அழகர் மலையில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் தைலப்பிரதிஷ்டை வைபவம்! | Thaila pradistai in madurai alagarmalai temple

வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (06/02/2019)

கடைசி தொடர்பு:10:19 (06/02/2019)

அழகர் மலையில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் தைலப்பிரதிஷ்டை வைபவம்!

பொதுவாக சுதையினால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவரின் திருமேனிக்கு ஆண்டுக்கு ஒருமுறை `தைலக் காப்பு உற்சவம்' நடைபெறும். திருவரங்கத்தில் மட்டும் வருடத்துக்கு இரண்டு முறை தைலக்காப்பு உற்சவம் நடைபெறும். ஆனால், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தைலப்பிரதிஷ்டை உற்சவம் நடைபெறும் திருத்தலம் திருமாலிருஞ்சோலை.

அழகர் மலையில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் தைலப்பிரதிஷ்டை வைபவம்!

பெருமாள் கோயில்களில், சுதையினால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவரின் திருமேனிக்கு ஆண்டுக்கு ஒருமுறை `தைலக்காப்பு உற்சவம்' நடைபெறும். திருவரங்கத்தில் மட்டும் வருடத்துக்கு இரண்டு முறை தைலக்காப்பு உற்சவம் நடைபெறும். ஆனால், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தைலப்பிரதிஷ்டை உற்சவம் நடைபெறும் திருத்தலம் திருமாலிருஞ்சோலை.

தைலப்பிரதிஷ்டை

பாண்டிய நாட்டில் அமைந்திருக்கும் திருமாலிருஞ்சோலை, 108 திவ்யதேசங்களுள் ஒன்று. தொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் அருளும் பெருமாளை, `அந்தரவானத்து எம்பெருமான்' என்று பரிபாடலும் சிலப்பதிகாரமும் சிறப்பித்துப் போற்றுகின்றன.

முக்தி அளிக்கும் மார்க்கம் எதுவென்று தெரியாமல் குழம்பித் தவித்த ஸ்ரீவல்லப பாண்டிய மன்னனின் கனவில் இறைவன் தோன்றி, `ஸ்ரீவில்லிபுத்தூரில் எம் பணியில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணு சித்தரை அழைத்து வந்தால் உனக்குத் தெளிவு கிடைக்கும்’ என்று கூறி மறைந்தார். அதன்படி விஷ்ணுசித்தரைச் சகல மரியாதைகளுடன் வரவழைத்து, அவர் மூலமாக வைணவமே முக்தி தரும் மார்க்கம் என்று தெளிவு பெற்றதும் திருமாலிருஞ்சோலை திருத்தலத்தில்தான்! 

பரவசத்தால் மனதை நிறைக்கும் எழிலார்ந்த திருக்கோலத்தில், `சுந்தரராஜ பெருமாள்’ என்ற திருப்பெயர் ஏற்று, தேவியர் இருவரோடு அருள்பாலிக்கும் இந்தத் தலத்தில், நவகிரகங்களுக்கும் சந்நிதி அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். பெரியாழ்வாரால் இறைவனுக்குப் பல்லாண்டு பாடப்பெற்ற தலம் என்பதால், ராமாநுஜர் இந்தத் தலத்தைப் பரமபதத்துக்கு இணையான புனிதத் தலமாகப் போற்றினார்.

தைலப்பிரதிஷ்டை

கள்ளழகர் என்று போற்றப்படும் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் நிகழும் உற்சவங்களுள் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைப் பெருவிழா, மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம் வழங்கும் திருவிழா, ஆடிப்பெருவிழா, மாசிமாத பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்திருவிழா ஆகியன சிறப்பு வாய்ந்தவை. 

சுந்தரராஜப் பெருமாள் திருமேனி சுதையினால் செய்யப்பட்டது. எல்லா ஆலயங்களிலும் கருவறையில் கல்லால் செய்யப்பட்ட மூலவர் திருமேனி அமைவதில்லை. மாறாகச் சுதையாலோ மரத்தினாலோ செய்யப்படுவதும் உண்டு. ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருமேனி, காஞ்சிபுரம் பாண்டவ தூத பெருமாள் திருமேனி, சமயபுரம் அம்மன் திருமேனி, சீர்காழியில் உள்ள தோணியப்பர் திருமேனி மற்றும் அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் திருமேனி ஆகியன சுதையினால் செய்யப்பட்ட திருமேனிகளுள் சில. இந்தத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. திருமஞ்சன சேவை  உற்சவமூர்த்திகளுக்கே செய்யப்படுகின்றன. மாறாக இந்த மூல விக்கிரகங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தைலக் காப்பு செய்யப்படும். அதிலும் சுந்தரராஜ பெருமாளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே தைலக்காப்பு உற்சவம் நடைபெறும்.

