கல்விக்கடவுள் சரஸ்வதியை வணங்க உகந்த வசந்தபஞ்சமி | vasanth panchami saraswathi pooja

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (08/02/2019)

கடைசி தொடர்பு:21:20 (08/02/2019)

கல்விக்கடவுள் சரஸ்வதியை வணங்க உகந்த வசந்தபஞ்சமி

நாளை தை மாத வளர்பிறை பஞ்சமி திதி. இந்த நாள் வட இந்தியாவில் 'வசந்தபஞ்சமி' என சரஸ்வதியை வழிபாடு செய்யும் நாளாகக்  கொண்டாடப்படுகிறது.

வசந்தபஞ்சமி

நவராத்திரி என்பது அன்னை அம்பிகையை வழிபடும் விழா. ஓர் ஆண்டில்  சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி, வாராஹி நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி என நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. தை மாத வளர்பிறை நாள்களில், வட இந்தியாவில் சியாமளா நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை 9.2.19 அன்று வசந்த பஞ்சமி நாள் கொண்டாடப்படுகிறது. இது, தமிழகத்தில் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் 'சரஸ்வதி பூஜை'யைப் போன்றது.

அன்னை சரஸ்வதி, இந்த நாளில்தான் அவதாரம் எடுத்ததாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் சரஸ்வதி தேவியைப் பூஜைசெய்து வழிபடக் கல்வி சிறக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில்தான் வடமாநிலங்களில் குழந்தைகளை முதன் முதலில் கல்விச் சாலையில் கொண்டுசேர்க்க விரும்புகின்றனர். பென்சில், பேனா, புத்தகங்கள், இசைக்கருவிகள், தொழில் தொடர்பான சிறுசிறு கருவிகளைக் குழந்தைகளுக்கு முன்பாகக் கொட்டிவைப்பர். அதில், குழந்தைகள் எதைத் தேர்ந்தெடுக்கின்றனரோ அதில் பிற்காலத்தில் சிறந்து விளங்குவர் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்த நாளில், மஞ்சள் நிறத்தில் அன்னையை அலங்காரம்செய்து மஞ்சள் மலர்களால் மாலை சூட்டி மகிழ்வர். எனவே, நாளை கலைமகளை வழிபாடுசெய்து கல்வியில் மேன்மைபெறுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க