செவ்வாயின் அனுகிரகம் இருந்தால் என்னவெல்லாம் கிடைக்கும்? #Astrology | Astrological benefits offered by Mars aka Sevvai

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (13/01/2019)

கடைசி தொடர்பு:15:15 (14/01/2019)

செவ்வாயின் அனுகிரகம் இருந்தால் என்னவெல்லாம் கிடைக்கும்? #Astrology

ஒரு ஜாதகருக்குச் சொந்த வீடு, இனிய மணவாழ்க்கை, செல்வம் அளிக்கும் பூமிக்காரகன் செவ்வாய்கிரகத்தின் சூட்சுமரகசியங்கள் பற்றி ஜோதிடநிபுணர் ஆதித்ய குருஜி விளக்குகிறார்.

செவ்வாயின் அனுகிரகம் இருந்தால் என்னவெல்லாம் கிடைக்கும்? #Astrology

``உடற்பயிற்சிக் கூடங்களில் ஆர்வத்துடன் உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்பவர்கள் பெரும்பாலும் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்'' என்கிறார் ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி. ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகத்தின் சூட்சும ரகசியங்கள் பற்றி அவர் மேலும் விவரிக்கிறார்.

அனுகிரகம்

``ஜோதிட சாஸ்திரத்தில், `பூமிக்காரகன்' என்று அழைக்கப்படும் செவ்வாய், இளமைத் துடிப்புள்ள கிரகம். செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால், சிவப்பு நிறத்துக்கு இவரே அதிபதி ஆகிறார். பூமிக்காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக்கூடிய மண் பாண்டங்கள், நெருப்பு சம்பந்தமான வேலைகள், ரத்தம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்கள், ஆயுதம் சம்பந்தப்பட்டவை, ராணுவம், பவளம், துவரம் பருப்பு, வீரியம், ராணுவத் தலைமை ஆகியவற்றுக்கு அதிபதிஆகிறார்.

நவகிரகங்களில் மனதை இளமையாக வைத்திருப்பவர் புதன் என்றால், உடலை இளமையாக வைத்திருப்பவர் செவ்வாய். ஆரோக்கியமான முறுக்கேறிய உடல், செவ்வாயைக் குறிக்கும். மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை, போர் வீரர்களை உருவாக்குவதும் செவ்வாய்தான். 

அனுகிரகம்

குழந்தை முதல் வயோதிகப் பருவம் வரையிலான மனித வாழ்க்கையில் 35 வயதுக்குட்பட்ட இளைய பருவத்தை செவ்வாய் குறிக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான் முன்யோசனை இல்லாமல் தடாலடியாக நம்மை ஏதேனும் காரியங்களில் இறங்க வைப்பவர் செவ்வாய். 
பொதுவாகப் பலம் வாய்ந்த செவ்வாயின் தசை ஒருவருக்கு நடக்குமானால் அவருக்கு உடலைப் பாதுகாக்கும் ஆர்வம் வரும். உடற்பயிற்சி நிலையங்களில் ஆர்வத்துடன் உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்பவர்கள் பெரும்பாலும் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். 

ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெற்று இருப்பதைப் பொறுத்தே சொந்த வீடு, நிலம், மாட்டுப்பண்ணை, பண்ணை வீடுகள் அமைத்துத் தர காரணமாக இருப்பார். கூடவே மற்ற சுபகிரகங்களின் பார்வை இருந்தால்தான் அவற்றை முழுமையாக அனுபவிக்கமுடியும். 

தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தோடு செவ்வாய் சம்பந்தப்பட்டால் ஒருவரை விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட துறைகளில் பொருளீட்ட வைப்பார். பூமி சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஜாதகர் கொடிகட்டிப் பறப்பார். அபாரமான லாபம் தருவதும், வீடு கட்டி விற்கும் பில்டர்களுக்குக் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித் தருபவரும் இவர்தான். 

செவ்வாயின் இன்னொரு வீடான விருச்சிகம் காலபுருஷ தத்துவத்தில் 8 - ம் இடமாக வருவதால், இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் லாபம் ஈட்டச்செய்வார்.

ராசிகள்

ஒருவர் செய்யும் வேலை, தொழில் போன்றவற்றைக் குறிக்கும் பத்தாமிடம் எனும் தொழில்ஸ்தானம் விருச்சிகத்தோடு சம்பந்தப்படும் நிலையில் சிலருக்கு கமிஷன் வகையில் லாபம் பெறும் தொழிலாக அமையும். 

