திருவாவடுதுறை ஆதீனத்தில் மகரத்தலைநாள் பட்டணப்பிரவேசம்; குருபூஜை நிறைவு | thiruvavaduthurai aadhinam guru poojai ends today

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (11/02/2019)

கடைசி தொடர்பு:14:00 (11/02/2019)

திருவாவடுதுறை ஆதீனத்தில் மகரத்தலைநாள் பட்டணப்பிரவேசம்; குருபூஜை நிறைவு

திருநந்திதேவர் தோற்றுவித்த திருக்கயிலாயப் பரம்பரையில் தோன்றியவர் திருவாவடுதுறையின் ஆதீன குருமுதல்வர் ஶ்ரீநமசிவாய மூர்த்தி.  ஶ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளின் மகரத் தலைநாள் குருபூஜை ஒவ்வோர் ஆண்டும் தை மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று நடைபெறும். இதையொட்டி திருவாடுதுறை ஆதீனத்தில் 10 நாள் குருபூஜை  கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருபூஜை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

குருபூஜை


குருமகா சந்நிதானம், 3.2.19 அன்று அனுக்ஞை சங்கல்பம் செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து சிவசூரியப்பெருமான் ஆலயத்தில் உற்சவ பூர்வாங்க பூஜை நிகழ்ந்தது. 

கடந்த ஒன்பது நாள்களும் ஒவ்வொரு வைபவம் நடைபெற்றது. பஞ்சமூர்த்திகள் எனப்படும் சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோர் மஞ்சம், சந்திரபிரபை, சூரியபிரபை, கற்பகவிருட்சம் ஆகிய வாகனங்களில் திருவீதி உலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ திருஞானசம்பந்த பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளல் ஐந்தாம் திருநாள் அன்று நடைபெற்றது. குருமகா சந்நிதானம் சந்நிதியில்  ‘இடரினும் தளரினும்’ எனத் தொடங்கும் பொன் உலவாக்கிழி திருப்பதிகம் பாடியபின் ஞானசம்பந்த பெருமான்  'பொன் உலவாக்கிழி’ பெறும் வைபவம் அரங்கேறியது. 

வைபவத்தின் ஆறு மற்றும் ஏழாம் நாள் அன்று வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானம் மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு.சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு நமசிவாய மூர்த்திகளை தரிசித்தனர். குருபூஜையின் இறுதி நாளான இன்று, ஸ்ரீலஸ்ரீ குருமாக சந்நிதானம், தம்பிரான் சுவாமிகள் சிவிகாரோஹனம் செய்து பட்டணப்பிரவேசம் எழுந்தருளி சிவஞானக் கொலு காட்சியில் அருட்பிரசாதம் வழங்குகிறார்.  

குருபூஜை படங்களைக் காண்ட இங்கே க்ளிக் செய்யவும்.