நாகூர் தர்காவின் 462-வது கந்தூரி திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது! | nagur dargah kandoori festival starts at nagai

வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:52 (07/02/2019)

நாகூர் தர்காவின் 462-வது கந்தூரி திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது!

நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று (பிப்ரவரி 6) வெகு சிறப்பாக நடைபெற்றது.

நாகூர் தர்கா

உலகப் புகழ் பெற்ற தர்காக்களுள் ஒன்றாக விளங்கும், நாகை மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்கா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தத் தர்காவில் நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் சாகுல் ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தர்காவின் 462-ம் ஆண்டு கந்தூரி விழா பிப்ரவரி 6-ல் தொடங்கி, பிப்ரவரி 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தர்கா

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நாகை பேய்க்குளம் பகுதியிலிருந்து தொடங்கிய கொடி ஊர்வலம், பாரம்பர்யமான பாதைகளின் வழியே தர்கா அலங்கார வாசலை அடைந்தது. பாரம்பர்ய முறைப்படியான வழிபாடுகள் நடத்தப்பட்டு இரவு 9 மணிக்குத் தர்கா மனோராக்களில் கந்தூரி விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்கா

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக் கூடு ஊர்வலம் பிப்ரவரி 15-ம் தேதி இரவு நாகையிலிருந்து தொடங்கி, 16-ம் தேதி காலை நாகூரில் நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து, நாகூர் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

தர்கா

மதங்களைக் கடந்து மனிதம் போற்றும் வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றத்தில் திரளானோர் பங்கேற்றனர். விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நாகை மாவட்டக் காவல் துறை சார்பில் சுமார் 800-க்கும் அதிகமான போலீஸாரும், 200-க்கும் அதிகமான ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.