1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கடம்பூர் கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்! | kumbabisheham at kadambur temple

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (09/02/2019)

கடைசி தொடர்பு:21:40 (09/02/2019)

1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கடம்பூர் கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்!

மறைமலைநகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது  கடம்பூர் கிராமம். இங்குள்ள கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கடம்பூர் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் நாளை (10.2.19) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

கும்பாபிஷேகம்


இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை கோயில் இருக்கும் அந்தப் பகுதி ஒரு காடாக இருந்தது. சிதிலமடைந்து கிடக்கும் கூரையற்ற ஒரே ஒரு கல்கட்டுமானம் மட்டுமே அங்கு இருந்தது. தனித்து யாரும் அங்கே செல்வதில்லை. காரணம்  ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் இருந்தன. சர்வசாதாரணமாகப் பாம்புகள் அங்கு நடமாடும். துணிந்து சிதிலமடைந்திருக்கும் ஆலயத்துக்குள் செல்பவர்கள் சிவலிங்கமூர்த்தியை தரிசிக்கலாம். 

நந்தி

கோயிலில் இருந்த சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் கொண்டு அதன் தொன்மையை அறிந்த சிவனடியார்கள் வழிபாடின்றி ஈசன் இருப்பதை எண்ணி மனம் வருந்தினர். மாதத்துக்கு இருமுறை பிரதோஷ நாள்களில் மட்டும் வந்து இடத்தைத் தூய்மை செய்து வழிபட்டுவந்தனர். அதன் பிறகு தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து இந்தக் கோயிலின் காலம் குறித்துச் சொன்னார்கள். 

ஜேஷ்டா


கல்வெட்டுச் செய்திகளின் படி அந்த ஆலயம் கிருஷ்ணதேவராயர் காலமான 15-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. கோயிலில் இருந்த ஜேஷ்டாதேவியின் சிலையை வைத்து ஆலயத்தின் தொன்மையைக் கணக்கிட்டனர். ஜேஷ்டாதேவியின் சிலை அமைப்பு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. எனவே இந்தக் கோயில் பல்லவர் காலத்திலேயே கட்டப்பட்டதாக இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்தனர்.

கல்வெட்டு


இந்து அறநிலையத் துறையின் உதவியோடு ஊர்மக்கள் மற்றும் பிற நன்கொடையாளர்களின் உதவியுடன் ஆலயம் சீரமைக்கப்பட்டுப் பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆலயம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு பரிவார தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தற்போது கோயிலில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. நாளை (10.2.19) காலை ஸ்ரீபாலாம்பிகை சமேத கைலாசநாதர் சந்நிதிகளுக்கும் பரிவார தேவதைகளின் சந்நிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  மக்களின் வசதிக்காக மறைமலை நகர் ரயில் நிலையத்திலிருந்து வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே மக்கள் திரளாகக் கலந்துகொண்டு இறைவன் அருள்பெறுமாறு கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க