குமரி திருப்பதி கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்!  | KanyaKumari Tirupathi Temple festival

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (23/01/2019)

கடைசி தொடர்பு:14:50 (23/01/2019)

குமரி திருப்பதி கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்! 

ன்னியாகுமரியில்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின.

யாகசாலை

திருப்பதியில் அமைந்திருக்கும் வேங்கடாசலபதி ஆலயத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வேங்கடாசலபதியின் ஆலயங்களை அமைத்து, தகவல் மையங்களையும்  திறந்து வருகிறது. கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22.5 கோடியில்  வேங்கடாசலபதி கோயில்  கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக விவேகானந்த கேந்திர நிர்வாகம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது.

 

யாகசாலை

அதைத்தொடர்ந்து, கோயில் கட்டும் பணி தொடங்கியது. இங்கு திருப்பதி ஏழுமலையான் வேங்கடாசலபதி சந்நிதி, பத்மாவதி தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, கருட பகவான் சந்நிதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள  கருவறையில் உள்ள ஏழுமலையான் வேங்கடாசலபதி திருவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூ அன்று சூரியஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், கீழ்தளத்தில்  திருமண மண்டபம், அன்னதானக்கூடம், முடி காணிக்கை செலுத்துமிடம் மற்றும் கோயிலைச் சுற்றி தேரோடும் வீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் பணிகள் நிறைவடைந்து மஹாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (27-ம் தேதி)  நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கியது. திருப்பதி கோயில் அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில்  60-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் இப்பூஜையை நடத்துகின்றனர். இதையொட்டி கன்னியாகுமரியில் திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.