திருப்பதி: ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி! | Tirupaty Malaiyappaswamy ride on seven chariots on radha sabthamy

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (06/02/2019)

கடைசி தொடர்பு:17:20 (06/02/2019)

திருப்பதி: ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி!

திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்ஸவ விழா மிகவும் விசேஷமானது. இந்த பிரம்மோற்ஸவத்தின்போது, சர்வ அலங்காரங்களுடன் மலையப்பசுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருமலையின் நான்கு மாட வீதிகளில், வீதி உலா வருவார். திரளான பக்தர்கள் தரிசித்து மகிழ்வார்கள்.

திருப்பதி

இந்த வைபவத்தின்போது தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி, வீதியுலா வருவார். ஆனால், ஒரே நாளில் 7 வாகனங்களிலும் வீதி உலா வருவதைக் காணும் வாய்ப்பு ஆண்டுக்கொரு முறை வரும் ரத சப்தமி நாளில்தான் நிகழும். வருகிற 12 -ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ரத சப்தமி என்பதால், திருமலையில் தேவஸ்தானம் சார்பில் அதற்கான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டு வருகின்றன. இதை `உப பிரம்மோற்ஸவம்' என்றே அழைக்கிறார்கள். 

சூர்ய பிரபை வாகனம்

சூரிய பிரபை வாகனம் முதல் வாகனமாகப் புறப்பட மற்ற வாகனங்கள் அதைப் பின்தொடர்ந்து வருகின்றன.  
வாகனங்கள் வீதி உலா புறப்படும் நேரம்:

சூரிய பிரபை வாகனம் காலை 5.30 மணி முதல் 8.00 மணி 

சின்னசேஷ வாகனம் காலை 9 மணி முதல் 10.00 மணி

கருட வாகனம் பகல் 11.00 மணி முதல் பகல் 12.00 மணி

அனுமன் வாகனம் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி 

கற்பகவிருட்சம் வாகனம் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி 

சர்வ பூபாள வாகனம் மாலை 6.00 மணி முதல் 7.00 மணி 

சந்திர பிரபை வாகனம் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி 

சூரியனை ஆராதிக்கும் இந்தத் திருநாளில் சூரிய பகவானின் அதிதேவனான நாராயணனும் கொண்டாடப்படுகிறார். அதனால்தான் திருமலை திருப்பதியில் இந்த நாளில் `ஒரு நாள் பிரமோற்சவ விழா' நடத்தப்படுகிறது. புரட்டாசி பிரமோற்சவத்தைக் காண தவறியவர்கள் இந்த ஒரு நாள் ரத சப்தமி பிரமோற்சவத்தைக் கண்டு மகிழ்வார்கள்.

கற்பகவிருட்ச வாகனம்

பக்தர்களின் வருகையை முன்னிட்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக உணவு, நீர் மோர், குடிநீர் ஆகியவை அதிக அளவில் வழங்குவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ரத சப்தமிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவைகளான அஷ்டதள பாத சேவை, கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்ஸவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், தினமும் அதிகாலையில் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை ஆகிய சேவைகள் வழக்கம் போல் நடைபெறும். முதியோர், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வருபவர்களுக்கான இலவசச் சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க