12 ராசிக்காரர்களும் வழிபட உகந்த பஞ்சபூதத் தலம் - ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் | This article describes sri panchalingeswarar temple

வெளியிடப்பட்ட நேரம்: 07:37 (01/02/2019)

கடைசி தொடர்பு:07:37 (01/02/2019)

12 ராசிக்காரர்களும் வழிபட உகந்த பஞ்சபூதத் தலம் - ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர்

ராசி நட்சத்திரம் தெரியாதவர்களும்கூட  ஒரே தலத்தில் வழிபட்டுத் தங்கள் துன்பங்களில் இருந்து விடுபடும் வகையில் ஓர் ஆலயம் உண்டு. அதுவே இறைவன் பஞ்சபூதங்களின் நாயகனாக, ஐந்து சிவலிங்க மூர்த்தமாகக்  கோயில்கொண்டுள்ள கொண்டாபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்.

12 ராசிக்காரர்களும் வழிபட உகந்த பஞ்சபூதத் தலம் - ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர்

க்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பரிகாரம் தேடி கோயில் கோயிலாகத் தேடிச் செல்கிறார்கள். ஒவ்வொரு ராசிக்காரரும் தங்கள் தோஷங்களும் பிரச்னைகளும் நீங்க ஒவ்வொரு தலமாக நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஒரே வீட்டில் நாலைந்து ராசிக்காரர்கள் இருந்து விட்டால்? கவலையே வேண்டாம். எல்லா ராசிக்காரர்களும், ராசி நட்சத்திரம் தெரியாதவர்களும்கூட  ஒரே தலத்தில் வழிபட்டுத் தங்கள் துன்பங்களில் இருந்து விடுபடும் வகையில் ஓர் ஆலயம் உண்டு. அதுவே இறைவன் பஞ்சபூதங்களின் நாயகனாக, ஐந்து சிவலிங்க மூர்த்தமாகக்  கோயில்கொண்டுள்ள கொண்டாபுரம் ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்.

ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர்


அன்னை, இந்தத் தலத்தில் எழுந்தருளிய சில கணப்பொழுதிலேயே அந்தத் தலமே இறைவனின் பஞ்சபூத வடிவங்களும் ஒரே இடத்தில் லிங்கரூப மூர்த்தங்களாகக் கோயில் கொள்ள உகந்த தலம் என்பதை அறிந்துகொண்டார். அம்மையே அங்கு  பஞ்ச லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள்.
சென்னையில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ளது என்னும் காவேரிப்பாக்கம். இந்த ஊரின் ஒரு பகுதியாக விளங்கும் கொண்டாபுரம் ஆதியில் சைவபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்தக் கொண்டாபுரத்தில்தான் அன்னை பிரதிஷ்டை செய்த பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

ராசிகளுள் மேஷம், சிம்மம், தனுசு ஆகியன அக்னியின் ஆதிக்கத்துக்குட்பட்ட ராசிகள். எனவே இந்த ராசிக்காரர்கள் அக்னி ரூபமான இறைவனை வழிபடுதல் சிறப்பு. பொதுவாகத் திருவண்ணா மலையையே அக்னித் தலமாக வழிபடுவோம். சிவபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் அக்னி லிங்கத்தையும் தரிசித்து வழிபடலாம். 

ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர்


ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் பஞ்சபூதங்களுள் நிலத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரே பஞ்சபூதத் தலங்களுள் நிலத்துக்கு உரிய தலம்.  பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்துள் கோயில் கொண்டுள்ள பிருதிவி லிங்கத்தை வழிபடுவதன் மூலம் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்ட பலன் கிட்டும்.

ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர்


மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் வாயுவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். காளகஸ்தியில் உள்ள சிவனை வழிபடுவதால் கிடைக்கும் புண்ணிய பலனை இங்கே சந்நிதி கொண்டிருக்கும் வாயுலிங்கத்தை வழிபடுவதன் மூலம் பெறலாம். 

ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர்


கடகம் , விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பஞ்சபூதங்களுள்  நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். ஆனைக்காவில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயமே நீர்தலம். அதற்கு இணையான பலனை இங்கிருக்கும் அப்பு லிங்கத்தை வழிபடுவதன் மூலம் பெறலாம்.

ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர்


பன்னிரண்டு ராசிகளுக்கு உகந்த நான்கு லிங்கங்கள் தவிர்த்து மூலவரான பஞ்சலிங்கேஸ்வரர் ஆகாய லிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். சிதம்பரமே ஆகாயத் தலம். இங்கு மூலவரை வழிபடுவதன் மூலம் சிதம்பரத்தில் வழிபாடு செய்த புண்ணிய பலனைப் பெறலாம். மேலும் தங்களுடைய ராசி, நட்சத்திரம் தெரியாதவர்களும் இந்த மூலவரை வழிபடுவதன் மூலம் அவரவரது ஆதிக்கத்துக்குட்பட்ட பஞ்சபூதங்களை வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது ஐதிகம்.

 

temple


இந்த ஆலயத்தில் இருக்கும் சந்நிதிகளில் 27 நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில் 27 தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறப்பு. அதே போன்று பஞ்சலிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினத்தில் வந்து வழிபட்டால் விசேஷித்த பலன்களைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சனி மஹா பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  
இந்த ஆலயத்தில் இரண்டு தட்சிணாமூர்த்தி மூர்த்தங்கள் அமைந்துள்ளன. ஒரே ஆலயத்தில் இரு தட்சிணாமூர்த்திகள் அமைந்திருப்பது விசேஷம்.  நடனமிடும் இறைவனின் திருக்கோல புடைப்புச் சிற்பமும் சிறப்பானது. இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வழிபடக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர்.


சுமார் 60 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை மகாபெரியவா காஞ்சியிலிருந்து புறப்பட்டு இந்தப் பகுதியின் வழியாக நடைப்பயணமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்  சிதிலமடைந்த ஒரு கோயில் இருந்த திசை நோக்கி விழுந்து வணங்கினார். அதுவே பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம். 1950 களில் இந்த ஆலயம் சிதிலமடைந்து காணப்பட்டது. மகாபெரியவா இந்தத் தலத்தின் சிறப்பினை எடுத்துரைத்தார். ஆதியில் அந்தத் தலத்துக்கு சிவபுரம் என்று பெயர் என்றும் அங்கு அன்னை தவமிருந்து ஈசனை வழிபட்ட தலம் என்றும் கூறினார். 

ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர்


கயிலாயத்தில் அன்னை சிவனுடன் தனித்திருந்தபோது விளையாட்டாக ஈசனின் கண்களை மூட அண்ட சராசரங்களும் இருண்டன. அந்த இருளின் தன்மை அன்னையின் மேனியிலும் கருமையெனப் படிந்தது. தனது பிழையினை நொடியில் உணர்ந்து கை விலக்கினாள் அன்னை. ஆயினும் இறைவனின் திருவுளம் மாற்றவும் முடியுமா. அன்னையைப் பூவுலகில் சென்று தவம் செய்யுமாறு பணித்தார். அதை ஏற்ற அன்னை பூமிக்கு வந்தாள். வடக்கே காசியில் இருந்து பக்தி செய்து வந்த அன்னை குறிப்பிட்ட காலத்தில் தென்திசை வந்தாள். மாங்காட்டிற்கு வந்து பஞ்சாக்னி நடுவில் ஊசிமுனையில் தவமியற்றினாள்.

பின்னர் காஞ்சியிலும் தவமியற்றி இறைவனின் தரிசனம் பெற்று, ஈசனுடன் இணைந்தாள். இறைவன் அன்னையை தர்மபுரி நோக்கிச் செல்லக் கட்டளையிட்டார். அதை ஏற்றுச் சென்ற அன்னை, வழியில் இந்தத் தலத்தில் தங்கியிருந்து பஞ்சபூதங்களின் நாயகனாம் சிவபெருமானை ஐந்து சிவலிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். காட்சி கொடுத்த இறைவனிடம், அந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு கடன், நோய் போன்ற துன்பங்கள் எதுவும் நேராமல், சகல செல்வங்களுடன் வளமான வாழ்க்கை அடையவேண்டும் என்று வரமும் பெற்றாள்.

ambal


அத்தகைய மகிமைகள் கொண்ட ஆலயத்தைப் புனரமைக்கும்படி மகா பெரியவா தன் பக்தர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படியே சிதிலமடைந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, நித்திய பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

விழாக்கள்:
பிரதோஷம், பௌர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை ஆகிய நாள்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள்.
எங்கிருக்கிறது..?
சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 1 கி.மீ. முன்னதாகவே நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்திருக்கிறது.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்