திருமலையில் மார்கழி மாதம் சுப்ரபாதத்துக்குப் பதிலாக திருப்பாவை ஒலிப்பது ஏன்? | tirumalai suprabatham !

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (12/01/2019)

கடைசி தொடர்பு:15:40 (12/01/2019)

திருமலையில் மார்கழி மாதம் சுப்ரபாதத்துக்குப் பதிலாக திருப்பாவை ஒலிப்பது ஏன்?

திருமலை ஆலயத்தில் தினம்தோறும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது மரபு. ஆனால், மார்கழி முழுவதும் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்களையே பாடுகின்றனர்.

திருமலையில் மார்கழி மாதம் சுப்ரபாதத்துக்குப் பதிலாக திருப்பாவை ஒலிப்பது ஏன்?

லியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திருமலையில் அருளாட்சி செய்பவர் வேங்கடேச பெருமாள். முற்காலத்தில் தென்குமரி முதல் வடவேங்கடம் வரை விரிந்து பரந்திருந்த தமிழகத்தின் ஓர் எல்லையில் குமரி அம்மனும், மற்றோர் எல்லையில் வேங்கடாசலபதியும் அருளாட்சி செலுத்தி வந்தனர். மாநிலப் பிரிவினைக்குப் பிறகு திருப்பதி ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டாலும்கூட, தமிழர்களின் கண்கண்ட தெய்வமாகவும், இன்னும் சிலருக்குக் குலதெய்வமாகவும் விளங்குகிறார். அதுமட்டுமல்ல, தமிழகத்து திருவில்லிபுத்தூருக்கும் ஆந்திரத்து திருப்பதிக்கும் ஆன்மிக ரீதியிலான பரிவர்த்தனையும் இருக்கவே செய்கிறது.

 

திருப்பாவை

தமிழகம் முழுவதும் வாழும் பக்தர்களுக்கு வேங்கடேசப் பெருமாள் காலகாலமாக அருள்பாலித்த நிகழ்வுகள் ஆயிரம், பதினாயிரமுண்டு. அதனால்தான், தமிழகத்தின் பல இடங்களில், 'பிரசன்ன வேங்கடாசலபதி' என்னும் பெயரில் பல கோயில்கள் தோன்றின. குறிப்பாக, உடையவர் ஶ்ரீராமாநுஜர் தமிழகத்தின் வைணவத் திருத்தலங்களை ஒருங்கிணைத்ததுடன், அந்தக் கோயில்களில் என்ன வகையான ஆகமங்கள் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வகுத்தளித்தார். குறிப்பாக, திருமலை திருப்பதியில்  அவர் வகுத்த வழிபாட்டு முறைகளே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

திருமலை வேங்கடவன் ஆலயத்தில் தினம்தோறும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது மரபு. ஆனால், மார்கழி மாதம் முழுவதும் திருமலை ஆலயத்தில் அதிகாலையில் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்களையே பாடுகின்றனர்.

ஆண்டாள் பாசுரங்களுக்கு மட்டும் ஏனிந்த தனிச் சிறப்பு?

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பூமிதேவியின் அம்சமாகப் பெண்ணாகப் பிறந்தவர். மற்ற ஆழ்வார்கள் தங்களை நாயகியாகவும், இறைவனை நாயகனாகவும் வைத்து பாசுரங்கள் பாடினாலும், ஆண்டாள் இயல்பிலேயே பெண்ணாக இருந்த காரணத்தினால், ஆண்டாள் தன்னை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் பாவித்து பாடிய பாசுரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.

திருப்பாவை

திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட ஆண்டாள், இறைவனிடம் ஆழ்ந்த அன்பு கொண்டதுடன், இறைவனே தனக்குக் கணவராக அமைய வேண்டும் என்று விரும்பினாள். அந்த எண்ணமே, பெரியாழ்வார், வடபத்ரசாயிக்கு அணிவிக்கத் தொடுக்கும் மாலையை, அவர் அறியாமல் சூடிப்பார்த்து அழகு பார்த்தாள். அவள் சூடிய மாலையே பிறகு வடபத்ரசாயிக்கு அணிவிக்கப்பட்டது. வடபத்ரசாயிக்கும் ஆண்டாள் சூடிக் களைந்த மாலையே

உகந்ததாக இருந்தது.

இறைவனைக் கணவராக அடையவேண்டி, மார்கழி மாதம் பாவை நோன்பு அனுஷ்டித்து, திருப்பாவைப் பாசுரங்களைப் பாடி வழிபட்டாள். பின்னர், தன்னை ரங்கநாதர் ஏற்றுக்கொண்டால், கள்ளழகருக்கும், வேங்கடவனுக்கும் வேண்டிக் கொண்டாள். ஆண்டாள், தான் விரும்பியபடியே ரங்கநாதருடன் ஐக்கியமாகிவிட்டாள்.

ஆண்டாள் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றும் விதமாக, திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்மாலை, சித்திரை மாதம் பௌர்ணமியன்று கள்ளழகருக்கும், புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தின்போது வேங்கடேச பெருமாளுக்கும் சகல மரியாதைகளுடன் எடுத்துச் செல்லப்பட்டு, சமர்ப்பிக்கப்படுகின்றன.

திரு

மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருப்பாவை பாசுரங்கள் பாடுவது வழக்கம். அதேபோல், திருமலை வேங்கடவன் திருக்கோயிலிலும் மார்கழி மாதம் சுப்ரபாதத்துக்குப் பதிலாக, ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்படும். பாசுரங்களை திருமலை பெரிய ஜீயர் சுவாமிகளுடன் பட்டாசார்யர்கள் சேர்ந்து பாடுவார்கள். திருமலைக் கோயிலில் அனைத்து மாதங்களிலும் அதிகாலை சுப்ரபாதம் பாடுவது என்ற மரபை மாற்றி, மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களைப் பாடும் மரபு எப்போது ஏற்பட்டது என்பதற்குத் தக்க ஆதாரங்கள் இல்லையென்றாலும்கூட, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள், இறைவனிடம் கொண்டிருந்த பிரேம பக்தியை அங்கீகரிக்கும் விதமாக, மார்கழி மாதத்தில் திருப்பாவை பாசுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடப்படுகிறது.

ஆண்டாள் வேண்டிக்கொண்டபடி, இன்றைக்கும் திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது, கருடசேவை உற்சவம் நடைபெறும் நாளில், திருவில்லிபுத்தூரிலிருந்து திருமலைக்கு ஆண்டாளுக்கு அணிவித்த மாலை, பட்டுப் புடவை மற்றும் ஆண்டாள் தோளை அலங்கரிக்கும் கிளி ஆகியவை சகல மரியாதைகளுடன் திருமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கப்படும்.  

ஆண்டாளின் மாலை, மரியாதைகளை ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக, வேங்கடேச பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரம், மாலை மற்றும் இரண்டு வெண்குடைகள் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  

வேறு எந்த ஆழ்வாருக்கும் இப்படி ஒரு சிறப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்