தை அமாவாசைக்கு மகாலிங்கத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்! | Devotees gathered Sathuragiri Mahalingam temple over thai amavasai

வெளியிடப்பட்ட நேரம்: 22:07 (04/02/2019)

கடைசி தொடர்பு:15:29 (05/02/2019)

தை அமாவாசைக்கு மகாலிங்கத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ன்று தை அமாவாசை. இறந்த தம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாள். இன்றைய தினம், சிவன் ஆலயங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அதேபோல, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூலோக கயிலை எனப்படும் சுந்தர மகாலிங்கம் மலையில் பக்தர்கள், நேற்று இரவிலிருந்தே வரத் தொடங்கினர்.

தை அமாவாசை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை மா,பலா,வாழை என முக்கனி அபிஷேகத்துடன்  18  வகையான அபிஷேகங்கள் நடந்தன.

பக்தர்கள் கூட்டம்

தமிழகத்தின் முக்கியமான சிவதலங்களில், சுந்தர மகாலிங்கம் ஆலயமும் ஒன்றாகும். பல சித்தர்களின் புகலிடமாக இருந்தது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. மேலும், மதுரை மற்றும் விருதுநகரைப் பிரிக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில், மூன்று மலைகளில் இக்கோயில் அமைந்துள்ளது. அதனால், இங்கு சென்று வர 13 மணி நேரம் ஆபத்தான மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். இருப்பினும் இந்தச் சிரமத்தை பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தர மகாலிங்கத்தைத் தரிசிக்கவருகின்றனர்.

பக்தர்கள்

ஆடி அமாவாசையன்று, அதிக அளவிலான பக்தர்கள் வருகின்றனர். இதுபோன்று, கூட்டம் நிறைந்த தினங்களில் மூச்சுத்திணறல் காரணமாக ஒரு சில பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 4 பக்தர்கள் அடித்துச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அவசர காலங்களில், உடனடியான மருத்துவ வசதி இல்லாமல் பக்தர்கள் அவதியுறுகின்றனர். 

கோயில்

குறிப்பிட்ட விசேஷ நாள்களில் மட்டும், மலையின் பெரும்பான்மையான இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. மற்ற நாள்களில், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. கடந்த ஜனவரி முதல் அமுலுக்கு வந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை, இங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டு கட்ட சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலில் நிலவும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பக்தர்களின் தேவைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

படங்கள்: கு.முத்துக்குமார்