மேஷ லக்னத்துக்கு செவ்வாய் 10 - ம் வீட்டில் தனித்து உச்சம் பெற்று லக்னத்தைப் பார்ப்பதை விட அவர் 4- ம் வீட்டில் நீசம் பெற்று சுபத்துவ, சூட்சும வலுப்பெறுவது சிறந்த யோகங்களைத் தரும். 10 - ம் வீட்டில் உச்சம் பெறும் செவ்வாய் திக்பலமும் பெறுவார் என்பதால், இந்த நிலையில் மத்திமமான பலன்களே அமையும்.

ரிஷப லக்னத்துக்கு அவர் 7 - ம் வீட்டில் அமர்வதைவிட 12 - ம் வீட்டில் அமர்வது யோகங்களைத் தரும். 
கடக லக்னத்துக்கு செவ்வாய் ஐந்து, பத்துக்குடைய யோகாதிபதியாக அமைவார். இந்த நிலையில் அவர் ஐந்தாமிடமான திரிகோணஸ்தானத்தில் இருந்தால் யோகங்களைச் செய்ய மாட்டார். 
ஒரு பாபக் கிரகம் கேந்திரங்களில் இருந்தால்தான் வலுப் பெற்று நன்மை செய்யும் என்ற விதிப்படி, அவர் ஐந்தாமிடத்துக்கு ஆறாமிடமான 10 - ம் வீட்டில் ஆட்சி பெற்றால் மட்டுமே நன்மைகளைச் செய்வார். 

அனுகிரகம்

சிம்ம லக்னத்துக்கு அவர் திரிகோண ஸ்தானத்துக்கு அதிபதியாகி 9-ம் வீட்டில் அமர்வது நல்லநிலை அல்ல. அதற்குப் பதிலாக ஒன்பதாம் வீட்டுக்கு எட்டாம் வீடான நான்கில் ஆட்சி பெறுவதே யோக நிலை.

மிதுன லக்னத்துக்குச் செவ்வாய் ஆறுக்கு அதிபதியாகி பாப நிலை பெறுவதால் யோகம் செய்ய மாட்டார். கன்னிக்கும் அதேதான். செவ்வாய் தசை வராத மிதுன, கன்னி லக்னக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள். 

துலாம் லக்னத்துக்கு அவர் இரண்டு, ஏழுக்குடையவரானாலும் இரண்டிலோ, ஏழிலோ ஆட்சி பெறுவதை விடுத்து, பத்தாமிடமான கடகத்தில் நீசம் பெற்று திக்பலமும் சூட்சும வலுவும் அடைந்தால் நல்ல மனைவியையும், மண வாழ்க்கையையும், அளவற்ற செல்வத்தையும் தருவார். 

ஆதித்ய குருஜிவிருச்சிக லக்னத்துக்கு செவ்வாய் நீசம் பெறுவது சிறப்பான நிலைதான். விருச்சிகத்துக்கு லக்னாதிபதியாகும் செவ்வாய் மூன்றில் உச்சம் பெற்றால், மிகச் சாதாரணமான வாழ்க்கையையே அளிப்பார். 

தனுசு லக்னத்துக்குச் செவ்வாய்  4, 8, 12-ம் வீட்டில் இருப்பது சிறப்பு. அவர் 2, 5-ம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சூட்சும வலு அடைந்திருந்தால்தான் நன்மை செய்வார். 

மகரத்துக்கு 4 - ம் வீட்டில் ஆட்சி பெறும்  நிலையில் ஜாதகர் காவல்துறை, ராணுவம் போன்ற யூனிஃபார்ம் அணியும் துறைகளில் வேலை செய்யவைப்பார். லக்னாதிபதியின் வலுவைப் பொறுத்து, இந்த இடத்தில் இருக்கும் மேஷ செவ்வாய் ஜாதகரை ஐ.பி.எஸ். அதிகாரி ஆக்கும். 

கும்ப லக்னத்துக்கு 10-ம் வீட்டில் தனித்து ஆட்சி பெறுவது நல்ல நிலை அல்ல. ஆனால் 12-ம் வீட்டில் உச்சம் பெறுவது, அது மறைவுஸ்தானம் என்பதால், நன்மையைத் தரும். 

மீன லக்னத்துக்கு 9-ம் வீட்டில் அவர் ஆட்சி பெறுவதைவிட, பத்தாமிடமான தனுசில் நட்பு பலம் பெற்றுத் திக்பலம் அடைவது நல்ல யோகம். 2-ம் வீட்டில் ஆட்சி பெறுவது சுமாரான பலன்களையே தரும்''. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்