்கிவிட்டனர். 192 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்