சென்னையில் ஶ்ரீபத்மாவதி தாயாருக்கு தனிக் கோயில்!- எங்கே, எப்படி? | Sri Padmavathi thayar Temple in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (29/01/2019)

கடைசி தொடர்பு:10:45 (29/01/2019)

சென்னையில் ஶ்ரீபத்மாவதி தாயாருக்கு தனிக் கோயில்!- எங்கே, எப்படி?

சென்னையில் ஶ்ரீபத்மாவதி தாயாருக்கு தனிக் கோயில்!- எங்கே, எப்படி?

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதியைப் பற்றிக் குறிப்பிடும் போது, `ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்' என்பார்கள். அதற்கு, `இறை அருள் தானாகவே பூமிக்கு வந்து நிலைபெற்ற இடம்' என்று பொருள். அத்தகைய பழைமையும் பெருமையும் உடையது திருமலை திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயில். நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் அனுதினமும் வேங்கடமுடையானைத் தரிசிக்கக் குவிந்து வருகின்றனர். எனவே பக்தர்களின் வசதிக்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. 

திருப்பதிக் கோயில்


திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு முறையான தகவல்களை அளிக்கவும் தரிசன மற்றும் சேவை சீட்டுகளைப் பெறவும் நாடுதோறும் தகவல் தொடர்பு மையங்களோடு கூடிய கோயில்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தி வருகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சேவை மையங்கள் உள்ளன. இவை தவிர்த்து நாடு முழுவதும் இத்தகைய சேவை மையங்களை அமைக்கத் திருப்பதி தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.  
அதன் ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள ஶ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயிலின் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காகக் கோயில் திறந்து வைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பாகத் திட்டமிடப்பட்டு 22.5 கோடி ரூபாய் செலவில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு, இதன் வடிவம் திருமலை திருப்பதி கோயிலைப் போன்ற அமைப்பில் இருப்பதுதான். எனவே இங்குத் தரிசனம் செய்யும் பக்தர்கள் திருமலையில் தரிசனம் செய்த உணர்வினைப் பெறுவர்.

கன்னியாகுமரியில் திருப்பதி...


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஶ்ரீ வேங்கடேசப் பெருமாள் கோயில் அமைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதையொட்டியே தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தென் இந்தியாவில் வேங்கடாசலபதி என்று அழைக்கப்படும் பெருமாள், வட இந்தியாவில் `பாலாஜி' என்று பக்தியுடன் அழைக்கப்படுகிறார். ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் 34.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி கோயில் கடந்த ஜுலை மாதம் பக்தர்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. அந்தக் கோயிலில் தற்போது தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்கின்றனர். விரைவில் அண்டை மாநிலமான தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கட்டப்பட்டுவரும் திருப்பதி  கோயிலும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. 

 

அன்னதானம்


கன்னியாகுமரி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு திட்டமிட்டுள்ள மற்றும் செயல்படுத்தி வரும் திருப்பணிகள் குறித்துப் பேசினார். 
``ஆந்திர மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படும் தலைநகரான அமராவதியில் 150 கோடி ரூபாய் செலவில், வேங்கடாசலபதி கோயில் கட்டுவதற்கு வரும் 31 - ம் தேதி காலை 9.15 மணிக்கு பூமி பூஜை நடைபெற உள்ளது. அதே போன்று விசாகப்பட்டினத்தில் 7.90 கோடி ரூபாய் செலவில் திருப்பதி கோயில் கட்டப்பட்டு வருகின்றது. மேலும் கடப்பா மாவட்டம் வான்டிமிட்டாவில் இருக்கும் புராதன கோயிலான கோதண்டராம சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு விரிவான வசதிகள் செய்யும் பொருட்டு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

கருடாழ்வார் சிலை


இவை தவிர்த்து சென்னையில் ஶ்ரீபத்மாவதி தாயாருக்குத் தனியாக ஒரு கோயில் 5.75 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசிடம் நிலம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்கள் அலிபிரி வழியாகத்தான் வருவார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக அலிபிரியில் 2 ஆயிரம் அறைகளைக் கொண்ட தங்கும் விடுதி 112 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. அலிபிரியில் தங்கும் விடுதி அமைவதால், வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்த பின்னர் தங்களின் பயணத்தைத் தொடரலாம். 
திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 60 ஆயிரம் நபர்கள் வரை இங்கு வந்து உணவருந்திச் செல்கின்றனர். அன்னதான திட்டத்துக்காக நடப்பு ஆண்டுக்கு 1,042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அன்னதான திட்டத்துக்கு 104 கோடி ரூபாயைப் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். 
திருமலையில் பக்தர்களுக்கு பல வசதிகளைச் செய்து தருவதுடன் வழிகாட்டும் பணியிலும் பக்தர்கள் பலரும் சேவகர்களாக (சேவகலு) மாறி எந்தவித பிரதிபலனும் இல்லாமல் சேவை செய்து வருகிறார்கள். அவர்கள் திருமலையில் தங்குவதற்காக 98 கோடி ரூபாய் செலவில் சிறப்பான தங்கும் அறைகளுடன் கூடிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, திருமலையில் நடைபெற்ற பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, புத்தாண்டு விழா உள்ளிட்ட விழாக்காலங்களில் கலந்துகொண்டு இறைப்பணியை ஆற்றியவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டி விட்டது. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 1,80,000 பேர். இறைப்பணியில் ஈடுபட்டு இதயசுத்தியுடன் இலவச சேவை புரிந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்