மண் சாலையில் சிக்கிய லாரி! - பிரமாண்ட பெருமாள் சிலையைக் கொண்டுசெல்வதில் அடுத்த சிக்கல் | 300-tonne Vishnu statue’s travel delayed further over damaged road

வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (05/02/2019)

கடைசி தொடர்பு:20:54 (05/02/2019)

மண் சாலையில் சிக்கிய லாரி! - பிரமாண்ட பெருமாள் சிலையைக் கொண்டுசெல்வதில் அடுத்த சிக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியகொரக்கோட்டை கிராமத்தில், 64 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட 420 டன் எடை கொண்ட பெருமாள் சிலை ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது. பிரமாண்ட வடிவில் தயாரிக்கப்பட்ட அந்தச் சிலையை பெங்களூரு ஈஜிபுராவில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நிறுவுவதற்காக எடுத்துச்செல்லப்படுகிறது. 

பெருமாள்

160 டயர்களைக் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு, அந்தச் சிலை கொண்டுசெல்லப்படுகிறது. அதிக எடையுள்ளதால், கல்லின் பாரம் தாங்காமல் 30 டயர்கள் வெடித்துச் சிதறின. இதனால், 240 டயர்கள் கொண்ட லாரியில் அது கொண்டு செல்லப்படுகிறது. அதை இழுத்துச் செல்ல லாரியின் முன்புறம் இரண்டு வால்வோ லாரிகளும், பின்புறம் தள்ளுவதற்கு ஒரு லாரியும் சேர்க்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் பயணம் தொடங்கியது. ஆனால், சிலையைக் கொண்டுசெல்ல நீண்ட நேரம் பிடித்தது.

பெருமாள்

மேலும், ஆங்காங்கே ஆற்றுப் பாலங்களும் குறுகிய பாதைகளும் இடையூறாக இருந்தன. தொடர்ந்து ஒவ்வொரு ஊரிலும் லாரிகள்  நிறுத்தப்பட்டு, சிலையைக் கொண்டுசெல்ல சாலை விரிவாக்கம்செய்து, அதன்பிறகு பயணம் தொடர்கிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள பாம்பாறு அணைப்பகுதியில் சிலை வாகனம் நிறுத்திவைக்கப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்ட பிறகே கொண்டுசெல்லப்பட்டது. பின்னர், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  கே.திப்பனபள்ளி என்னும் இடத்தில் நிறுத்தப்பட்டது.

பெருமாள்

அங்குள்ள குருபரப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள மார்க்கண்டேயன் ஆற்றுப் பாலத்தைக் கடக்க, ஆற்றின் நடுவே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டு, அதன்வழியாக பெருமாள் சிலை வாகனம் சென்றபோது மண் சாலையில் சிக்கியதால், வாகனம் அப்படியே நிறுத்தப்பட்டது. தற்போது, அங்கு கற்கள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டுவருகிறது. நாளை, மீண்டும் பயணம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.