``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..!"- நார்த்தாமலை சிவனடியார்கள் குமுறல் | This article is about the Narthamalai temple issue

வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (21/01/2019)

கடைசி தொடர்பு:09:30 (22/01/2019)

``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..!"- நார்த்தாமலை சிவனடியார்கள் குமுறல்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நந்தனாருக்கு ஏற்பட்ட அதே நிலைமை, இன்றைக்கும் தொடரவே செய்கிறது என்று குமுறுகிறார்கள் நார்த்தாமலை பக்தர்கள்.

``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..!

``வருகலாமோவையா உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவுந்நான்..." - நந்தனார் சரித்திரத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய வரிகள் இவை. இறைவனை நெருங்கி அணுகி பக்தி செய்ய விரும்பும் நந்தனார் பாடுவதுபோல கோபாலகிருஷ்ண பாரதி இந்த வரிகளை எழுதியிருப்பார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நந்தனாருக்கு ஏற்பட்ட அதே நிலைமை, இன்றைக்கும் தொடரவே செய்கிறது என்று குமுறுகிறார்கள் நார்த்தாமலை பக்தர்கள்.  

நார்த்தாமலை சுனை லிங்கம்

சில நாள்களுக்கு முன்பு சித்தன்னவாசல் மற்றும் நார்த்தாமலையிலிலுள்ள சுனைகளில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு சுனைலிங்க வழிபாடு நடந்தது. இந்தச் செய்தி அறிந்து பக்தர்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில் நார்த்தாமலையில் நடந்திருக்கும் ஒரு செயல் பக்தர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  

நார்த்தாமலையில் இருந்த சுனை நீரை வெளியேற்றி இறைவனை வழிபட `யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டது. அந்த அமைப்பினருடன் ஊர்மக்கள், சிவனடியார்கள் சேர்ந்து ஐந்து நாள்கள் அரும்பாடுபட்டு நீரையும், சேர்ந்திருந்த சகதியையும் வெளியேற்றி இறைவனின் திருவுருவ தரிசனம் கண்டு வழிபட்டனர். இந்தப் பெரும் செயலைச் செய்த மக்கள், இறைவனுக்கு பூஜை செய்யக் கூடாது என்று தற்போது தடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஈசனுக்கு முன்பாக ஓர் உண்டியலையும் வைத்துவிட்டார்கள். இது சிவனடியார்களை கொதித்தெழச் செய்துள்ளது. 

இந்தப் பிரச்னை குறித்து சுனை லிங்கத்தை மீட்டெடுத்த `யாதும் ஊரே, யாவரும் கேளிர்' அமைப்பைச் சேர்ந்த குமரவேல் என்பவர் நம்மிடம் பேசினார். 

``சில மாதங்களுக்கு முன்பு சித்தன்னவாசல், நாவல் சுனைக்குள் நிரம்பியிருந்த நீரை இறைத்து, மூழ்கியிருந்த சிவ லிங்கத்துக்கு பூஜை செய்தோம். அப்போது, நார்த்தாமலையில் உள்ள தலவிரி சிங்கம் சுனைக்குள்ளும் லிங்கம் ஒன்று நெடுங்காலமாக மூழ்கியிருப்பது தெரியவந்தது. தலவிரி சிங்கம் சுனைக்கு மேலே பாறையில் வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டு ஒன்றில் சுனை லிங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. 146 ஆண்டுகளுக்கு முன்பு, புதுக்கோட்டை தொண்டைமான் ராணி சுனை நீரை இறைத்துச் சிவலிங்கத்தை வழிபாடு செய்திருக்கிறார்.

