திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழா கோலாகலம்! | Rahu ketupeyarchi function held at thirunageswaram Sri naganathaswamy temple

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (13/02/2019)

கடைசி தொடர்பு:19:01 (13/02/2019)

திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழா கோலாகலம்!

திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி கோயிலில் இன்று ராகு பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நவகிரகங்களுள் முதன்மையானவராகத் திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியர்களுடன் மங்கள ராகுவாக இக்கோயிலில் தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள ராகு பகவானின் திருமேனியில் பாலினால் அபிஷேகம் செய்யும்போது அந்தப் பால் நீல நிறமாக மாறுவது பக்தர்களுக்கு வியப்பூட்டும் நிகழ்வாகும். 

ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பின்னோக்கி நகர்வார். இந்த நிகழ்வு ராகுப் பெயர்ச்சி எனப்படுகிறது. அதன்படி இன்று மதியம் 1.24 மணிக்கு ராகுபகவான் கடக ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை முதற்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து நாளை (14-ம் தேதி முதல்) 16-ம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

ராகுப் பெயர்ச்சி விழா  கடந்த 11-ம் தேதி கணபதிஹோமத்துடன் தொடங்கி, யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று பகல் 12.00 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. அதன் பின், மஞ்சள், சந்தனம், திரவியம், பன்னீர் போன்ற திரவியங்களால் மகா அபிஷேகமும் சிறப்பு பாலபிஷேகமும் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடும் நடைபெறவுள்ளது.

ராகுப் பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள பெருமளவில் குவிந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டனர். திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்தில், ராகுப் பெயர்ச்சியை முன்னிட்டு நாகநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.