சென்னையில் தொடங்குகிறது இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி!   | hindu spiritual exhibition

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (29/01/2019)

கடைசி தொடர்பு:14:56 (29/01/2019)

சென்னையில் தொடங்குகிறது இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி!  

ந்து அமைப்புகள் சார்பில், 10-வது இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியின் தொடக்க விழா, இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில், ஆன்மிகம் மற்றும் சேவை அமைப்புகள், கல்வி மையங்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறநிலையத் துறையினர் பங்கேற்கின்றனர்.  அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சி, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  நடைபெறும்.  

கண்காட்சி

கண்காட்சி நடக்க இருப்பதையொட்டி, முன்னோட்டமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில், சுவாமி விவேகானந்தர் ரத பூஜை நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் உருவப்படம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட 'பரதமுனி ஸம்ஸ்கார நடனம்' என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் உட்பட  ஏழு மொழிகளில் இயற்றப்பட்ட 14 பாடல்களுக்கு இவர்கள் நடனமாடினர். சேப்பாக்கத்தில் நடைபெற்ற நடைப்பயணத்தில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். 

கண்காட்சி

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில், இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் காஞ்சி ஶ்ரீவிஜயேந்திர சுவாமிகள் தொடக்க உரையாற்றுகிறார்.

பூஜ்யஸ்ரீ  ஓம்காரனந்தா மகாஸ்வாமி, தருமபுரம்  இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் பரகல ராமானுஜ ஜீயர் சுவாமிகள்,  ஆரணி ஜெயின் மடாதிபதி  டாக்டர் ஸ்வஸ்தி ஸ்ரீ தவளகீர்த்தி சுவாமிகள் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர்.   

கண்காட்சியில்,  நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக, அந்தமான் சிறையை கண்முன் நிறுத்தும் அரங்கம், ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் ஒலி, ஒளி காட்சிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.