அழகர்

தைலக்காப்பு என்பது சந்தனத் தைலம், அகில், பச்சை கற்பூரம் உள்ளிட்ட எட்டு வாசனைத் திரவியங்கள் சேர்த்து உருவாக்கப்படும் தைலம். இந்தத் தைலத்தைத் தயாரிக்க  20 நாள்கள் ஆகும். இதை மூலவர் திருமேனியில் சாற்றுவதே தைலக்காப்பு எனப்படுகிறது. 

ஆண்டுதோறும் தை 2-ம் நாள் தாயாருக்கு கனு திருவிழா விசேஷமாக நடைபெறும். அழகர் கோயில் வளாகத்தில் இருந்து நூபுரகங்கைக்குச் செல்லும் மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ள பெரிய திருக்குளமான `நாராயண வாவி’யில்தான் இந்த விழா நடைபெறும். இந்தத் திருக்குளத்தின் தீர்த்தத்தில்தான் கோயிலின் பரிவார தேவதைகளுக்கான அபிஷேகமும் நடைபெறும். 

அழகர் கோயில் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சனத்துக்காக நாள்தோறும் மலைமீது அமைந்துள்ள நூபுர கங்கையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்படும். சித்திரைப் பெருவிழா நாள்களில் மதுரைக்கு வந்துவிட்டபோதும் அழகர் நூபுர கங்கை தீர்த்தத்திலேயே திருமஞ்சனம் கொள்வார். மலையின் வேறு தீர்த்தங்களில் திருமஞ்சனம் செய்தால் அழகர் உருவம் கறுப்பாகிவிடும் என்பது நம்பிக்கை.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் தைலப் பிரதிஷ்டை அல்லது தைலக்காப்பு தை அமாவாசை நாளான திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறுகின்றது. இந்தத் திருநாள்களில் மூலவர் சுந்தரராஜ பெருமாளின் திருமேனிக்குத் தைலம் சாற்றப்படும். இந்தத் தைலக்காப்போடே இறைவன் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு அருள் புரிவார். 

அழகர் மலை

மூலவர்களாய் அமர்ந்து நலம் புரிகின்ற ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், விஸ்வக்சேனர், க்ஷேத்திரபாலகர்கள், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகிய ஆறு விக்கிரகங்களுக்கும் தைலம் சாற்றப்படும். இந்தத் தைலக்காப்பு தரிசனம் ஆறு மாதங்கள் அதாவது ஆடி அமாவாசை வரை நீடிக்கும். அதுவரை, திருமாலிருஞ்சோலை பெருமாளின் திருமுகத்தையும் திருவடியையும் மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். பற்றிக்கொண்டு சரணாகதி செய்ய வேண்டியது திருவடி. கண்டு இன்புற வேண்டியது இறைவனின் திருமுகம். இந்தக் காலகட்டத்தில் பக்தர்கள் மனம் ஒருமித்துத் திருவடி தரிசனம் செய்ய சகல நன்மைகளும் கிட்டும் என்பது ஐதிகம்.  

 இந்தக் காலகட்டத்தில் பெருமாளுக்கு இளநீர், தயிர்சாதம் முதலிய குளிர்ச்சியான உணவுகளே நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.  

தைலக்காப்பு உற்சவம் குறித்து திருக்கோயிலில் பெருமாளுக்கான அலங்காரப் பட்டர் வம்சத்தின் 29-வது தலைமுறையைச் சேர்ந்த அம்பி பட்டரிடம் பேசினோம். 

`ஆகமத்தின்படி, திருமேனிகள் மூவகை. ஒன்று, கற்சிலைகள், அதாவது `சிலா பேரம்’ எனப்படும். பால், வெண்ணெய் உள்ளிட்டவற்றால் திருமஞ்சனம் செய்ய உகந்தது. இரண்டாவது சுதைச் சிற்பம். அதை `சுதாபேரம்’ என்பர். இத்தகைய மூர்த்திகளுக்குத் தைலப்பிரதிஷ்டைகள் செய்யப்படுவது, வழக்கம். திருமாலிருஞ்சோலை, திருப்புல்லாணி, திருவரங்கம் தலங்களில் இவ்வகைத் திருமேனிகளே உள்ளன. மூன்றாவது, `வர்ண கலாபம்.’ மூலிகைத் திருமேனி செய்து அதில் இயற்கை வர்ணம் பூசுதல். வடபத்ரசாயி திருமேனி இவ்வகையே!’’ என்று விளக்கமளித்தார்.   


டிரெண்டிங் @ விகடன்