தலவிரி சிங்கம் சுனை லிங்கம்

கல்வெட்டைப் படித்தபிறகு உள்ளூர் மக்களிடம் விசாரித்தோம். அவர்களும் கல்வெட்டுச் செய்தியை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, சிவலிங்கத்தைப் புத்தாண்டு அன்று தரிசிக்கலாம் என்று முடிவெடுத்து, டிசம்பர் 31-ம் தேதி நீரை இறைக்கத் தொடங்கினோம். ஆனால், எதிர்பார்த்தபடி ஒரே நாளில் வேலை முடியவில்லை ஜனவரி 4-ம் தேதிதான் சுனையில் தேங்கியிருந்த சேறு, சகதி அனைத்தையும் வெளியேற்றிச் சிவ லிங்கத்தைக் காணமுடிந்தது. சுனை லிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்று முதன்முதலில் நாங்கள் முயற்சி மேற்கொண்டாலும் உள்ளூர் கிராம மக்கள் மற்றும் சிவனடியார்கள் எங்களுக்குத் துணை நின்றார்கள். ஜனவரி 4-ம் தேதி மாலைப் பொழுதில் சிவ லிங்கத்துக்கு பூஜை செய்யத் தொடங்கினோம். சுனையைச் சுத்தம் செய்வதற்கு அதுவரை வராத அந்த ஊரைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் பிரச்னை செய்யத் தொடங்கினார். 

"நீங்க சிவலிங்கத்துக்கு பூஜை செய்யக் கூடாது. உங்களோட வேலை தொண்டு செய்யறது மட்டும்தான். சுனையைச் சுத்தம் செஞ்சிட்டீங்க, அதோட அங்கிருந்து கிளம்புங்க" என்று சத்தம் போட்டார். 

"அஞ்சு, ஆறு நாளா நாங்க எல்லாரும் சிவலிங்கத்தை தரிசிக்க உழைச்சிருக்கோம். எங்க விருப்பப்படி நாங்க பூஜை பண்ணிடறோம். அதுக்கு அப்புறமா உங்க விருப்பப்படி எப்படி வேணும்னாலும் செய்ங்க" என்று சொல்லிவிட்டு நாங்கள் விரும்பியபடி சுனை லிங்கத்துக்குத் தேவாரம், திருவாசகம் பாடி வழிபாடு செய்தோம். 

சுனை லிங்கம்

நாங்கள் வழிபட்டுவிட்டு, சுனையிலிருந்து மேலே ஏறுவதற்குள்ளாகவே, ஏதோ எங்களால் சுவாமிக்குத் தீட்டு ஏற்பட்டுவிட்டதாக நினைத்து, எங்கள் கண் முன்பே நாங்கள் செய்த அலங்காரம் அனைத்தையும் கலைத்துவிட்டார். தொடர்ந்து பூஜைப் பொருள்களைத் தூக்கி வீசிவிட்டு, அந்த இடத்தில் நீர் ஊற்றிக் கழுவித் தீட்டுக் கழித்தார் அந்த அர்ச்சகர். அது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. சுனை லிங்கத்தைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டோம். அதோடு எங்களது பணி முடிந்துவிட்டதாகக் கருதி நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டோம். அதற்குப் பிறகு நாங்கள் யாரும் அங்குச் செல்லவில்லை. இப்போது அங்குக் கோயிலுக்கு முன்பு உண்டியல் வைத்துவிட்டார்கள். `சுனைக்குள் யாரும் செல்லக் கூடாது’ என்று பெயின்டால் எழுதி வைத்திருக்கிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது” என்றார். 

தகவல் அறிந்து தொல்லியல் துறையினர் `யாரும் உள்ளே வரக் கூடாது' என்று பெயின்டால் எழுதியிருக்கும் வாசகங்களை அழித்துவிட்டனர். சம்பந்தப்பட்ட அர்ச்சகரிடம் கருத்துக்கேட்க முனைந்தோம். அவர் பேசத் தயாராகயில்லை. 

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பேசினோம். ``அவர் நார்த்தாமலையிலிருக்கும் கோயில்களில் பூஜை செய்கிறவர்தான். அதனால், சுனை லிங்கக் கோயிலிலும் பூஜை செய்யும் உரிமையை அவராகவே எடுத்துக்கொண்டார். ஆனால், `நீங்கள்ளாம் வேலை செய்ய மட்டும்தான். பூஜை செய்யறதுக்கு நீங்க யாரு' என்று கேட்டது மிகவும் தவறு” என்கிறார்கள்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்