மகா சிவராத்திரி, மகம்... மாசி மாத விழாக்கள் விசேஷங்கள்! | This article is about Masi Month and its special days

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (12/02/2019)

கடைசி தொடர்பு:18:21 (12/02/2019)

மகா சிவராத்திரி, மகம்... மாசி மாத விழாக்கள் விசேஷங்கள்!

மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை, சந்திர தரிசனம் போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன. மாசி மாத விழாக்கள் குறித்தும், அதன் அற்புதங்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்...

மகா சிவராத்திரி, மகம்... மாசி மாத விழாக்கள் விசேஷங்கள்!

மாதங்களில் மகத்துவம் நிறைந்தது மாசி மாதம். மாசி மாதத்தினை `கும்ப மாதம்’ என்றும் அழைப்பார்கள். புனிதம் நிறைந்த இந்த மாதத்தில், இறை மூர்த்தங்களைக் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சேவை நிகழ்த்த ஏற்ற மாதமாகவும் கருதப்படுகிறது. இதனால்தான் இந்த மாதம், `கடலாடும் மாதம்’ என்று கூட அழைக்கப்படுகிறது. இந்திரன் மாசி மாதத்தில் நதியில் நீராடித்தான் நற்கதி பெற்றான் என்று ஸ்கந்த புராணம் தெரிவிக்கிறது. திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மேற்கொள்வதற்கும் உபநயனம், கலை, வேதம் முதலானவற்றைத் தொடங்குவதற்கும் மாசி மாதம் உகந்தது. மாசி மாதத்தில் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு நற்பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. 

சிவலிங்கம்

மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை, சந்திர தரிசனம் போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன. மாசி மாத விழாக்கள் குறித்தும், அதன் அற்புதங்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்..

கார்த்திகை விரதம் 13.2.19

முருகனை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம் கார்த்திகை விரதம். மாசி மாத கார்த்திகை விரதம் மற்ற மாத விரதங்களை விடவும் அதிக பலன்களை அளிக்கக் கூடியது. இதனால் செல்வம், நிம்மதியான வாழ்வு, கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு ஆகியன கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏகாதசி 15.2.19 / 2.3.19

விஷ்ணு பகவானுக்கு உரிய விரதங்களில் மகிமை வாய்ந்தது `ஏகாதசி விரதம்’. மாசி மாதம் வளர்பிறையில் (15.2.19) வரும் இந்த ஏகாதசி ஜெயா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அதே போன்று 2.3.19 அன்று தேய்பிறையில் வரும் ஏகாதசி விஜயா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசி தினங்களில் பகவான் விஷ்ணுவை விரதமிருந்து வழிபட்டால், வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாசி மகம்

மாசி மகம் / பௌர்ணமி 19.2.19

மாசி மாதத்தில் பௌர்ணமியும், மக நட்சத்திரமும் இணைந்து வரும் புண்ணிய நாளே மாசி மகம். மாசி மகத்தன்று நீராடினால் பிறவி என்னும் பெருங்கடலைக் கடந்து இறைவனைச் சென்றடையலாம் என்பது நம்பிக்கை. இன்றைய தினத்தில்தான் `கடலாடும் விழா’ கொண்டாடப்படுகிறது. விரதமிருந்து கடலில் நீராடி இறைவனை வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இறை வழிபாட்டிற்கு உகந்த நாளாக மாசிமகம் விளங்குகிறது.

ராம கிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம் 20.2.19

கொல்கத்தாவில் பிறந்து இந்தியாவுக்கே ஆன்மிக ஒளி ஊட்டியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்னார் அவதரித்த தினம் பிப்ரவரி 20 -ம் தேதியாகும். 

பிரதோஷம் 17.2.19 / 3.3.19

சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள் பிரதோஷ காலமாகும். பிரதோஷமன்று விரதமிருந்து வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. மாசி மாத பிரதோஷ தினங்களில் கோயில் சென்று வழிபட்டால் 108 முறை சிவபூஜை செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகம், சிவராத்திரி

சிவராத்திரி 4.3.19

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகாசிவராத்திரி. சர்வ மங்கலங்களையும் அருளும் அற்புதமான திருநாள் இது. இந்த நாளில் இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். இரவு முழுவதும் கண்விழித்து சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு சிவ வழிபாடு செய்ய அனைத்து நற்பலன்களும் வந்து சேரும். மாதாந்திர சிவராத்திரிகளில் இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் மகாசிவராத்திரியன்று வழிபட்டால் ஆண்டுதோறும் சிவபெருமானை வழிபட்ட புண்ணிய பலன் கிட்டும். 

வாஸ்து நாள் 6.3.19

பூமி தொடர்பான பூஜைகள் செய்வதற்கு உகந்த தினம் இன்று. காலை மணி 10.32 முதல் 11.08 வரை பூமி பூஜைகள் செய்வதற்கு உகந்த நேரமாகும். ஶ்ரீவிளம்பி வருடத்தின் கடைசி வாஸ்து நாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வ அமாவாசை 6.3.19  

6.3.19 அன்று மாசி மாத சர்வ அமாவாசை. அமாவாசை தினங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாள்களே. ஆனபோதும் ஆடி, புரட்டாசி, தை, மாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் புண்ணிய பலன் தரக்கூடியது என்று நம்பப்படுகிறது. அமாவாசை அன்று புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கக் கூடுதல் பலன்களைப் பெறலாம். முன்னோர்களின் ஆசி, பாவங்கள் அனைத்திலுமிருந்து நம்மைக் காத்து சகல நலன்களையும் அருளும். 

அங்காளம்மன் ஆலயங்களில் மாசி மாத அமாவாசை அன்று நடைபெறும் மயானக் கொள்ளை பிரசித்திபெற்றது.

சந்திர தரிசனம்

சந்திர தரிசனம் 9.3.19

மூன்றாம் பிறையைத் `தெய்விக பிறை’ எனலாம். இதைத்தான் சிவபெருமான் தனது சடையில் சூடியிருக்கிறார். அதுவும் மாசிமாத மூன்றாம் பிறையைக் காண்பது நல்லது. மூன்றாம் பிறையைக் கண்டால் மன நிறைவு, பேரானந்தம், மன அமைதி ஆகியவை கிட்டும். துயரங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்